Saturday, April 27, 2024
Home » பொருளாதார உறவுகள் புத்துயிர் பெற வர்த்தக சமூகம் ஒன்றிணைய வேண்டும்
இலங்கை – தாய்லாந்துக்கு இடையே

பொருளாதார உறவுகள் புத்துயிர் பெற வர்த்தக சமூகம் ஒன்றிணைய வேண்டும்

வர்த்தக சந்திப்பில் இருநாட்டு தலைவர்களும் வலியுறுத்து

by damith
February 5, 2024 7:50 am 0 comment

இந்து சமுத்திரத்தில் இலங்கை மற்றும் ஆசிய பசுபிக் வலயத்தில் தாய்லாந்தின் மூலோபாய முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, இலங்கை – தாய்லாந்து பொருளாதார உறவை மீள கட்டியெழுப்புவதற்கு இரு நாடுகளின் முதலீட்டாளர்களும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரினார்.

தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் உள்ளிட்ட தூதுக்குழுவினரின் இலங்கை விஜயத்துடன் இணைந்ததாக (03) கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை – தாய்லாந்து வர்த்தக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

தாய்லாந்து பிரதமர் தலைமையிலான குழுவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவேற்றதோடு தாய்லாந்தின் உணவு, உணவு தயாரிப்பு, சுகாதாரம், எரிசக்தி, விருந்தோம்பல், சுற்றுலா, மீன்பிடி, விவசாயம் மற்றும் உற்பத்தித் துறை என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல முன்னணி நிறுவனங்களின் வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆசியான் நாடுடன் கைச்சாத்திடப்பட்ட இரண்டாவது சுதந்திர வர்த்தக உடன்படிக்கையாக இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (FTA) கைச்சாத்திடப்படுவதாக குறிப்பிட்டார்.

சுபோதாய் இராச்சிய காலத்துக்கு முன்பே இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான வரலாற்று வர்த்தக உறவை நினைவுகூர்ந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இராமாயணம் மற்றும் தேரவாத பௌத்தம் போன்ற பாரம்பரியங்கள் உட்பட இரு நாடுகளுக்கிடையிலான கலாச்சார உறவுகளையும் நினைவுகூர்ந்தார்.

இலங்கை துறைமுகங்களை ஆசிய பசுபிக் பிராந்தியத்துடன் இணைக்கும் கிராஹ் கால்வாயில் (Krah Canal) நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தரைப்பாலம் தொடர்பில் தமது ஆர்வத்தை வெளிப்படுத்திய ஜனாதிபதி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விவசாயம் மற்றும் மீன்பிடித்துறையின் நவீனமயமாக்கல் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடினார்.

இலங்கையின் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்துக்காக தாய்லாந்து பிரதமரின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட வர்த்தக நோக்கிலான தூரியன் பயிர்ச்செய்கை திட்டத்தையும் ஜனாதிபதி பாராட்டினார். மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களில் சுற்றுலாத்துறைக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களை வழங்கும் திட்டங்களுடன் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கிடைத்துள்ள புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி பரஸ்பர நன்மைகளை அடைய இரு நாடுகளின் வர்த்தக சமூகமும் ஒன்றிணைந்து செயற்படுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார்.

விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் துறையில் இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கருத்துத் தெரிவித்த தாய்லாந்து பிரதமர், அது தொடர்பான திறன்களை மேம்படுத்துவதற்கு இரு நாடுகளுக்கும் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கான வாய்ப்பு தொடர்பிலும் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கும் தாய்லாந்துக்குமிடையிலான வரலாற்று கலாச்சார மற்றும் மத உறவுகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த தாய்லாந்து பிரதமர், தாய்லாந்து சர்வதேச விமானச் சேவை மார்ச் 31 முதல் பெங்கொக் மற்றும் கொழும்பு இடையே தினசரி விமான சேவையை மீண்டும் தொடங்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, உற்பத்தி மற்றும் எரிசக்தி துறைகளில் முதலீடு செய்வதற்கு தாய்லாந்து நிறுவனங்களை பிரதமர் ஊக்குவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT