Friday, May 10, 2024
Home » காசாவின் ரபா பகுதிக்கு போரை ‘விரிவுபடுத்த’ இஸ்ரேல் திட்டம்

காசாவின் ரபா பகுதிக்கு போரை ‘விரிவுபடுத்த’ இஸ்ரேல் திட்டம்

போர் நிறுத்த முயற்சிகளும் தீவிரம்

by gayan
February 3, 2024 9:36 am 0 comment

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான இராஜதந்திர முயற்சிகள் தீவிரம் அடைந்திருக்கும் சூழலில், தற்போது தெற்கு நகரான கான் யூனிஸில் உக்கிர தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் இராணுவம், மேலும் தெற்காக எகிப்து எல்லையை ஒட்டிய ரபா பகுதியை நோக்கி முன்னேற தயாராகி வருகிறது.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன், கடந்த வியாழக்கிழமை (01) வெளியிட்ட அறிவிப்பில், காசாவின் தெற்கு நகரான கான் யூனிஸில் பலஸ்தீன போராளிகளுக்கு எதிரான மோதல் வெற்றி அளித்திருக்கும் நிலையில் படையினர் ரபாவை நோக்கி முன்னேறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலியப் படை காசாவின் கான் யூனிஸ் நகரை மையப்படுத்தி கடந்த சில வாரங்களாக வான், தரை மார்க்கமாக உக்கிரத் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு, இன்னும் ஆயிரக்கணக்கானோர் மேலும் தெற்கை நோக்கி வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில் காசாவில் சுமார் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் தற்போது ரபா பகுதியில் அடைக்கலம் பெற்றிருப்பதோடு கடும் குளிர் மற்றும் பட்டினிக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் அரச கட்டடங்களில் தங்கி வருகின்றனர். “கான் யூனிஸில் எமது இலக்கை நாம் எட்டி வருவதோடு நாம் ரபாவையும் அடைந்து எமக்கு அச்சுறுத்தலான பயங்கரவாத கூறுகளை ஒழிப்போம்” என்று கல்லன்ட் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது ரபா பகுதியில் அடைக்கலம் பெற்றிருப்பவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே காசா மக்கள் வடக்கு காசா தொடக்கம் தெற்கு காசாவின் விளிம்பு வரை இஸ்ரேலிய படைகளால் துரத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரபா பகுதியை நோக்கி இஸ்ரேலிய படை முன்னேறுவது தொடர்பில் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். 55 வயது ஆறு குழந்தைகளின் தந்தையான எமாத் என்பவர் ரோய்ட்டர்ஸுக்கு கூறும்போது, இஸ்ரேலிய டாங்கிகள் தொடர்ந்து முன்னேறி வந்தால் இங்கேயே இருந்து உயிரிழப்பது அல்லது சுவரைத் தாண்டி எகிப்துக்குள் செல்வது ஆகிய இரண்டு தேர்வு மாத்திரமே எஞ்சி இருக்கும்” என்றார்.

“காசா மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் தங்போது ரபாவிலேயே உள்ளனர். இங்கே டாங்கிகள் நுழைந்தால் இந்தப் போரில் இதுவரை இல்லாத அளவும் பேரழிவாக இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேநேரம் போர் நிறுத்தம் ஒன்றுக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கும் முன்மொழிவுக்கு காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் அமைப்பிடம் இருந்து எகிப்து மற்றும் கட்டார் மத்தியஸ்தர்கள் சாதகமான முடிவொன்றை எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

பாரிஸில் அமெரிக்கா, இஸ்ரேல், எகிப்து மற்றும் கட்டார் அதிகாரிகளுக்கு இடையே கடந்த வாரம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தே ஆறு வாரங்கள் போர் நிறுத்தம் ஒன்றுக்கான திட்டம் ஒன்று முன்மொழியப்பட்டது.

இந்த முன்மொழிவின் முதல் கட்டத்தில் 40 நாட்கள் போர் நிறுத்தம் ஒன்று பரிந்துரைக்கப்பட்டிருப்பதோடு இதன்போது ஹமாஸ் பிடியில் தொடர்ந்து இருக்கும் 100க்கும் அதிகமான பணயக்கைதிகளில் பொதுமக்கள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளனர் என்று பலஸ்தீன அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அடுத்த கட்டங்களில் இஸ்ரேலிய படையினர் மற்றும் இறந்த பணயக்கைதிகளின் சடலங்கள் விடுவிக்கப்படவுள்ளன.

இந்த முன்மொழிவுக்கு இஸ்ரேல் தரப்பில் இருந்து ஒப்புதல் கிடைத்திருப்பதாகவும் ஹமாஸ் தரப்பில் இருந்து சாதகமான பதிலை எதிர்பார்த்திருப்பதாகவும் கட்டார் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மாஜித் அல் அன்ஸாரி தெரிவித்துள்ளார்.

எனினும் இது தொடர்பில் பரிசீலித்து வருவதாக ஹமாஸ் குறிப்பிட்டிருப்பதோடு உறுதியான எந்த முடிவும் அளிக்கப்படவில்லை. காசாவில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் வெளியேறி நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றை அந்த அமைப்பு வலியுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் நீடிக்கும் இந்தப் போரில் நீண்ட போர் நிறுத்தம் ஒன்றாக இது அமையவிருப்பதோடு, முன்னதாக கடந்த நவம்பரில் எட்டப்பட்ட போர் நிறுத்தம் ஒரு வாரம் மாத்திரமே நீடித்தமை குறிப்பிடத்தக்கது.

தொடரும் உயிரிழப்புகள்

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு தொடக்கம் 105 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக தெற்கு காசாவின் பிரதான நகரான கான் யூனிஸில் வான் மற்றும் பீரங்கி தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருந்தன.

தெற்கு காசாவில் உள்ள ரபா புறநகர் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் நாக்கு பேர் கொல்லப்பட்டு பலரும் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு அடைக்கலம் வழங்கும் கான் யூனிஸ் நகரில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது இடம்பெற்ற தாக்குதலில் மேலும் ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டுள்ளார்.

தற்போது கான் யூனிஸில் அடைக்கலம் பெற்றிருக்கும் ஐந்து குழந்தைகளின் தந்தையான 49 வயது ஒசாமா அஹமது, நகருக்கு வான், தரை மற்றும் கடலிலிருந்து இடைவிடாது குண்டு விழுவதாகவும் இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

“இப்போது எமக்கு போர் நிறுத்தம் ஒன்று மாத்திரமே தேவையாக உள்ளது” என்று ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அவர் தொலைபேசி ஊடாகத் தெரிவித்தார்.

இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்கள் நான்கு மாதங்களை நெருங்கி இருக்கும் நிலையில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர்.

இஸ்ரேலியப் படைகள் அம்பூலன்ஸ்கள் மற்றும் தற்காப்புக் குழுவினரை அணுகுவதைத் தடுப்பதால், இடிபாடுகளுக்கு அடியிலும் வீதிகளிலும் இன்னும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அல்–அமல் மருத்துவமனை மற்றும் தெற்கு காசாவின் கான் யூனிஸில் உள்ள பலஸ்தீன செம்பிறை சங்கக் கட்டடத்திற்கு அருகாமையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் தொடர்ச்சியாக 11ஆவது நாளாகத் தொடர்ந்ததாக அதிகாரபூர்வ பலஸ்தீனிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தப் போரினால் காசாவில் 50 வீதத்துக்கும் அதிகமான கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டு அல்லது சேதமாக்கப்பட்டு உயிர்வாழ தகுதியற்ற சூழலை ஏற்படுத்தி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய முற்றுகையினால் காசாவில் உணவு, நீர், மருந்து மற்றும் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

மனிதாபிமான நெருக்கடி தீவிரம் அடைந்து உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வரும் சூழலில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான சர்வதேச அழத்தமும் அதிகரித்துள்ளது.

இந்தப் போர் பிராந்தியம் எங்கும் பரவும் நெருக்கடி அதிகரித்திருக்கும் சூழலில் சிரிய தலைநகர் டமஸ்கஸில் இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று நடத்திய தாக்குதலில் ஈராக் மற்றும் ஈரான் நாட்டவர்கள் உட்பட மூன்று ஈரான் ஆதரவு போராளிகள் கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

இதில் டமஸ்கஸில் உள்ள ஈரான் புரட்சிப் படை ஆலோசகர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக ஈரானிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

முன்னதாக சிரிய அரச செய்தி நிறுவனமான சானா அந்நாட்டு இராணுவத்தை மேற்கோள்காட்டி வெளியிட்ட செய்தியில், கோலன் குன்று பகுதியில் இருந்து இஸ்ரேல் ஏவிய பல ஏவுகணைகள் இராணுவத்தால் வீழ்த்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தெற்கு லெபனானின் மீது இஸ்ரேல் நேற்று வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. லெபனான் ஹிஸ்புல்லாக்கள் மற்றும் இஸ்ரேல் இராணுவத்திற்கு இடையே தொடர்ச்சியாக மோதல் நீடிக்கும் நிலையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT