Thursday, May 9, 2024
Home » பிரதமர் மோடியின் அருணாச்சல பிரதேச விஜயத்திற்கு சீனாவின் எதிர்ப்பை இந்தியா நிராகரித்துள்ளது

பிரதமர் மோடியின் அருணாச்சல பிரதேச விஜயத்திற்கு சீனாவின் எதிர்ப்பை இந்தியா நிராகரித்துள்ளது

by Rizwan Segu Mohideen
March 23, 2024 12:42 pm 0 comment

வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அண்மைய வருகைக்கான சீனாவின் ஆட்சேபனையை இந்தியா முற்றாக நிராகரித்துள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியா, நாட்டின் “ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக” பேணிவருகிறது.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமரின் அருணாச்சலப் பிரதேச விஜயம் குகுறித்து சீனத் தரப்பில் கூறப்படும் கருத்துக்களை நாங்கள் நிராகரிக்கிறோம். இந்தியத் தலைவர்கள் அருணாச்சலத்திற்கு இடைக்கிடை சென்று வந்துள்ளனர்.

”இதுபோன்ற வருகைகளையோ அல்லது இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களையோ ஆட்சேபிப்பது நியாயமானதல்ல. மேலும், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருக்கிறது என்ற யதார்த்தத்தை மாற்ற முடியாது. பல சந்தர்ப்பங்களில் இந்த நிலையான நிலைப்பாட்டை சீனாவுக்கு அறிவித்துள்ளோம்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அருணாச்சலப் பிரதேசத்திற்கு மோடியின் அண்மைய விஜயம் குறித்து சீனா திங்கள்கிழமை புது தில்லியில் முறைப்பாடு அளித்திருந்தது.

குறிப்பாக அருணாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரின் கீழ் உள்ள லடாக்கின் சில பகுதிகள் தொடர்பாக, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பிராந்திய எல்லைகள் தொடர்பாக நீண்டகால இழுபறி நிலை உள்ளது.

1962 இல் சீனாவும் இந்தியாவும் அக்சாய் சின் (லடாக் பகுதி) மற்றும் அருணாச்சலப் பிரதேசம் தொடர்பில் போரில் ஈடுபட்டன, ஆனால் 1993 மற்றும் 1996 இல் இரு நாடுகளும் உண்மையான கட்டுப்பாட்டு எல்லையை மதிக்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

4,057 கிமீ நீளமுள்ள இந்த கட்டுப்பாட்டு எல்லை (LAC) இந்தியாவிற்கும் சீன மக்கள் குடியரசிற்கும்(PRC) இடையே அமுலில் உள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT