Thursday, May 9, 2024
Home » ரஷ்ய தலைநகர் மொஸ்கோ தாக்குதலில் இதுவரை 115 பேர் பலி

ரஷ்ய தலைநகர் மொஸ்கோ தாக்குதலில் இதுவரை 115 பேர் பலி

- 3 சிறுவர்களும் அடங்குவர்; 145 பேர் காயம்

by Rizwan Segu Mohideen
March 23, 2024 3:21 pm 0 comment

– இலங்கையர் எவருக்கும் பாதிப்பு இல்லை
– நேரடி தொடர்புடைய 4 பேர் உள்ளிட்ட 11 பேர் கைது

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் புறநகரில் உள்ள Crocus City Hall எனும் பாரிய அரங்கொன்றில் ஆயுததாரிகள் முன்னெடுத்த துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் 115 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 145 பேர் காயமடைந்துள்ளனர்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் ரஷ்யாவில் இடம்பெறும் மிக மோசமான பயங்கரவாத தாக்குதல் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் போன்று உடையணிந்த தாக்குதல்தாரிகள் இசை நிகழ்ச்சி நடைபெற்ற கட்டடத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு மற்றும் கைக்குண்டுகளை வீசியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Piknik என அழைக்கப்படும் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சிக்காக 6,200 இருக்கைகள் கொண்ட திரையரங்கில் மக்கள் நிரம்பியிருந்த நிலையில், இசைக்குழுவினர் மேடைக்கு வர இருந்த நிலையில் இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், இசைக்குழு உறுப்பினர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

15 முதல் 20 நிமிடங்கள் வரை இடம்பெற்ற இத்தாக்குதல் காரணமாக இறந்தவர்களில் 3 சிறுவர்கள் அடங்குவதாகவும், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (22) வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இத்தாக்குதலுக்கு ISIS என அழைக்கப்படும் இஸ்லாமிய அரசு பொறுப்பேற்றுள்ளது.

ஆயினும் இத்தாக்குதல் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக அந்நாட்டு அகதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பத்துடன் நேரடியாகத் தொடர்புடைய 4 பேர் உள்ளிட்ட 11 பேரை கைது செய்துள்ளதாக, அந்நாட்டு பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

குறித்த அரங்கு தீயில் எரிந்த பல்வேறு காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன. பீதியடைந்த ரஷ்யர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுவதையும், நான்கு துப்பாக்கிதாரிகள் தன்னியக்க துப்பாக்கிகளால் துப்பாக்கிச் சூடு நடத்துவதைக் காட்டும் வீடியோக்களும் பகிரப்பட்டு வருகின்றன.

தாக்குதலின் போது தாக்குதல்தாரிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாகவும், குறைந்தது இரண்டு குண்டுகள் இதன்போது வெடித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக தலா 3 மில்லியன் ரூபிளும் காயமடைந்தவர்களுக்கு தலா 1 மில்லியன் ரூபிளும் இழப்பீடு வழங்கவுள்ளதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது

“இந்த பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகக் ரஷ்ய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மார்ச் மாதமளவில் ரஷ்யாவின் மொஸ்கோவில் தீவிரவாத தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக முன்கூட்டியே ரஷ்ய அதிகாரிகளை எச்சரித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மொஸ்கோவில் மக்கள் அதிகம் கூடும் திருவிழா அல்லது நிகழ்ச்சியை குறிவைத்து இப்பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என இம்மாத ஆரம்பத்தில் ரஷ்ய அதிகாரிகளை எச்சரித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

எனினும், இது வேறு நோக்கத்துடன் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை என்று ரஷ்யா அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்யாவில் தங்கியுள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு பயங்கரவாத தாக்குதல் அபாயம் குறித்து அமெரிக்க அரசாங்கம் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இத்தாக்குதலில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லையென வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT