Friday, April 26, 2024
Home » ஐ.ஒ.ஆர்.ஏ நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் சவூதி கூடுதல் கரிசனை
இலங்கைக்கு இந்து சமுத்திர எல்லைகள் அமைப்பின் தலைமை;

ஐ.ஒ.ஆர்.ஏ நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் சவூதி கூடுதல் கரிசனை

சவூதி தூதுக்குழுவினர் அமைச்சர் அலி சப்ரி, ஐ.ஓ.ஆர்.ஏ பொதுச் செயலாளருடன் சந்திப்பு

by sachintha
October 13, 2023 7:28 am 0 comment

இந்து சமுத்திர எல்லை நாடுகள் அமைப்பின் (IORA) அமைச்சர்கள் மட்ட மாநாடு கடந்த 09 முதல் – 11 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற்றுள்ளது. இதில் 9 ஆம், 10ஆம் திகதிகளில் சிரேஷ்ட அதிகாரிகள் மட்ட அமர்வும், 11 ஆம் திகதி அமைச்சர்கள் மட்ட மாநாடும் இடம்பெற்றுள்ளன. இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் 23 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பிரதி வெளிவிவகார அமைச்சர்கள், துணை வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட இராஜதந்திரிகள் பலரும் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

இம்மாநாட்டைத் தொடர்ந்து இவ்வமைப்பின் தலைமைப் பதவி இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. 2023 முதல் 2025 வரையும் இலங்கை இப்பதவியை வகிக்கும்.

இலங்கை, இந்தியா, பங்களாதேசம், மாலைதீவு, சவூதி அரேபியா உட்பட 23 நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டுக்காக இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.

சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லாஹ்வுக்குப் பதிலாக அந்நாட்டின் உதவி வெளிவிவகார அமைச்சர் வலீத் பின் அப்துல் கரீம் எல்-கெரிஜி தலைமையிலான குழுவினர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இலங்கைக்கு வருகை தந்திருந்த சவூதி அரேபிய உதவி வெளிவிவகார அமைச்சர் வலீத் பின் அப்துல் கரீம் எல்-கெரிஜி அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு நட்புறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்தோடு பொதுநலன்களை அடைதல் மற்றும் அனைத்துத் துறைகளிலும் அவற்றை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும், பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் தொடர்பிலும் பொதுவான நலன்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்துசமுத்திர எல்லை நாடுகள் அமைப்பின் (ஐ.ஒ.ஆர்.ஏ) பொதுச்செயலாளர் சல்மான் அல் ஃபரிசியை, சவூதி அரேபிய பிரதிவெளிவிவகார அமைச்சர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பின் ​போது இவ்வமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை மேலும் மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-அல்கஹ்தானி இச்சந்திப்புக்களில் பங்குபற்றியுள்ளார்.

இவ்வமைப்பின் அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தில் பங்குபற்றிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும், பிரதிவெளிவிவகார அமைச்சர்களும் உரையாற்றினர். அந்த வகையில் இம்மாநாட்டில் உரையாற்றிய சவூதி அரேபிய உதவி வெளிவிவகார அமைச்சர், இந்து சமுத்திர எல்லை நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளுடனான உரையாடல்களுக்கான பங்காளியாகவும் அந்தந்த நாடுகளதும் அந்நாடுகளின் மக்களதும் பொது நலன்களை அடைவதற்கு ஒத்துழைப்புடன் பணியாற்றுவதற்கான சவூதி அரேபியாவின் விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்.

அதேநேரம் சவூதி அரேபியா, விஷன் – 2030 திட்டத்தின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக முனைப்புடன் பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘சவூதி அரேபியாவின் வெளியுறவுக் கொள்கையானது, பிராந்திய மற்றும் சர்வதேசத்தின் அபிவிருத்தியை முன்னேற்றுவதற்கு பணியாற்றி வருகின்றது. இந்து சமுத்திர எல்லை நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் இம்மாநாட்டில் பங்கேற்று இருப்பதன் ஊடாக மாநாட்டின் முக்கியத்துவம் உறுதி செய்யப்படுவதோடு, ஸ்திரத்தன்மை, பொருளாதாரப் பன்முகத்தன்மை மற்றும் தங்கள் நாடுகளுக்குள் செழுமையையும் மேம்படுத்துகிறது’.

சவுதி அரேபியாவுக்கும் இந்து சமுத்திர எல்லை நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மை மூலம் வழங்கப்படும் பல்வேறு வாய்ப்புகளை உணர்ந்து, பொதுவான சவால்களை சமாளிக்க பல்வேறு துறைகளில் கூட்டு ஒருங்கிணைப்பை தொடரவும் சவூதி அரேபியா விருப்பம் கொண்டுள்ளது’.

கடல்சார் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய வர்த்தகத்தின் சவால்களை எதிர்கொள்ளவும் உலகளாவிய வழிசெலுத்தலின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் இச்சங்கம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு சவூதி அரேபியாவின் ஆதரவை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிராந்திய நாடுகளை ஒன்றோடொன்று இணைப்பதன் மூலம் கிடைக்கப்பெறும் பெரும் ஆற்றலைப் பயன்படுத்தி, இளைஞர்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதன் மூலமும், பூமியின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதன் மூலமும் இந்த இலக்குகள் அடையப்படும். காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றத்தால் ஏற்படும் சவால்களை முழுமையாக அறிந்திருப்பதாகவும் சவுதி அரேபியாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

பவளப்பாறைகள், பல்லுயிர் மற்றும் கடல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, எதிர்கால சந்ததியினருக்கு வாய்ப்புகள் மற்றும் நிலையான வளர்ச்சியை வழங்க, தகவல் பரிமாற்றம் நிபுணத்துவத்தை உருவாக்க மற்றும் பயனுள்ள முறைகளை உருவாக்க உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கு இது உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் இம்மாநாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

மர்லின் மரிக்கார்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT