Sunday, May 5, 2024
Home » காய்கறிச் செய்கையாளருக்கு இழைக்கப்படுகின்ற அநீதி!

காய்கறிச் செய்கையாளருக்கு இழைக்கப்படுகின்ற அநீதி!

by Gayan Abeykoon
February 23, 2024 1:00 am 0 comment

சாதாரண மக்களுக்கு எட்டாத உயரத்தில், மிகவும் உச்சத்தில் இருந்த காய்கறி விலைகள் சமீப தினங்களாக படிப்படியாகக் குறைவடைந்து வருகின்றன. ஆயிரம் ரூபாவையும் தாண்டியிருந்த ஒரு கிலோ மரக்கறியின் விலை தற்போது சுமார்  அரைவாசியாகக் குறைந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். நுகர்வோருக்கு மகிழ்ச்சியளிக்கின்ற விடயம் இதுவாகும்.

மலைநாட்டு மரக்கறி வகைகள் மாத்திரமன்றி, ஏனைய பிரதேச காய்கறி வகைகளின் விலைகளும் கடந்த இரு மாதகாலத்துக்கு மேலாக அதிகரித்துக் காணப்பட்டன. நாட்டின் பல பகுதிகளில் சில மாதங்களாக தொடர்ச்சியான மழை பெய்து வந்த காரணத்தினாலேயே மரக்கறிகளின் விலைகள் அதிகரித்திருந்தன. தொடர்ச்சியான மழை மற்றும் வெள்ளம் காரணமாக மரக்கறிப் பயிர்கள் பெருமளவில் அழிந்து விட்டன. மலைநாட்டுப் பிரதேசங்களிலும் இவ்வாறான நிலைமையே ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக ஒரு கிலோ மரக்கறி இரண்டாயிரம் ரூபாவையும் தாண்டி விற்பனையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது மழை தணிந்து விட்டது. அதன் காரணமாக மரக்கறிச் செய்கையாளர்கள் புதிதாக செய்கையை ஏற்கனவே ஆரம்பித்து விட்டனர். புதிய பயிர்களின் அறுவடை படிப்படியாக ஆரம்பமாவதால் காய்கறிகளின் விலைகள் படிப்படியாகக் குறைவடைந்து வருகின்றன. நாட்டின் வடபகுதியில் இருந்தும் காய்கறிகள் தென்பகுதிக்குக் கொண்டுவரப்படுவதனால் அவற்றின் விலைகள் படிப்படியாகக் குறைவடைந்து கொண்டு வருவதைக் காண முடிகின்றது.

இலங்கை மிகவும் வளமானதொரு நாடாகும். நிலவளம், நீர்வளம் மற்றும் வாய்ப்பான சீதோஷண நிலைமை கொண்ட நாடாக இலங்கை விளங்குகின்றது. நெல், காய்கறி மற்றும் உபஉணவுப் பயிர்ச்செய்கைக்கு வாய்ப்பான நாடாக இலங்கை உள்ளது. நிலக்கீழ் நீரும் போதுமான அளவு உள்ளதனால் மரக்கறிச் செய்கைக்கு மிகவும் வாய்ப்பான நாடாக இலங்கை விளங்குகின்றது. உள்நாட்டு மரக்கறிகள் மற்றும் மேல்நாட்டு மரக்கறிச் செய்கைகளுக்கு ஏதுவான பிரதேசங்கள் இலங்கையில் காணப்படுவதால் வருடத்தின் எக்காலப் பகுதியிலும் காய்கறிச் செய்கையை இங்கு மேற்கொள்ளக் கூடியதாக உள்ளது.

ஆனாலும் எமது நாட்டில் காய்கறி உற்பத்தி அடிக்கடி வீழ்ச்சியடைவதும், அதன் காரணமாக அவற்றின் விலை உயர்வதும் பெரும் பிரச்சினையாக உள்ளது. மரக்கறி விலை உயர்வின் காரணமாக நுகர்வோர் மாத்திரமன்றி உற்பத்தியாளர்களும் வருமானம் குறைந்து பாதிக்கப்படுகின்றனர். ஆனால் உற்பத்தியாளர்களிடமிருந்து அவற்றை வாங்கி வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்ற இடைத்தரகர்கள் பாதிக்கப்படுவது குறைவாகும்.

மரக்கறி விலை உயர்வுக்கு ‘மாபியாக்கள்’ கூட காரணமாக அமைந்து விடுகின்றனர். நகரப் பகுதிகளில் உள்ள சந்தைகளில் காய்கறி விலைகளைத் தீர்மானிப்பவர்கள் இந்த மரக்கறி மாபியாக்கள் ஆவர். அவர்கள் காய்கறிகளுக்கு அதிக விலையைத் தீர்மானிக்கின்றனர். அவர்களது பிடியிலிருந்து காய்கறி வர்த்தகம் தப்பிக் கொள்வது இலகுவான காரியமல்ல.

காய்கறிச் செய்கையாளர்கள் எதிர்நோக்குகின்ற துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல. நிலத்தைப் பண்படுத்துவதில் இருந்து அறுவடையைப் பெறுகின்ற காலம்வரை அவர்களின் சிரமங்கள் மிகவும் அதிகம். காய்கறிச் செய்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் பல இடங்களிலும் கடன் பெற்றுத்தான் கமச்செய்கைளில் ஈடுபடத் தொடங்குகின்றனர். பயிர்விதைகளுக்கான செலவினம், பீடைநாசினிகள், கூலித்தொழிலாளர்களுக்கான சம்பளம், பிராணிகளிடமிருந்து பாதுகாப்பு என்றெல்லாம் கமநலச் செய்கையில் அவர்கள் பெருமளவு பணத்தைச் செலவிட வேண்டியுள்ளது.

அதேசமயம் கடும்மழை, வெள்ளம், வரட்சி போன்ற இயற்கை அனர்த்தங்களும் பயிர்ச்செய்கையைப் பாழாக்கி விடுவதுண்டு. இத்தனை சவால்களிலிருந்து பயிர்களைப் பாதுகாத்த பின்னர் கிடைக்கின்ற அறுவடையை அவர்களால் நியாயமான விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் போகின்றது. கொழும்பு போன்ற நகர்ப்பகுதிகளிலிருந்து காய்கறிகளைக் கொள்வனவு செய்வதற்காக காலடி தேடி வருகின்ற மொத்த விற்பனையாளர்கள் மிகவும் குறைந்த விலையிலேயே காய்கறிகளைக் கொள்வனவு செய்கின்றனர்.

ஆனால் குறைந்த விலையில் காய்கறிகளைக் கொள்வனவு செய்கின்ற மொத்த வியாபாரிகள் அக்காய்கறிகளை நகர்ப்பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் அவ்வியாபாரிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கின்றது. அவர்கள் என்றும் செல்வந்தர்களாகவே உள்ளனர். ஆனால் அவர்களுக்கு மரக்கறிகளை விற்பனை செய்கின்ற பயிர்ச்செய்கையாளர்களோ என்றும் வறுமையிலேயே வாடுகின்றனர்.

காய்கறிச் செய்கையாளர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு உழைப்புக்ேகற்ப ஊதியம் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை. அவர்களுடைய உழைப்பானது வியாபாரிகளால் உறிஞ்சப்படுகின்றது. எத்தனையோ துன்பங்களின் மத்தியில் பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்ற அவர்களால் மிகச்சிறு வருமானத்தையே ஈட்டிக் கொள்ள முடிகின்றது.

இவ்வாறான அநீதிக்கு முடிவு காணப்படுவது அவசியமாகும். காய்கறிச் செய்கையாளர்களின் காலடிக்குச் சென்று மரக்கறிகளைக் கொள்வனவு செய்கின்ற பொறுப்பை நியாயமான நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளாதவரை இந்த அவலத்துக்கு முடிவு கிடைக்கப் போவதில்லை.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT