Friday, April 26, 2024
Home » இலங்கையின் முதலாவது கடற்றொழில் முதலீட்டு வலயம்

இலங்கையின் முதலாவது கடற்றொழில் முதலீட்டு வலயம்

by Rizwan Segu Mohideen
October 20, 2023 6:01 am 0 comment

இலங்கையானது இந்து சமுத்திரத்தில் அமைந்திருக்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாகும். நாலாபுறமும் கடலால் சூழப்பட்டுள்ள இந்நாடு கடல் வளத்தையும் சொந்தமாகக் கொண்டுள்ளது. கடலானது நிலத்தைப் போன்று இயற்கையாகவே எண்ணிறைந்த வளங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

இருந்த போதிலும் இலங்கைக்கு சொந்தமான கடல் பரப்பில் காணப்படும் வளங்களில் பெரும்பகுதி இன்னும் பயன்படுத்தப்படாத நிலையிலேயே காணப்படுகிறது. இற்றைவரையும் இந்நாட்டைச் சூழவுள்ள மீன்வளம்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது. இக்கடற்பரப்பில் பாரியளவு மீன்வளம் காணப்படுகிறது. அதனால் இக்கைத்தொழில் துறையில் 2.4 மில்லியன் மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொண்டுள்ளனர். அதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்திற்கு இந்நாட்டு கடற்றொழில்துறை குறிப்பிடத்தக்க பங்களிப்பை நல்கி வருகின்றது. அதுவே பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும்.

ஆனால் கடலில் மீன்களுக்கு அப்பால் பல்வேறு வளங்கள் இயற்கையாகவே காணப்படுகின்றன. இருந்த போதிலும் அந்த வளங்களை நாட்டின் பொருளாதார நலன்களுக்குப் பயன்படுத்திக் கொள்வது குறித்து போதியளவில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால் நாடென்ற வகையில் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைவதற்கு கடல்வளத்தையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். கடல்வளத்தைப் பயன்படுத்தி பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ள பல நாடுகள் உலகில் உள்ளன. எமது அயல்நாடான மாலைதீவின் பொருளாதாரத்தின் அடித்தளமே கடல்வளத்தில்தான் அமைந்துள்ளது.

எனினும் தமக்குச் சொந்தமான நிலத்திலும் கடலிலும் இயற்கையாகவே வளங்கள் நிரம்பப் பெற்று இருந்தும் கூட இலங்கை கடந்த வருடத்தின் ஆரம்பப் பகுதியில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்தது. ஆன போதிலும் அந்த நெருக்கடியில் இருந்து விரைவாக மீட்சி பெறும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துவரும் பொருளாதார மேம்பாட்டு வேலைத்திட்டங்களின் பயனாக நாடு மீட்சி பெற்று தற்போது மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்திருக்கிறது.

நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பவென பரந்த அடிப்படையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில், நாட்டின் நாலாபுறமும் கடலில் காணப்படும் வளங்களையும் பயன்படுத்திக் கொள்ளத் தவறலாகாது. இவ்வளங்களையும் பொருளாதார மேம்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ளும் போது நாட்டின் பொருளாதார மேம்பாடு துரிதமடையும். பொருளாதாரம் பல முறையில் கட்டியெழுப்பப்படுவதற்கும் பக்கத்துணையாக அமையும்.

இவ்வாறான சூழலில் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு நாட்டைச் சூழவுள்ள கடல் வளத்தைப் பயன்படுத்திக் கொள்வதன் முக்கியத்துவமும் தற்போது உணரப்பட்டிருக்கிறது. அதன் வெளிப்பாடாக வடமாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு கடற்றொழிலுக்கென தனியான முதலீட்டு வலயமொன்றை அமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

கடற்றொழிலை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் அமைக்கப்படவிருக்கும் முதலாவது முதலீட்டு வலயமாகவே இது விளங்குகிறது. இவ்வலயமானது இந்நாட்டின் கடற்றொழில் துறையில் ஒரு திருப்புமுனையாக அமையும். இந்நாட்டின் கடற்றொழில்துறையின் மறுமலர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இவ்வலயம் பின்புலமாக அமையும். குறிப்பாக இந்நாட்டு கடற்றொழில் கைத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட பல வகையான முதலீடுகள் இவ் வலயத்தை நோக்கி வந்து சேரும். இதனை உறுதிபடக் கூறலாம்.

குறிப்பாக மீன்பிடிக் கைத்தொழிலோடு சம்பந்தப்பட்ட முதலீடுகள் மாத்திரமல்லாமல், கருவாடு உற்பத்தி, ரின் மீன் உற்பத்தி, மீன்பிடிப் படகு, வள்ளங்கள் மற்றும் வலைகள் உற்பத்திகள் அடங்கலாக கடற்றொழில் கைத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட அனைத்து முதலீடுகளும் இங்கு வர முடியும்.

கடற்றொழிலுக்கென தனியான முதலீட்டு வலயமொன்றை அமைக்கும் நடவடிக்கைகள் தற்போது இங்கு முன்னெடுக்கப்பட்ட போதிலும் இப்பிராந்தியத்திலுள்ள பல நாடுகள் இவ்வாறான பல முதலீட்டு வலயங்களை ஏற்கனவே அமைத்துள்ளன. அவற்றின் ஊடாக அந்தந்த நாடுகள் பொருளாதார நலன்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியனவாக உள்ளன.

அந்த வகையில் இம்முதலீட்டு வலயத்தின் ஊடாக கடற்றொழில் சம்பந்தப்பட்ட முதலீடுகள் மாத்திரமல்லாமல் அந்நிய செலாவணியும் இங்கு வந்து சேரும். அவற்றின் ஊடாக புதிய தொழில் வாய்ப்புகளும் உருவாவதோடு இந்நாட்டின் வேலைவாய்ப்பின்மைக்கு குறிப்பிடத்தக்களவில் தீர்வு வழங்கக் கூடியதாக அமையும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT