Sunday, April 28, 2024
Home » நடுவர்களின் பாரபட்சம் காரணமாக தவறிப் போகும் மாணவர் திறமை

நடுவர்களின் பாரபட்சம் காரணமாக தவறிப் போகும் மாணவர் திறமை

by sachintha
February 16, 2024 11:25 am 0 comment

மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளில், அவர்களின் கலையாற்றலை வெளிப்படுத்துவதில் போட்டிகள் முக்கியமானவை. போட்டிகளில் பங்குகொள்ளும் எல்லோருமே வெற்றி பெற வேண்டுமென்ற முனைப்புடனேயே பங்கேற்கின்றனர். அதனால் நடுவர்களின் முடிவினை ஏற்றுக் கொண்டு திருப்திப்படுகின்றவர்கள் குறைவு என்றே சொல்லலாம்.

போட்டியொன்றினை நடத்தி முடிப்பதிலும் பொருத்தமான தெரிவுகளை மேற்கொள்வதிலும் நடுவர் பணி ஈடு இணையற்றது. அப்பணிக்காகக் கொடுக்கப்படும் சிறியதொரு கொடுப்பனவையும் கவனத்தில் கொள்ளாமல் தமது நேர மற்றும் பண விரயங்களை மேற்கொண்டு நடுவர் பணிக்காக பங்கேற்கும் இத்தகையோரின் பணிக்கு நிகரில்லையென்றே குறிப்பிடலாம்.

நூறு வீதமான நேர்மையுடன் நடுவர் பணி செய்வது கடினம்.

உறவுமுறை,பாடசாலை, பிரதேசம்,இனம் முதலிய பல காரணங்களால் திறமையற்றவர்களை முன்தள்ளி விடும் நேர்மையற்ற நடுவர் பணியினால் பாடசாலையோ, வலயமோ, மாகாணமோ தமது இலக்கை எட்ட முடியாமல் போகின்றது.

நடுவர் என்பது ‘பணி’ என்றே அழைக்கப்படுகின்றது. பணி என்பது பிரதிபலனற்ற நேர்மையான கைங்கரியத்தைக் குறிக்கும் சொல்லாகும். ஒரு போட்டிக்காக நடுவர் பணிக்கு அழைக்கப்படுகின்றவர்கள் துறைசார்ந்தவர்களாகவே உள்ளனர். அவர்களில் பலர் ஆசிரியர்களாகவும் எழுத்தாளர்களாகவுமே அமைகின்றனர். சமூகத்தை வழிநடத்தும் பொறுப்புமிக்க இவர்களில் ஒருசாரார் மேற்கொள்ளும் செயற்பாடுகளால் நேர்மையான போட்டிகளை நடத்த முடியாமல் போய் விடுகிறது.

பிழையான தெரிவுகளால் முன்னேறிச் செல்ல வேண்டிவர்கள் இலக்கிழந்து விடுவதுடன் திறமையற்றவர்கள் அடுத்தடுத்த கட்டங்களை தாண்ட முடியாமல் தோல்விகளைச் சந்தித்துத் திரும்புகின்றனர்.

நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது என்பதன் நோக்கம் அத்தீர்ப்பில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை என்பதே. ஆனால் இவ்வசனத்தை சாதகமாக்கிச் செயற்படுகின்ற நடுவர் தீர்ப்புக்களால் மாணவர் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். எதிர்பார்ப்புமிக்க மாணவர்கள் தங்களுக்கான நிலை இழக்கப்படும் போது மனம் உடைந்து விடுகின்றனர். இதனால் எத்தனையோ திறமையான மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொள்வதில் இருந்து தவிர்ந்து விடுகின்றனர்.

“வேதாளம் சேருமே, வெள்ளருக்கே பூக்குமே, பாதாள மூலி படருமே, மூதேவி சென்றிருந்து வாழ்வாளே சேடன் குடி புகுமே மன்றோரஞ் சொன்னார் மனை” என்ற ஔவையாரின் பாடல் வரிகள் பக்கச்சார்பான நடுவம் பற்றியதான எச்சரிக்கையாகவே இருந்து வருகின்றது.

நடுவர் பணி மகத்தானது. புனிதமானது. அப்பணியின் தத்ரூபத்தை விளங்கி அதனை நிறைவேற்றுவதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் மனம் திருப்தியடைக்கூடிய அறுவடைகளின் காரணகர்த்தாக்களாக நடுவர்கள் அமைந்து விடுகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT