Tuesday, April 30, 2024
Home » பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களுக்கு ரூ.10 பில். ஒதுக்கீடு
2024 வரவு செலவுத் திட்ட முன்மொழிவில்

பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களுக்கு ரூ.10 பில். ஒதுக்கீடு

மாகாண சபை, உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்த தேவையான நிதி 2025 பட்ஜட்டில் பெறவும் அமைச்சரவையில் கவனம்

by mahesh
February 7, 2024 6:50 am 0 comment

அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் மட்டுப்படுத்தப் பட்ட நிதி செலவுடன் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு மூலம் இவ்வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலையும் நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்கான செலவை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் அமைச்சரவையில் கவனம் செலுத்தப்பட்டடுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் தொடர்ந்தும் விளக்கமளித்த அமைச்சர், மாகாண சபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அது தொடர்பில் அமைச்சரவையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் 2025 ஆம் ஆண்டு இவ்விரண்டு தேர்தல்களையும் நடத்துவதற்கு முன், இத்தேர்தல் சட்டம் மீதான திருத்தத்தை பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ள மேற்படி விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின்படி, இக்காலத்தில் தேவையான தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். இதற்குள்ள பெரும் தடை போதியளவு நிதி இல்லாமையே.

இவ்வாறான நிலை காணப்பட்டாலும் 2024 இல், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலையும் நடத்துவதற்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார். அத்துடன், 2025 ஆம் ஆண்டு மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்தமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது. 2023 ஆம் ஆண்டில் கணக்காய்வு செய்யப்படாத அறிக்கைக்கிணங்க, கடந்த வருடத்தில் வருமானமாக நாட்டுக்கு கிடைத்துள்ளதில் தேசிய இறைவரித் திணைக்களத்துக்கு 1,550 பில்லியன் கிடைத்துள்ளது. சுங்கத் திணைக்களத்துக்கு 922 பில்லியனும் கலால்வரி திணைக்களத்துக்கு 169 பில்லியனும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துக்கு 20 பில்லியன் ரூபாவும் கிடைத்துள்ளது. வரி அல்லாத வருமானமாக 219 பில்லியனும் வங்கிகளில் வைப்பீட்டின் மூலம் 303 பில்லியனும் என அனைத்து வகைகளிலும் 2023 ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கு 03 ட்ரில்லியன் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT