Home » பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து உலக வங்கி அதிகாரிகளுடன் அமைச்சர் ஜீவன் கலந்துரையாடல்

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து உலக வங்கி அதிகாரிகளுடன் அமைச்சர் ஜீவன் கலந்துரையாடல்

by Prashahini
April 21, 2024 5:47 pm 0 comment

பெருந்தோட்ட மக்கள் முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள் பற்றியும், அவர்கள் எதிர்கொள்ளும் சில சவால்களை உரியவாறு கையாள்வதற்கான இலக்கிடப்பட்ட நடவடிக்கைகளின் அவசியம் குறித்தும் உலக வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கிக் குழுமத்தின் 2024ஆம் ஆண்டுக்கான கோடைகால கூட்டத்தொடர் கடந்த 15ஆம் திகதி வொஷிங்டனில் ஆரம்பமான நிலையில், 17 – 19ஆம் திகதி வரை முக்கிய அமைச்சர் மட்டக் கூட்டங்கள் நடைபெற்றன.

இக்கூட்டத்தில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானும் கலந்துகொண்டிருந்தார்.

இதுகுறித்து அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் நீர்வழங்கல் துறையில் புதிய செயற்றிட்டமொன்றை அறிமுகப்படுத்துவதை முன்னிறுத்தி உலக வங்கியின் நீர்வழங்கல் பிரிவுடன் நெருங்கிப் பணியாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

நீர்வழங்கல் துறையில் தாம் முன்னெடுத்து வரும் மறுசீரமைப்புக்களுக்கு ஆதரவளிக்கக்கூடியவாறான புதிய செயற்றிட்டமொன்று குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று உலக வங்கி, சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம், பல்தரப்பு முதலீட்டு உத்தரவாத முகவரகம் ஆகியவற்றின் உதவியுடன் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் கடன்களை மீள் ஒருங்கிணைக்கவும், அதன் நிதியியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் முடியும் எனவும், அரச – தனியார் துறையினரின் கூட்டிணைவின் மூலம் நீர்வழங்கல் திட்டங்களை மீள ஆரம்பிக்க முடியும் எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், பெருந்தோட்ட மக்கள் முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள் பற்றியும், அவர்கள் எதிர்கொள்ளும் சில சவால்களை உரியவாறு கையாள்வதற்கான இலக்கிடப்பட்ட நடவடிக்கைகளின் அவசியம் குறித்தும் உலக வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான தொழிற்பயிற்சி நிலையங்களை விஸ்தரிப்பதற்கான உதவி, சிறுவர்களின் போசணை, கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கண்காணிப்பதற்கு ஏதுவான ஆரம்ப சிறுவர் பராமரிப்பு செயற்றிட்டத்தைக் கட்டியெழுப்புதல், பெண் முயற்சியாளர்களை ஊக்குவிக்கக்கூடிய இலக்கிடப்பட்ட நிதி உதவித்திட்டங்களை அறிமுகப்படுத்தல் என்பன பற்றி ஆராயப்பட்டதாகவும் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு பின்தள்ளப்பட்ட சமூகங்களின் நீர், சுகாதாரம் மற்றும் சேவை வழங்கல் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடியவாறான பெறுபேறை அடிப்படையாகக் கொண்ட நிதியுதவி செயற்றிட்டத்தை சகல தரப்பினருடனும் இணைந்து முன்னெடுக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT