Tuesday, April 30, 2024
Home » இன்னும் மூன்று தினங்களில் இந்தியத் தேர்தல் ஆரம்பம்

இன்னும் மூன்று தினங்களில் இந்தியத் தேர்தல் ஆரம்பம்

by sachintha
April 16, 2024 6:38 am 0 comment

16

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகின்றது. லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எதிர்வரும் 19 ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பல கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் புதுச்சேரி, தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.

இந்திய தேர்தலுக்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ், இந்தியன் யூளியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. எதிர்க்கட்சியான அ.தி.மு.க அணியில் தே.மு.தி.க, புரட்சிப் பாரதம், புதிய தமிழகம் உள்ளிட்ட பலவேறு கட்சிகள் உள்ளன. மறுபுறம், மூன்றாம் அணி அமைத்துள்ள பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன.

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி 7 முறை தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.மோடிநேற்றும் தமிழகம் வந்திருந்தார். அதேபோல், இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 12 ஆம் திகதி திருநெல்வேலியில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திருநெல்வேலி, தென்காசி, மதுரை உள்ளிட்ட தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த ஆண்டில் 8-ஆவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்துள்ளார்.

தமிழகத்தில் நாளை 17 ஆம் திகதி மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைய உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார். தமிழகத்தில் 19ம் திகதி லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நாளை முடியவுள்ள நிலையில், பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரங்களை தீவிரப்படுத்தியுள்ளார்கள். பிரதமர் மோடி நேற்று மீண்டும் தமிழ்நாடு வருகை தந்து நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நேற்று மாலை 4 மணி அளவில் அகஸ்தியர்பட்டிக்கு வந்து சேர்ந்த மோடி, மாலை 4.20 மணி முதல் 5.00 மணி வரை நடைபெற்ற கூட்டத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி தொகுதி பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT