Friday, May 10, 2024
Home » 404 ஓட்டங்களுடன் வரலாறு படைத்த பிரகார் சதுர்வேதி

404 ஓட்டங்களுடன் வரலாறு படைத்த பிரகார் சதுர்வேதி

- யுவராஜ் சிங் சாதனை தகர்ப்பு

by Prashahini
January 16, 2024 11:03 am 0 comment

இந்தியாவின் கர்நாடகா மாநில ஷிவமோகா நகரில், கேஎஸ்சிஏ நவுலே மைதானத்தில் (KSCA Navule Stadium) 19 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

கர்நாடகா துடுப்பாட்ட வீரர் பிரகார் சதுர்வேதி மும்பைக்கு எதிரான Cooch Behar Trophy எனும் இறுதிப் போட்டியில் 404 ஓட்டங்கள் குவித்து வரலாறு படைத்தார்.

இதன் மூலம் Cooch Behar Trophy இறுதிப் போட்டியில் யுவராஜ் சிங் எடுத்த அதிகபட்ச ஓட்டங்களான 358 ஓட்டங்கள் சாதனையை முறியடித்தார். Cooch Behar Trophy இறுதிப் போட்டியில் முதன் முதலாக 400+ ஓட்டங்கள் விளாசி வரலாறு படைத்துள்ளார் பிரகார் சதுர்வேதி.

மும்பை அணி தன் முதல் இன்னிங்ஸில் 280 ஓட்டங்களுக்கு மடிய தொடர்ந்து ஆடிய கர்நாடகா அணி 8 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 890 ஓட்டங்களை குவித்து வரலாறு படைத்தது. இதில் பிரகார் சதுர்வேதி 46 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 638 பந்துகளில் 404 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் திகழ்ந்தார். இந்த போட்டி சமனில் முடிந்தது.

யுவராஜ் சிங் 1999ஆம் ஆண்டு பிஹார் அணிக்கு எதிராக இதே Cooch Behar Trophy இறுதியில் 358 ஓட்டங்களை விளாசியிருந்தது முந்தைய இறுதிப் போட்டி துடுப்பாட்ட சாதனையாக இருந்தது. ஆனாலும் பிரகார் சதுர்வேதியின் இந்த 404 ஓட்டங்கள் ஒட்டுமொத்த பட்டியலில் 2ஆம் இடமே பிடித்துள்ளது, காரணம் இதற்கு முன் விஜய் ஸோல் என்ற வீரர் மகாராஷ்ட்ரா அணிக்காக அசாமுக்கு எதிராக 451 ஓட்டங்கள் குவித்ததுதான் இன்று வரை சாதனையாக நீடித்து வருகிறது.

இந்த இன்னிங்ஸில் சதுர்வேதி 400+ ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். இதில் ஹர்ஷில் தர்மானியுடன் (169) சேர்த்த 290 ஓட்டங்கள் அதிகபட்ச கூட்டணியாகும். முதலில் U-19 அணியில் பிரகார் சதுர்வேதி தேர்வு செய்யப்படவில்லை. இப்போது இந்த இன்னிங்ஸினால் கர்நாடக சீனியர் அணியில் ரஞ்சி டிராபியில் ஆட வாய்ப்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் தான் ரஞ்சி டிராபி போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக கர்நாடகா 110 ஓட்டங்கள் வெற்றி இலக்கை துரத்த இயலாமல் 53 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது நடந்தேறியுள்ளதால், பிரகார் சதுர்வேதி போன்ற ஒரு வீரரை கர்நாடகா எதிர்நோக்கியுள்ளது.

ஆனால், நல்ல திறமையுள்ள இந்த பிரகார் சதுர்வேதி இந்தியா U-19 உலகக் கோப்பை அணியிலும் இடம்பெறவில்லை. நிறைய ஏமாற்றங்களுக்கு பிறகு ஒரு இளம் வீரர் மீண்டெழுந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னை அணியில் தேர்வு செய்யாமல் விட்டு விட முடியாது என்று வலியுறுத்தியுள்ளார். சதுர்வேதியின் குடும்பம் படித்தவர்கள் நிரம்பிய குடும்பமாகும். இவரது தந்தை பெங்களூருவில் சாஃப்ட்வேர் இன்ஜினியர், தாய் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பில் விஞ்ஞானி.

பிரகார் சதுர்வேதி தன் கல்வியுடன் சேர்ந்து 80 கி.மீ பயணம் செய்து கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்தியவர். இவரது திறமையெனும் பனிமலையின் ஒரு முகடு மட்டுமே இந்த இன்னிங்ஸில் தெரிந்ததாக பயிற்சியாளர் ஜெஸ்வந்த் பெருமையுடன் கூறுகிறார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT