Monday, April 29, 2024
Home » இறையச்சத்தின் முன்மாதிரி

இறையச்சத்தின் முன்மாதிரி

by Gayan Abeykoon
February 23, 2024 10:05 am 0 comment

பாவம் செய்யாத மனிதர் யாரும் உண்டா? என்று வினவினால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் கள்ளம், கபடமில்லாத உள்ளத்துடன், பாவம் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் தான் பிறக்கின்றன.

பருவம் அடைந்த பிறகு, எது தவறு என்று அறிவு சுட்டிக்காட்டும் பொழுதும் கூட மனிதர்கள் ஏன் தவறுகள் செய்கிறார்கள்? முதல் காரணம், தான் செய்வது தவறுதான் என்பதை தவறு செய்பவர்கள் உணர்வதில்லை. அதேநேரம் ஷைத்தான் தவறை செய்வதற்கான எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறான்.

ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் பாவத்தைப் பற்றி வினவிய போது, “பாவம் என்பது உன் மனம் அச்சுறுத்துவதும், மக்களிடம் அதை வெளியாக்குவதை நீ வெறுப்பதுவும் ஆகும்” என்று கூறினாரர்கள்.

பொது வெளியில் மற்றவர்கள் பார்க்கும் வண்ணம் பெரும்பாலான தவறுகள் நிகழ்வதில்லை. சிலர் எவ்வளவு பாவங்கள் செய்தாலும், எதுவுமே தெரியாதவர்கள் போன்று நல்லவர்கள் போல நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இப்பிரபஞ்சத்தில் இறைவனுக்கு தெரியாத இரகசியங்கள் உண்டா? நம்முடைய ஒவ்வொரு செயலும், பேச்சும் அல்லாஹ்வின் கட்டளையின் படி அவரவர்களின் பதிவேட்டில் வானவர்களால் பதிவு செய்யப்படவே செய்கிறது.

தஹ்லபா என்னும் சிறுவன் நற்பண்புகள் உடையவராகவும், மற்றவர்கள் மீது கண்ணியம் உடையவராகவும் இருந்தார். நபி (ஸல்) அவர்கள் ஏவும் பணிகளைப் பாக்கியமாகக் கருதி செய்து வருபவராகவும் இருந்தார். ஒரு முறை நபி (ஸல்) அவர்கள், ஒரு வேலை காரணமாக தஹ்லபாவை வெளியில் அனுப்புகிறார்கள். போகும் வழியில் ஒரு வீட்டின் முன்பாக தொங்க விட்டிருந்த திரைச்சீலை காற்றில் விலகிய போது, உள்ளே ஒரு பெண்மணி குளித்துக் கொண்டிருந்த காட்சியை தற்செயலாக அவர் பார்த்திட நேருகிறது. உடனே தன் பார்வையைத் திருப்பிக்கொண்ட தஹ்லபா அவ்விடத்தை விட்டு பயந்து ஓடுகிறார். தவறு செய்து விட்டோமோ என்று மனம் பதறி வெகுதூரம் ஓடுகிறார். நபியவர்களை இனி எப்படி நேருக்கு நேர் சந்திப்பது என்று மனம் உடைந்து புலம்புகிறார். அவர் எங்கு சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை. தினமும் அவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் விசாரிக்கிறார்கள். அவரைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்து வர உமர் (ரழி) அவர்க​ளை அனுப்புகிறார்கள். ஒரு வழியாக மலை அடிவாரம் ஒன்றில் அழுது, அழுது உடல் நலம் குன்றிய அவரைக் கண்டுபிடித்து தூக்கிக்கொண்டு வந்து அவருடைய வீட்டில் படுக்க வைக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தஹ்லபாவைப் பார்க்க வருகிறார்கள். படுக்கையில் இருந்து அவருடைய தலையைத் தூக்கி தன் மடியில் வைக்கிறார்கள். தஹ்லபா அழுது கொண்டே ‘யா ரசூலுல்லாஹ் என்னுடைய தலையை கீழே கிடத்தி விடுங்கள். உங்களுடைய மடியில் தலை வைப்பதற்கு நான் அருகதை அற்றவன். நான் பெரிய பாவம் செய்து விட்டேன். அதனால் இறைவன் என்னைத் தண்டிப்பானோ என்று அச்சமாக இருக்கிறது’ என்று புலம்புகிறார்.

உன்னுடைய பாவம் வானத்திற்கும், பூமிக்கும் இடைப்பட்ட அளவாக இருந்தாலும் அல்லாஹ் உன்னை நிச்சயம் மன்னிப்பான்’ என்று நபி (ஸல்) அவர்கள் ஆறுதல் அளிக்கிறார்கள். மனம் வெம்பி அழுது கொண்டே இருக்கும் நிலையில் அவர் உயிர் பிரிகிறது. அவருடைய ஜனாஸாவை தூக்கிக்கொண்டு போகும்போது நபி (ஸல்) அவர்கள் தங்கள் குதிகால்களைத் தூக்கிக்கொண்டு நடப்பதைப் பார்த்து உமர் (ரழி) அவர்கள் ‘யா ரசூலுல்லாஹ் நடப்பதற்கு விசாலமாக இடம் இருக்கும் பொழுது ஏன் இவ்வாறு நடக்கிறீர்கள்?’ என்று வியப்புடன் வினவுகிறார்கள்.

‘ஓ உமரே, தஹ்லபாவின் நல்லடக்கத்திற்கு பல்லாயிரக்கணக்கான வானவர்கள் வந்துள்ளார்கள். அதனால் என் கால் பதிக்க இடம் இல்லாமல் இவ்வாறு நடக்கிறேன்’ என்று பதில் அளித்தார்கள்.

எப்படிப்பட்ட இறையச்சம் தஹ்லபாவுடையது. அவர் தெரிந்து பாவம் எதுவும் செய்யவில்லை. பார்க்கக் கூடாததை தற்செயலாக கண்கள் பார்த்ததற்கே இறைவனின் தண்டனைக்கு பயந்து உயிரையே விட்ட அவரின் இறையச்சம் மகத்தானது. இது போன்ற இறையச்சம் நம்மிடம் உள்ளதா? யாரும் இல்லையென்ற தைரியத்தில் தவறான ஒளிப்பதிவுகளை தொலைக்காட்சியிலும், சமூக வலைத்தளங்களிலும் எந்தவித கூச்சமும், குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இளைய தலைமுறையினர் மட்டுமின்றி, பெரியவர்களும் பார்த்து ரசிக்கும் ஒரு கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

தவறு செய்வது மனிதர்களின் இயல்பு என்று கூறலாம். ஆனால், தவறு செய்து, உடனடியாக அதை உணர்ந்து இறைவனிடம் மன்றாடி மன்னிப்பு கேட்பதை அல்லாஹ் விரும்புகிறான், அவர்களை மன்னித்தும் விடுகிறான்.

செய்த தவறுகளுக்கு எல்லா நிலைகளிலும் மன்னிப்பு கேட்கக் கூடியவர்களாக இருப்போம்! எல்லா விதமான பாவங்களில் இருந்தும் விலகி இருந்து நரக நெருப்பில் இருந்து பாதுகாப்பு பெறுவோம். நாம் தனிமையில் இருக்கும் போது நம்முடைய உள்ளத்தில் இறையச்சத்தோடு, மெய் நடுங்கி கண்ணீர் விட்டு இரு கரம் ஏந்தி இறைவனிடம் மன்னிப்புக் கேட்டால், நிச்சயமாக நமது பாவம் மன்னிக்கப்படும்.

அபூ மதீஹா…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT