Home » தவக்கால சிந்தனை: புனித வார சிறந்த ஒறுத்தல்கள்

தவக்கால சிந்தனை: புனித வார சிறந்த ஒறுத்தல்கள்

by damith
March 25, 2024 6:00 am 0 comment

தவக்காலத்தின் புனித வாரத்தில் பயணிக்கி றோம். ஓர் அருமையான தவக்காலத்தினை அனுபவித்தீரா? கடவுளின் அருளால் உமக்கு விருப்பமான உணவினைத் தவிர்த்தீரா அல்லது ஏலவே, தீர்மானித்துக் கொண்ட கடவுளுடன் செலவிட ஒதுக்கிய மேலதிக பத்து நிமிட இறைவேண்டலில் ஈடுபட தவறினீரா? தேவையிலுள்ள யாருக்காவது தர்மம் செய்தீரா அல்லது ஒரு நல்ல விடயத்திற்காக தாராளமாகக் கொடுத்தீரா?

நாம், தவக்காலத்தினை திறந்த இதயத்துடன் ஆரம்பித்தோம், ஆயினும் இப்பயணத்தில் நமது பலவீனத்தை மேற்கொள்ள போராட வேண்டி ஏற்பட்டிருக்கும். இப்போது நாம் புனித வாரத்தில் இருக்கிறோம். இவ்வாரம் திரு அவையின் திருவழிபாட்டு ஆண்டில் மிகவும் புனிதமான காலமாகும்.

தவக்காலமானது எமக்கு மிகவும் பக்தி நிறைந்த காலமாகவோ அல்லது ஏமாற்றம் நிறைந்த காலமாகவோ அமைந்திருக்கலாம். நமது கடவுள் எப்போதும் நமக்கு இரண்டாவது சந்தர்ப்பத்தை தருகிற கடவுளாவார்.

ஆகவே இப்புனித வாரத்தில் உங்களது நாளாந்த செயற்பாட்டிலிருந்து சிறிது நேரத்தை எடுத்து கடவுளோடு இறைவேண்டலில் கழியுங்கள் அல்லது செபமாலை, பக்தி முயற்சிகளில் ஈடுபடுங்கள். இவ்வாரத்தில் நல்ல ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொண்டு அவற்றை ஈஸ்டர் பெருவிழாவில் இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

பெரிய வியாழன், பெரிய வெள்ளி, திருவிழிப்புச் சனி வழிபாடுகள் திரு அவையின் வழிபாட்டு ஆண்டின் வழிபாடுகளின் உச்சமாகும். இதற்கென தகுந்த நேரத்தை ஒதுக்கி அவ் வழிபாட்டில் கலந்து கொள்ளுங்கள். எல்லா ஆலயங்களிலும் பெரிய வெள்ளிக்கிழமையன்று திறந்த பொது சிலுவைப்பாதை நடைபெறும். அதில் கலந்து கொள்வதனூடாக நாம் இயேசுவின் பாடுகளில் உள்நுழைய முடியும். அவ்வாறே ஏனைய வழிபாட்டு நிகழ்வுகளிலும் கலந்து ஆன்மீக ரீதியில் ஆயத்தமாவோம். இன்றைய நற்செய்தியில் இயேசுவால் உயிர்ப்பிக்கப்பட்ட இலாசரின் வீட்டில் அவர் உணவருந்துவதை வாசிக்கின்றோம். அது அவரது பாடுகளுக்கான முன்னாயத்த விருந்தாகும். அவ்விருந்தில் மரியா இயேசுவின் பாதங்களை விலையுயர்ந்த நறுமணத் தைலத்தால் பூசி அவற்றை தன் கூந்தலால் துடைத்தாள் என்று வாசிக்கின்றோம். அப்போது அவ்வீடு முழுவதும் நறுமணத்தால் நிறைந்திருந்தது. நாமும் புனித வார பயணத்தில் நம்மை அன்பு செய்கின்ற இயேசுவிற்கு மரியாவைப் போன்று நமது அன்பினைப் பொழிவோம்.

-அருட்தந்தை நவாஜி (திருகோணமலை மறைமாவட்டம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT