Thursday, May 2, 2024
Home » மனிதநேயப்பணியை வாழ்வின் இலட்சியமாக கொண்டு வாழ்ந்தவர் கலாநிதி ஏ.ரி. ஆரியரத்ன

மனிதநேயப்பணியை வாழ்வின் இலட்சியமாக கொண்டு வாழ்ந்தவர் கலாநிதி ஏ.ரி. ஆரியரத்ன

by Gayan Abeykoon
April 19, 2024 11:02 am 0 comment

ர்வோதய அமைப்பின் ஸ்தாபகரும் அதன் தலைவருமான கலாநிதி ஏ.ரி. ஆரியரத்ன காலமான செய்தி அவரது அபிமானிகளுக்கு அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கலாநிதி ஆரியரத்ன உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 16 ஆம் திகதி காலமானார்.

சர்வோதய இயக்கமானது அனைவருக்கும் விழிப்புணர்வூட்டும் பொருட்டு ‘உழைப்பு, சிந்தனை மற்றும் ஆற்றலைப் பகிர்தல்’ எனும் எண்ணக்கருவினை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகின்றது. சர்வோதய அமைப்பு 1958 ஆம் ஆண்டு முதல் இலங்கை முழுவதும் பல வருடங்களாக மனிதநேயப் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

1931 ஆம் ஆண்டு காலி மாவட்டத்தின் உனவடுன பிரதேசத்தில் பிறந்த கலாநிதி ஆரியரத்ன  தனது ஆரம்பக் கல்வியை கிராமிய பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை காலி மஹிந்த கல்லூரியிலும், உயர்கல்வியை வித்தியோதயா பல்கலைக்கழகத்திலும் கற்றார். கொழும்பு நாலந்தா கல்லூரியில் தனது ஆசிரியப் பணியைத் தொடங்கிய அவர், அங்கு ஆசிரியராக பணியாற்றியபோது நாற்பது உயர்நிலை மாணவர்களையும் பன்னிரண்டு ஆசிரியர்களையும் அழைத்துக் கொண்டு பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழும் ஒரு கிராமத்திற்குசு கல்விச் ற்றுலா சென்றார். அக்கிராமத்தில் முதலாவது சிரமதானப் பணியை அவர் மேற்கொண்டார்.

ஆரம்பத்திலிருந்தே அவர் சர்வோதய சிரமதான இயக்கத்தை நிலைபேறான அபிவிருத்தி மற்றும் அமைதிக்கான புத்தர் பெருமானின் போதனைகளை செயற்படுத்தும் இயக்கமாக அடையாளப்படுத்தினார்.

அவர் தனது சகாக்களுடன் இணைந்து புத்தர் பெருமானின் போதனைகளின் அடிப்படையில் ஆறு நிலைகளில் சர்வோதய இயக்கத்தை விழிப்புணர்வூட்டுவதற்கு கோட்பாட்டினையும் நடைமுறையையும் உருவாக்கினார்.

அறுபத்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, சர்வோதயம் இலங்கையின் மிகப்பெரிய அரச சார்பற்ற இயக்கமாக தனது சேவையைத் முன்னெடுத்து வருவதுடன், தேசத்திற்கும் அதன் மக்களுக்கும் அவர் ஆற்றிய அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் கலாநிதி ஆரியரத்ன அவர்கள் பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அவர் 2007 இல் இலங்கை ஜனாதிபதியிடமிருந்து மிக உயரிய தேசிய விருதான ஸ்ரீலங்காபிமானய விருதைப் பெற்றதுடன் மனித நல்வாழ்வு மற்றும் அமைதிக்கான அவரது பங்களிப்பிற்காக  ரமோன் மெக்சேசே விருது (பிலிப்பைன்ஸ்) 1969, சர்வதேச அபிவிருத்திக்கான கிங் பவுடோயின் விருது (பெல்ஜியம்) 1982, நிவானோ பீஸ் பிரைஸ் (யப்பான்) 1992, மகாத்மா காந்தி அமைதி பரிசு (இந்தியா) 1996 போன்ற பல சர்வதேச விருதுகளைப் பெற்றார்.

மேலும் கலாநிதி ஆரியரத்ன ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் (D.Litt.) பட்டமும், பிலிப்பைன்ஸில் உள்ள Amelio Aguinaldo மருத்துவக் கல்லூரியின் மானுடவியல் கலாநிதி (D.H.) பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அமரர் ஆரியரத்ன இலங்கை அரசியலிலும் சமூக அபிவிருத்தியிலும் தொடர்ச்சியான செயற்பாட்டாளராக அறியப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ். சாரங்கன்…

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT