Monday, May 20, 2024
Home » கொள்கலன் செயற்பாட்டு திறனுக்கு புதிதாக மூன்று கேன்ட்ரி கிரேன்கள்

கொள்கலன் செயற்பாட்டு திறனுக்கு புதிதாக மூன்று கேன்ட்ரி கிரேன்கள்

அமைச்சர் நிமலிடம் உத்தியோகபூர்வமாக கையளிப்பு

by gayan
February 3, 2024 9:50 am 0 comment

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் இயங்குவதற்கு கொள்முதல் செய்யப்பட்ட 12 கேன்ட்ரி கிரேன்களில் முதல் 03 கிரேன்கள் நேற்று( 02) ஷென் ஹுவா-24 கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

கிழக்கு முனையத்தில் 12 கேன்ட்ரி கிரேன்கள் மற்றும் 40 டெர்மினல் கிரேன்கள் இயக்கப்படவுள்ளன. இதன் மொத்த பெறுமதி 282 மில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கேன்ட்ரி கிரேன்கள் 72 மீற்றர் நீளம் கொண்டவை மற்றும் ஒரே நேரத்தில் 26 கொள்கலன்களை கொண்ட கப்பலை கையாளக்கூடியவை. மொத்த செயற்பாட்டுத் திறன் 75 மெற்றிக்தொன் என குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு முனையத்தின் நீளம் 1,300 மீற்றர் கொண்டதுடன், இதுவரை 600 மீற்றர் கட்டப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த முனையம் கட்டப்பட்ட பின்னர் 400 மீற்றர் நீளம் கொண்ட 03 பெரிய கப்பல்களை ஒரே நேரத்தில் கையாள முடியும். முனையத்தின் விளிம்பில் ஆழம் 18-20 மீற்றர் மற்றும் முனையத்தின் மொத்த பரப்பளவு 72 ஹெக்டேயர் ஆகும். கிழக்கு முனையம் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டவுடன் வருடாந்தம் கையாளக்கூடிய கொள்கலன் கொள்ளளவு 2.4 மில்லியனாக இருக்குமென இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் தற்போது செயற்படும் முனையங்களில் மிகவும் மூலோபாய முனையம் கிழக்கு முனையமாகும். இது இலங்கை துறைமுக அதிகார சபையால் நிர்வகிக்கப்படுகிறது. மேலும் கோவிட்-19க்கு பிந்தைய சூழ்நிலை மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடி இருந்த போதிலும், இலங்கை துறைமுக அதிகார சபை, அதன் உயர்மட்ட நிதி முகாமைத்துவத்தின் காரணமாக இந்த முதலீட்டுக்கு தேவையான நிதியை பெற முடிந்தது.

2025ஆம் ஆண்டுக்குள் கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர், மொத்த செயற்பாட்டுத் திறனை அதிகரிப்பதன் மூலம் அதிக கப்பல்களை ஈர்க்கும் திறனை இலங்கை துறைமுக அதிகார சபை பெற்றிருக்கும்.

அத்துடன், கொழும்பு துறைமுகத்தில் வருடாந்த செயற்பாட்டுத் திறனை அதிகரிக்கவும், துறைமுகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடியும் என துறைமுக அதிகார சபை நம்பிக்கை கொண்டுள்ளது.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இந்தக் கப்பலின் கேப்டனிடமிருந்து கேன்ட்ரி கிரேன்களுக்கான ஆவணங்கள் உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொள்ளப்பட்டதுடன், அதன்போது அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர, துறைமுக அதிகார சபையின் தலைவர் கீத் பெர்னார்ட் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT