Monday, April 29, 2024
Home » இறைவனிடமிருந்து நம்மை பிரிக்கும் சோதனைகளை வெற்றி கொள்வோம்

இறைவனிடமிருந்து நம்மை பிரிக்கும் சோதனைகளை வெற்றி கொள்வோம்

by sachintha
February 20, 2024 10:09 am 0 comment

திருப்பயணிகளுக்கான மறையுரையில் திருத்தந்தை பிரான்சிஸ்

இயேசுவைப் போல நாமும் அமைதி, உள்ளார்ந்த உலகம், இதயத்தின் குரலுக்கு செவிசாய்த்தல், உண்மையுடன் தொடர்பு கொள்ளுதல் என்ற பாலைவனத்திற்குள் நுழைய இத் தவக்காலத்தில் அழைக்கப்படுகின்றோம் என திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்.

தீயொழுக்கங்கள், செல்வத்தின் மீதான பற்று, வீண் விருப்பம், புகழ் பேராசை என்னும் காட்டு விலங்குகளிடையே நாம் வாழ்கின்றோம் என்பதை சுட்டிக்காட்டிய அவர், தவக்காலத்தின் முதல் வார நற்செய்தி வாசகமான இயேசு சோதிக்கப்படுதல் என்னும் பகுதி குறித்த தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.

கடந்த 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய உரையின் போது இவ்வாறு கூறிய அவர்,வானதூதர்களால் இயேசு பாலைவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது போல நாமும் அமைதி என்னும் பாலைவனத்திற்குள் செல்ல இத்தவக்காலத்தில் அழைக்கப்படுகின்றோம் என்றார்.

இயேசு காட்டு விலங்குகளிடையே இருந்தார் வானதூதர்கள் அவருக்குப் பணிவிடை செய்ததுபோல நாமும் தீயொழுக்கங்கள் என்னும் காட்டுவிலங்குகளிடையேயும் நல் எண்ணங்கள் மற்றும் நல்உணர்வுகள் என்னும் வானதூதர்களால் பணிவிடை செய்யப்படுகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார். சோதனைகள் நம்மை இறைவனிடம் இருந்து பிரிக்கின்றன நல்ல தெய்வீக முயற்சிகள் நம்மை ஒருங்கிணைத்து நல்லிணக்கத்திற்கு கொண்டு வருகின்றன, அவை இதயத்தை அமைதிப்படுத்துகின்றன. விண்ணகத்தின் சுவையை, கடவுளின் ஆற்றலை நாம் இன்னும் அதிகமதிகமாகப் புரிந்துகொள்ள அமைதிக்குள் நுழைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

கடவுளின் குரலானது நமது இதயத்தோடு உரையாட நம்மை நாம் அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இத் தவக்காலத்தில் அமைதிநிறைந்த மனதுடன் வழிபடவும், இறைவனின் குரலை நம் வாழ்வில் கேட்கவும், அச்சமின்றி இருக்கவும், உலகுக்குரிய காரியங்களை அகற்றிவிட்டு, இறைவனுக்குரிய செயல்களில் நம் இதயங்களைத் திருப்பவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாம் வெறும் தூசு என்பதையும், இந்தத் தூசு கடவுளால் பாதுகாக்கப்படுகிறது என்பதையும் ஒப்புக்கொள்வோம் என்பதை மீண்டும் நினைவூட்டிய திருத்தந்தை, நாம் பாவத்தின் சாம்பலில் இருந்து இயேசு கிறிஸ்துவிலும் தூய ஆவியிலும் புதிய வாழ்க்கைக்கு மீண்டும் பிறப்போம் என்றும் நம்பிக்கையூட்டினார்.

மெரினா ராஜ்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT