வாகரை ஆதி வாசிகள் | தினகரன்

வாகரை ஆதி வாசிகள்

வாகரையிலிருந்து குஞ்ஞான் குளத்துக்கு செல்லும் பயணம் மிகவும் ஆபத்து நிறைந்தது. பாதையின் இருபுறமும் அடர்ந்த காடு இருட்டில் காட்டின் தன்மை என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை. மழைக்காலத்தில் இப் பாதையில் பயணம் செய்வது எவ்வளவு சிரமம் என்பதை எமது வாகனத்தின் ஒளியில் முன்னே உள்ள குழிகளின் நீள அகலத்தை காண முடியாததிலிருந்து புரிந்து கொண்டோம். பல மாதங்களாக மழை காணாத பூமி வரண்டு கிடந்தது. அந்த இரவிலும் மேலெழும்பிய புழுதி எம்மை மூச்சு முட்டச் செய்தது. எப்போது எமது பாதையில் யானைகள் குறுக்கீடு செய்யும் என்ற பயத்துடனேயே பயணம் செய்தோம். ஆனால்,அந்த இரவிலும் அங்கு பயணம் செய்யும் இராணுவ வீரர்கள் எம்மை தைரியப்படுத்தினார்கள்.

யானைகளைக் கண்டால் நாம் உடனடியாக வாகனங்களை நிறுத்தி விட்டு அவை அவ்விடத்தி லிருந்து அகலும் வரை நாம் அமைதியாக காத்திருப்போம். அவற்றிற்கு எவ்வித பாதிப்பும் இல்லை யென தெரிந்தவுடன் அவை அவ்விடத்தை விட்டு அகன்று விடும். இவ்வாறு யானைகளைப் பற்றி மட்டுமல்ல பலவித மிருகங்களைப் பற்றிய விபரங்களை செவிமடுத்துக் கொண்டே எமது பயணத்தை தொடர்ந்தோம். நாங்கள் வாகரையிலிருந்து இருபது கிலோ மீற்றர் பயணித்திருந்தோம். இறுதியில் நாம் செல்ல வேண்டிய இடத்தை அடைந்தோம். தலைவரின் வீடு இங்குதான் இருக்கின்றது. எனக் கூறிக் கொண்டு ஒரு பெரிய மரத்தின் கீழ் வாகனத்தை நிறுத்தினார். இருட்டில் எதுவும் தெரியவில்லை. தீடிரென காட்டைக் கிழித்துக் கொண்டு பெரிய சத்தமொன்று கேட்டது. அதனோடு மேள சத்தமும் கேட்கக் தொடங்கியது.

'இன்று இங்கு சங்கதி பூஜை' என்று கூறியவாறு எம்மை ஆதி வாசிகளின் தலைவர் வேலாயுதம் வரவேற்றார்.

சிறிய ஒளியில் ஆண்கள் பெண்கள் புடைசூழ இளைஞரொருவர் வேல் பூட்டி காவடி எடுத்தவாறு காட்டு தெய்வத்துக்கு பூஜை செய்ய வந்து கொண்டிருந்தார். காட்டுக் கடவுள் எழுந்தருளியிருக்கும் இடத்திற்கு வந்தவுடன் இளைஞன் சாமியாடத் தொடங்கினான். எல்லோரும் அவ் இளைஞரை சுற்றி இருந்தார்கள். ஒரு மணித்தியாலயத்துக்குப் பிறகு அந்த இடம் மெது மெதுவே அமைதியடைந்தது.

'இன்னும் சிறிது நேரத்தில் தான் பூஜை நடக்கும். அதுவரை நாம் பேசலாம் வந்து அமருங்கள்' என்று வாகரை கடல் ஆதி வாசித் தலைவர் அவரது திண்ணைக்கு அழைத்துச் சென்று அமரச் செய்தார். அரை இருட்டான அந்த இடத்தில் நாம் கலந்துரையாடலை ஆரம்பித்தோம்.

'யுத்த காலத்தில் நாம் இருபுறமும் பாதிப்படைந்தோம். ஆனால் நாம் சிங்கள வேடுவர்களே. கடற்கரையையொட்டியே வாழ்கின்றோம். நான் பிறந்த ஊர் மாங்காணி நாம் காட்டை அழித்து சேனைப் பயிர் செய்தே வாழ்க்கை நடத்தினோம். ஒரு வருடத்துக்கு ஒரு இடத்தில்தான் பயிர் செய்வோம். இந்த கிராமத்தின் பெயர் குஞ்ஞான குளம் இங்கு அறுபத்தி மூன்று குடும்பங்கள் வசிக்கின்றன. இன்னும் நான்கு ஆதிவாசி கிராமங்கள் உள்ளன. மதுரங்காணிகுளம், கிரமிச்சகுளம், துலைச்சி, கோச்சல் என்பனவே அவையாகும். கிழக்கிலும் ஆதி வாசி கிராமங்கள் உள்ளன. நாம் மீன் பிடிப்போம், காட்டிற்குச் செல்வோம்

'தேன் சேகரிப்போம். இவற்றின் மூலமே நாம் வாழ்க்கையை நடத்துகின்றோம்' என தங்களது வாழ்க்கையைப் பற்றி ஆதிவாசி தலைவர் கூறினார். ஆதி வாசிகள் என்றதுமே எமது ஞாபகத்தில் வருவது தம்பானே ஆதிவாசிகள் தான். இல்லையென்றால் பொல்லபெந்த ஆதிவாசிகள் பற்றி அறிவோம். நாம் எமது நாட்டில் வசிக்கும் கடல் ஆதிவாசிகள் பற்றி யுத்தம் முடிந்த பின்னர்தான் புதிதாக அறிந்து கொண்டுள்ளோம். இரண்டாயிரத்து பதினொன்றில் தான் நாம் அவர்களைப் பற்றி அறிந்து கொண்டோம். நாட்டின் மத்தியில் வசிக்கும் ஆதிவாசிகளை விட இவர்கள் பல பிரச்சினை களுக்கு மத்தியிலேயே வாழ்கின்றார்கள்.

இங்கு வாழும் பெண்களின் சிலருக்கு கணவன்மார் இல்லை. சிலர் மரணமடைந்துள்ளார்கள். அல்லது கைவிட்டு சென்றுள்ளார்கள். இதனால் அவர்கள் பிள்ளைகளை பராமரிக்க மிகவும் சிரமப்படுகின்றார்கள். ஆதிவாசிப் பிள்ளைகள் கல்விகற்க மதுரம்குளிக்கே செல்கின்றார்கள். ஆதிவாசிகள் வசிக்கும் குஞ்ஞன்குளத்துக்கு பஸ் வசதிகள் இல்லை. மதுரம்காணியிலிருந்து வாழைச்சேனைக்கு செல்லும் பஸ் வண்டி வெள்ளி, சனி, ஞாயிறு அப்பாதையில் செல்லாது. மாகாணத்தில் வாழும் ஆதி வாசிகளின் தலைவராக இல்லையின் ஆதிவாசிகளின் தலைவரான தபான ஆதிவாசி தலைவர் வன்னிலே எத்தா ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறுகின்றார்கள்.

ஆனாலும் இவர்களின் பழக்க வழக்கங்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டது. பல கிராமங்களுக்கு தலைவரான வேலாயுதம் ஒவ்வொரு கிராமத்துக்கும் தலைவரொருவரை நியமித்துள்ளார். அவ்வாறு கிழக்கு மாகாண கிராமத்துக்கு சின்னத்தம்பி என்னும் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது கடமைகள் பற்றி பின்வருமாறு கூறினார்.

'நான் எனது கிராம மக்களின் பிரச்சினைகளை தலைவரிடம் வந்து கூறுவேன். அதேபோல் அரச நிறுவனங்களிடமும் எடுத்துச் செல்வேன். நாம் ஆதிவாசிகளாயினும் எமக்கு கிடைக்க வேண்டிய இடம் இன்னும் கிடைக்கவில்லை. நாம் தமிழர்கள் அல்ல. நாம் சிங்களவர்கள், நாம் நீண்ட காலம் தமிழர்களுடன் வாழ்ந்ததால் தான் தமிழராக உள்ளோம். எங்களது பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் தமிழர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. முடியுமென்றால் அதை திருத்தி தாருங்கள் என கவலையுடன் தெரிவித்தார்.

பிறந்ததிலிருந்து மரணம் வரை இவர்களின் பழக்க வழக்கங்கள் மாறுபட்டவையாகும். குழந்தை பிறந்தவுடன் முதலில் தலைவருக்குத்தான் அறிவிப்பார்கள். குழந்தைக்கு தலைவர்தான் பெயர் சூட்டுவார். தற்போது பெற்றோர்கள் குழந்தையின் பெயர் என்னவென்று தலைவரிடம் அறிவிக்கின்றார்கள்.

அவர்களின் திருமணம் பற்றி ஆதிவாசி தலைவர் குறிப்பிடும் போது முன்னர் திருமணத்தை பதிவு செய்வதில்லை. தற்போது பதிவு செய்கின்றோம். எமது இனத்திலிருந்து விலகி சென்று திருமணம் செய்வது மிகக் குறைவு. கால மாற்றத்தால் தாங்கள் ஆதிவாசிகள் என்று சிலர் கூறவிரும்புவதில்லை. ஒருவர் திருமணம் முடிப்பதென்றால் தலைவருக்கு அறியத் தரவேண்டும்.

யாரேனும் மரணமடைந்தால் முடியுமென்றால் பெட்டியொன்றை செய்வோம். இல்லையென்றால் காட்டு மரக் கிளைகளினால் ஆன பெட்டியை செய்வோம். இறந்தவர் பூசாரியின் உடலில் புகுந்து ஆடுவார். பிரேத உடலை அடக்கம் செய்தபின் சோறு சமைத்து தேங்காய் பாலும் சீனுயும் வைப்போம். பூசாரி ஆவேசமாக அதன் வாசனையை நுகர்வார். அதன் பின்னர் மூன்றாம் நாள் பால்சோற்றுடன் பழங்களையும் வைப்போம்.

மீண்டும் ஏழாம் நாள் பால்சோறு சமைத்து ஏழு தூண்களை நாட்டி ஏழு கம்புகளை வைத்து ஏழுவித பழங்கள், ஏழுவித பலகாரங்கள் வைத்து படைப்போம். முப்பத்தியோராம் நாள் சைவ உணவு சமைத்து கிராமத்துக்கு தானம் வழங்குவோம். இதன் மூலமே இறந்த ஆத்மாவை சாந்தியடைய செய்கின்றோம்Ó என்று தங்களது பழக்க வழக்கங்கள் பற்றி வேலாயுதம் கூறினார்.

நேரம் நள்ளிரவாகியது. அங்குள்ள பெண்கள் அழகாக சேலையணிந்து அங்குமிங்கும் உலா வந்தார்கள். தலைவர் எங்களை பூஜை நடக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றார். வெருகல் ஆறு மற்றும் கிழக்கு மாகாண ஆதி வாசி குடும்பங்களைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் குழந்தைகளுக்கு அங்கு விரிக்கப்பட்டிருந்த பாய்களில் அமர்ந்திருந்தார்கள்.

நடப்பதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மேள சத்தம் அதிகமாகியது. தென்னை ஓலைகளை ஆடைபோன்று அணிந்துகொண்டு பூசாரி ஆவேசமாகி ஆடிக் கொண்டிருந்தார். அவரை ஏனையோர் விழுந்து விடாமல் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

இறுதியில் அவர் ஆவேசம் தணிந்தவராக பூத்தட்டுகளை தயாரிக்கத் தொடங்கினார். இன்னுமொரு இடத்தில் கடவுளை வழிபட காட்டிலிருந்து கொண்டு வந்த நீண்ட தடியொன்றுக்கு வேப்பிலையால் அலங்காரம் செய்திருந்தார்கள். அதனருகில் திரையால் மறைத்து வேப்பிலையை கொண்டு கரடிபொம்மை ஒன்றை செய்து வைத்திருந்தார்கள். இறுதியில் பூசாரி அந்த கரடி போன்ற உருவத்தில் ஏறி கடவுளிடம் காட்டு மிருகங்களால் எவ்வித ஆபத்தும் இடம்பெறக் கூடாது என இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்.

இவை அனைத்தும் திறந்தவெளியில் நடைபெறவதோடு கோயிலின் உள்ளே தாமரை மலர் இதழ்களால் பத்தினி தெய்வம் வழிபாடும் நடைபெற்றது.

விடியும் வரை உணவு தயாரிக்கும் பணிகளிலும் பலர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். இளம் பெண்கள் தங்கள் எதிர்கால துணைவரை அங்கு காணலாமா என காத்திருக்கின்றார்கள். இதேவேளை சிறிய கடைகளும் காணப்பட்டன. அன்றைய தினம் அவர்களுக்கு களியாட்ட தினமாகவும் இருந்தது. இது மாத்திரமே நாம் கொண்டாடும் திருவிழாவாகும். தலதாமாளிகை, கதிர்காமம் போன்ற புண்ணிய தலங்களுக்கும் செல்வோம். அதேபோல் உலக ஆதிவாசி தின கொண்டாட்டத்திலும் பங்குபற்றுவோம் எனக் கூறினார்.

தற்போதைய ஆதிவாசி தலைவர் வேலாயுதத்துக்குப் பின்னர் அவரது மகனே தலைமை தாங்குவார். ஆனால், தற்போதைய ஆதிவாசி தலைவருக்கு இளைய சகோதரரொருவர் இருப்பதால் அவரே அடுத்த தலைவராவார்.

தற்போது கிழக்கு மாகாணத்தில் வரட்சி நிலவுவதால் அவர்களுக்கு 233 படையணி தலைமையகம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் கடல் ஆதிவாசிகளை காணச் சென்ற போது தற்செயலாக அவர்களின் வருடாந்த உற்சவத்திலும் கலந்து கொண்டது புதிய அனுபவமாகும்.

மிருகங்கள் வாழும், வனத்தில் சம்பிரதாய பழக்க வழக்கங்களை பின்பற்றும் இன்னும் பேய் பிசாசுகளை நம்பும் இவர்கள் தங்களது உரிமையைப் பாதுகாக்க முயற்சி செய்கின்றார்கள். 'ஆதிவாசிகள் எனக் கூறிக் கொள்வதில் நாம் பெருமை அடைகின்றோம்.

எமது பிள்ளைகளின் பிறந்த அத்தாட்சிப் பத்திரத்தில் சிங்கள ஆதிவாசிகள் என குறிப்பிடபடவேண்டும் நாம் அதற்காக போராடுவோம்Ó காட்டுக் கிராம கடல் ஆதிவாசிகளின் விழாவை சுதந்திரமாக கொண்டாட வழிவிட்டு நாம் அங்கிருந்து கிளம்பினோம். இந்த மக்களின் அபூர்வமான வாழ்க்கை முறையை எண்ணியபடி எமது பயணத்தை தொடர்ந்தோம்.

இனோகா சமரவிக்ரம
தமிழில்: வீ. ஆர். வயலட்

 


Add new comment

Or log in with...