Sunday, April 28, 2024
Home » உலகின் 37ஆவது உறுதியான இஸ்லாமிய வங்கியாக தரப்படுத்தப்பட்ட அமானா வங்கி

உலகின் 37ஆவது உறுதியான இஸ்லாமிய வங்கியாக தரப்படுத்தப்பட்ட அமானா வங்கி

by Rizwan Segu Mohideen
February 20, 2024 11:28 am 0 comment

2023 ஆம் ஆண்டில் உலகின் உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் அமானா வங்கி 37 ஆம் இடத்துக்கு உயர்வடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. ஏசியன் பாங்கர் தரப்படுத்தலில் இந்த உயர்வு பதிவாகியிருந்தது. 2022 ஆம் ஆண்டில் 82 ஆம் இடத்தில் காணப்பட்ட நிலையில், இந்த உயர்வை எய்தியுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்காசிய பிராந்தியங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற பல இஸ்லாமிய வங்கிகளை பின்தள்ளி, அமானா வங்கி முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய ரீதியில் காணப்படும் வட்டியின் அடிப்படையில் இயங்காத நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் நிதிப் பெறுபேறுகள் மற்றும் ஐந்தொகைகளை மதிப்பீடு செய்து, ஏசியன் பாங்கரினால் வழங்கப்பட்ட விவரமான புள்ளியிடலில் அமானா வங்கியின் உறுதியான நிதிச் செயற்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. பரிபூரணமான மற்றும் வெளிப்படையான புள்ளி விவர அட்டையினால் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், ஐந்தொகை நிதிச் செயற்பாடுகளின் ஆறு பிரிவுகளை மதிப்பீடு செய்திருந்தது. அதில் அளவிடும் ஆற்றல், ஐந்தொகை வளர்ச்சி, இடர் கோவை, இலாபகரத்தன்மை, சொத்தின் தரம் மற்றும் திரள்வுத் தன்மை போன்றன அடங்கியிருந்தன.

2023 மூன்றாம் காலாண்டு நிதிப் பெறுபேறுகளின் அடிப்படையில், அமானா வங்கி நிறைவடைந்த ஒன்பது மாத காலப்பகுதியில் வரிக்கு முந்திய இலாபம் மற்றும் வரிக்கு பிந்திய இலாபம் ஆகியவற்றில் முறையே 78% மற்றும் 98% வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தன. மக்களுக்கு நட்பான வங்கி மாதிரியில் அதிகரித்துச் செல்லும் கேள்வியை உறுதி செய்து, வங்கியின் மொத்த வைப்புகள் 14% இனால் வளர்ச்சியடைந்து ரூ. 128 பில்லியனாக உயர்வடைந்திருந்ததுடன், முற்பணங்கள் 5% இனால் உயர்ந்திருந்தது. தொழிற்துறையில் நிலவிய நிலை 3 மதிப்பிறக்க நிதியளிப்பு விகிதமான 1.6% ஐ வங்கி தொடர்ந்தும் கொண்டிருந்தது. அண்மையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட உரிமைப் பங்கு வழங்கலினூடாக அமானா வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 150 பில்லியன் மைல்கல்லை கடந்திருந்தது.

அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “ஏசியன் பாங்கர் தரப்படுத்தல்களில் அமானா வங்கியின் தொடர்ச்சியான முன்னேற்றத்தைக் காண்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். நிதி வலிமை, மீட்சி மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய பெறுமதிகள் போன்றவற்றில் எமது அர்ப்பணிப்புக்கான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. சர்வதேச மட்டத்தில் காணப்படும் இஸ்லாமிய வங்கிகள் வரிசையில் அமானா வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளமை உண்மையில் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளதுடன், எமது சாதனைகள் தொடர்பில் திருப்தி கொள்ளக்கூடியதாகவும் உள்ளது. எமது அணியினரின் அர்ப்பணிப்பு மற்றும் மூலோபாய ரீதியில் திட்டமிடப்பட்ட செயற்பாடுகளினூடாக எம்மால் முன்நோக்கி செல்ல முடிந்துள்ளதுடன், சவால்கள் நிறைந்த பொருளாதாரச் சூழலிலும் சிறப்பாக இயங்க முடிந்திருந்தது. சிறப்பை நோக்கிய பயணத்தில் நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இயங்க எதிர்பார்ப்பதுடன், எதிர்காலத்திலும் எமது முன்னேற்றகரமான பயணத்தை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

அமானா வங்கி பற்றி
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 100 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக த ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது.

அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT