Thursday, May 9, 2024
Home » எதிரணியினருக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள சந்தர்ப்பம்

எதிரணியினருக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள சந்தர்ப்பம்

by manjula
March 11, 2024 6:00 am 0 comment

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் அதன் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியின் கட்சித் தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல் இன்று 11 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இக்கலந்துரையாடலில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திசாநாயக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோருக்கு ஜனாதிபதியினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி இக்கலந்துரையாடலில் மேற்படி பிரதிநிதிகளுடன் பங்கேற்பதற்கு வேறு பிரதிநிதிகள் எவராவது விரும்பினால், அவர்களுக்கும் இக்கலந்துரையாடலில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்ட நாட்டை மீளக்கட்டியெழுப்ப வேண்டுமானால் சர்வதேச நாணய நிதியத்துடன் இணங்கிக் கொண்ட திட்டங்களை முன்னெடுப்பதற்கு அனைத்துக் கட்சிகளின் கூட்டுப்பொறுப்பு மிக அவசியமென்பதே ஜனாதிபதியின் உறுதியான நிலைப்பாடு ஆகும். எனவேதான் இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்குமாறு எதிரணியின் தலைவர்களுக்கு ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தீவிரமடைந்திருந்த பொருளாதார நெருக்கடி படிப்படியாக முடிவுக்கு வந்துவிடுமென்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டுமென்ற குறிக்ேகாளுடன் நாட்டின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட வெற்றிகரமான திட்டங்கள் காரணமாகவே நாடு படிப்படியாக பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்து வருகின்றது.

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு கிடைக்குமென்பதற்கான நம்பிக்கைகளில் ஒன்றுதான் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கின்ற நிதியுதவிகள் ஆகும். இலங்கைக்கு உதவி வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் உடன்பட்டிருந்தமை எமது நாட்டின் மிகப்பெரும் வெற்றியாகும். சர்வதேச நாணயத்தின் உதவி ஊடாக இலங்கைக்கு மேலும் பல உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கு முன்னதாக இலங்கையின் முன்னைய கடன் வழங்குனர்கள் அனைவரையும் கடன்மறுசீரமைப்புக்கு இணங்கச் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்டமை நினைவிருக்கலாம். இந்நிபந்தனையை வெற்றி கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், அவரது தலைமையிலான அரசாங்கமும் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகள்தான் அன்றைய வெற்றிக்கு அடிப்படையாகும்.

இலங்கை வங்குரோத்து நிலைமைக்குச் சென்று விட்டதாக சர்வதேசமே கணித்துவிட்ட பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்காக அரசாங்கம் தொடர்ந்து போராடி வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி காரணமாகவே சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 48 மாதங்களில் 3 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியாக இலங்கைக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அது மாத்திரமன்றி சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியை இலங்கை கோருவதற்கான வாய்ப்பும் கிடைத்தது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கின்ற உதவிகள் தொடர்பில் எதிரணியினர் பிரதிகூலமான விமர்சனங்களையே தெரிவித்து வந்தனர். சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இலங்கைக்குக் கிடைப்பது பகல் கனவு என்றெல்லாம் எதிரணியினர் கூறி வந்தனர். அவர்களின் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்திலே​ேய சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இலங்கைக்குக் கிடைத்தது. அதேசமயம், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொண்டிருந்த உறுதியான நிலைப்பாடும் அவர் மேற்கொண்ட முயற்சிகளும் பாராட்டப்பட வேண்டியவையாகும்.

இந்நிலையிலேயே சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் அதன் பிரதிநிதிகளுடன் இன்று கலந்துரையாடல் நடைபெறுகின்றது. நிதி இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல் ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதியமைச்சின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர். எச்.எஸ். சமரதுங்க ஆகியோர் இக்கலந்துரையாடலில் பங்கேற்கின்றனர்.

இக்கலந்துரையாடலில் பங்கேற்குமாறு பாராளுமன்றத்தின் நிதிக்குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் அதன் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அண்மையில் ஹர்ஷ டி சில்வா பாராளுமன்றத்தில் கோரிக்ைக விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT