Tuesday, April 30, 2024
Home » நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்ைகயை எதிர்கொள்கின்றார் பாபா ராம்தேவ்!

நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்ைகயை எதிர்கொள்கின்றார் பாபா ராம்தேவ்!

உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் எச்சரிக்ைக!

by Gayan Abeykoon
April 11, 2024 9:34 am 0 comment

பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புகள் குறித்து அறிவியலுக்குப் புறம்பாக விளம்பரம் செய்த விவகாரத்தில், பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. அதுமட்டுமல்லாது ‘நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருங்கள்’ என பாபா ராம்தேவுக்கு நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

இந்தியாவின் பிரபல யோக குருவான பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் பற்பசை, சவர்க்காரங்கள், தேன், ஷாம்பு போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது. ஆனால், இந்த பொருட்களுக்கான விளம்பரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

அதாவது, பதஞ்சலி நிறுவனம் தீராத நோய்களையும் குணப்படுத்துவதாக தெரிவித்தும், அலோபதி மருத்துவ முறைக்கு எதிரான கருத்துக்களை கொண்ட விளம்பரங்களை செய்வதாகவும் எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பதஞ்சலி நிறுவனத்தை கடுமையாக எச்சரித்து கண்டனம் தெரிவித்திருந்தது. எந்தவொரு தவறான விளம்பரங்களையும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தது.

அதேபோல இதுபோன்ற தவறான விளம்பரங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான திட்டத்தை தயாரிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது.

இருப்பினும் கடந்த 4 மாதங்களாக பதஞ்சலி இதுபோன்ற விளம்பரங்களை நிறுத்தவில்லை. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா, பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பதஞ்சலியின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதுமட்டுமல்லாது, பதஞ்சலி நிறுவனம் மற்றும் அதன் நிர்வாக இயக்குநரான பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸையும் உச்சநீதிமன்றம் வழங்கியது.

இந்நிலையில், நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பதஞ்சலி சார்பில் ஆஜராகியிருந்த துருவ் மேத்தா, நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாக தெரிவித்திருந்தார். ஆனால், நீதிபதிகள் இதனை ஏற்கவில்லை.

“நீங்கள் மன்னிப்பு கேட்கும் பொழுது மிக அலட்சியமாக நடந்து கொள்கிறீர்கள். அதே அலட்சியத்தை நாங்கள் ஏன் உங்களுக்கு காட்டக்கூடாது? உங்களது மன்னிப்பை நாங்கள் நம்பவில்லை. அதனை நிராகரிக்கிறோம்” என்று நீதிபதிகள் காட்டமாக கூறியிருந்தனர்.

அதுமட்டுமல்லாது “நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருங்கள்” என பாபா ராம்தேவுக்கு நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT