Saturday, April 27, 2024
Home » காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்; உதவிக்கு அழைப்பு விடுப்பு

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்; உதவிக்கு அழைப்பு விடுப்பு

- பஞ்சம் அச்சுறுத்தல் அதிகரிப்புடன், சர்வதேச போர் நிறுத்தம் அழுத்தம்

by Rizwan Segu Mohideen
March 28, 2024 8:42 am 0 comment

காசாவில் பஞ்சம் ஒன்று ஏற்படும் அச்சுறுத்தல் அதிகரித்து போர் நிறுத்தம் ஒன்றுக்கான சர்வதேச அழுத்தத்திற்கு மத்தியிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளன.

முற்றுகையில் உள்ள காசாவுக்கு உதவிகள் தேவைப்படுவதோடு அந்தப் பகுதியில் வானில் இருந்து தொடர்ந்து உதவிகளை போடுவதாக அமெரிக்கா கூறியுள்ளது. எனினும் அவ்வாறு விழும் உதவிகளை பெறும் முயற்சியில் 18 பேர் கொல்லப்பட்டிருக்கும் நிலையில், வானில் இருந்து உதவிகளை போடுவதை நிறுத்தும்படி ஹமாஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்னும் இஸ்ரேலிய தரைப்படை நுழையாத பகுதியாக இருக்கும் தெற்கு காசாவின் ரபாவில் இஸ்ரேலின் வான் தாக்குதலை அடுத்து இரவு வானில் பாரிய தீப்பிழப்பு வெளியானது. இங்கு 1.5 மில்லியன் மக்கள் நிரம்பி வழிவதோடு, பெரும்பாலானவர்கள் காசாவின் தெற்கு விளிம்பு வரை இடம்பெயர்ந்து எகிப்துடனான எல்லையில் இருக்கும் இந்தப் பகுதியை அடைந்துள்ளனர்.

வடக்கு காசாவில் உள்ள காசா நகரிலும் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்களால் நேற்று கறும்புகை வெளியான வண்ணம் இருந்தது. இங்குள்ள காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபாவில் இஸ்ரேலியப் படை ஒரு வாரத்துக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த புதன்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 66 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் ரபா மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட மூவரும் உள்ளடங்குகின்றனர்.

அதேபோன்று காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 76 பேர் கொல்லப்பட்டு மேலும் 102 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இதன்படி ஆறு மாதங்களாக நீடிக்கும் போரில் அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 32,490 ஆக அதிகரித்துள்ளது.

காசாவில் அவசர போர் நிறுத்தம் ஒன்றை வலியுறுத்தி பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு நாட்கள் கடந்திருந்தபோதும் மோதல்களில் எந்தத் தணிவும் ஏற்படவில்லை.

கான் யூனிஸ் நகரில் இருக்கும் மேலும் இரு மருத்துவமனைகளை இஸ்ரேலியப் படை சுற்றிவளைத்திருப்பதோடு இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் தற்காலிக முகாம் ஒன்றின் மீது நடத்திய தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கி இருக்கும் நிலையில் அவர்கள் உயிர் ஆபத்தை சந்தித்து வருவதாக பலஸ்தீன செம்பிறை சங்கம் எச்சரித்துள்ளது.

போருக்கு மத்தியில் மக்கள் சிக்கியுள்ள சூழலில், வானில் இருந்து உதவிகள் போடுவதை நிறுத்துமாறு நன்கொடை நாடுகளை ஹமாஸ் கேட்டுள்ளது. கடலில் விழுந்த இந்த உதவிப் பொதிகளை பெற முயன்ற 12 பலஸ்தீனர்கள் மூழ்கி உயிரிழந்ததை அடுத்து ஹமாஸ் இந்தக் கோரிக்கையை விடுத்தது.

உதவியைக் பெற முயன்ற மேலும் ஆறு பேர் நெரிசலில் சிக்க உயிரிழந்ததாக ஹமாஸ் மற்றும் சுவிஸை தளமாகக் கொண்ட மனித உரிமை கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளன.

‘ஒரு டின் மீன் கலனை பெறுவதற்காக மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்’ என்று காசா குடியிருப்பாளரான முஹமது அல் சபாவி ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். உதவிப் பொதி ஒன்றில் இருந்து இவ்வாறான ஒரு கலனை பெற்று அதனை கையில் வைத்துக் கொண்டே அவர் இதனைத் தெரிவித்தார்.

காசாவுக்குள் மேலும் உதவி வாகனங்களை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஹமாஸ், இது காசாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட பஞ்சத்தை ஏற்படுத்தும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி வெடித்த காசா போரினால் அந்தப் பகுதியில் கிட்டத்தட்ட அனைத்து உட்கட்டமைப்புகளும் அழிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள 2.4 மில்லியன் மக்கள் தொகையில் அனைவருக்கும் மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக ஐ.நா கூறுகிறது.

விரைவான பஞ்சம் ஒன்றை தடுப்பதற்கு வான் அல்லது கடல் வழிகளை விடவும் வீதிகள் மூலம் காசாவுக்கு உதவிகள் விரைவாக எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று ஐ.நா சிறுவர் அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.

அவசியமான உதவிகள் ஒரு கிலோமீற்றர் தூரத்திலேயே தங்கி உள்ளன. உதவிகளை நிரப்பிய லொறிகள் எகிப்துடனான காசாவின் தெற்கு எல்லையில் காத்துக் கிடக்கின்றன என்று யுனிசெப் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டர் சுட்டிக்காட்டினார்.

உதவிகளை தரை வழியாக எடுத்துச் செல்ல தொடர்ந்து முயற்சிப்பதாக குறிப்பிட்டிருக்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கௌன்சில், தொடர்ந்தும் வானில் இருந்து உதவிகளை போடுவதாக கூறியுள்ளது.

ஜோர்தான், எகிப்து, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஜெர்மனி நாடுகாளில் அனுப்பப்பட்ட விமானங்களில் இருந்து பாராசூட் மூலம் வீசப்பட்ட உதவிப் பொதிகளை நோக்கி மக்கள் குவியும் காட்சியை ஏ.எப்.பி. தொலைகாட்சி வெளியிட்டுள்ளது.

காசாவில் இஸ்ரேல் தனது போர் நடவடிக்கையை விட்டுக்கொடுக்காது தொடர்ந்து செயற்பட்டு வருவதோடு கட்டாரில் இடம்பெற்று வரும் போர் நிறுத்தம் ஒன்றுக்கான பேச்சுவார்த்தையும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் நீடித்து வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் முன்னெப்போதும் அனுபவிக்காத அரசியல் தனிமைப்படுத்தலை எதிர்கொண்டிருப்பதாகவும் பாதுகாப்புச் சபையில் அமெரிக்காவின் பாதுகாப்பை இழந்திருப்பதாகவும் ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியே குறிப்பட்டுள்ளார்.

மறுபுறம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் நகரில் இஸ்ரேலிய படை நேற்று நடத்திய சுற்றிவளைப்புகளில் மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது. இதன்போது இஸ்ரேலின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதோடு மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

முன்னதாக ஜெனின் நகரில் இஸ்ரேலிய படையின் துப்பாக்கிச் சூட்டில் 19 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலும் பதற்றம் நீடித்து வருகிறது.

மறுபுறம் வடக்கு இஸ்ரேல் மீது லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய சரமாரி ரொக்கெட் தாக்குதல்களில் இஸ்ரேலியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தெற்கு லெபனானில் கடந்த செவ்வாய்க்கிழமை சுகாதார மையம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏழு மருத்துவ உதவியாளர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாகவே ஹிஸ்புல்லா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT