Home » வீதியை புனரமைக்க வடமாகாண ஆளுநருக்கு பணம் அனுப்பிய மக்கள்

வீதியை புனரமைக்க வடமாகாண ஆளுநருக்கு பணம் அனுப்பிய மக்கள்

- 96,000 ரூபாய் காசோலையுடன் கோரிக்கை கடிதமும் அனுப்பி வைப்பு

by Prashahini
January 16, 2024 11:23 am 0 comment

தமது வீதியை விரைந்து புனரமைத்து தருமாறு தமது ஒரு நாள் வேதனத்தை வடமாகாண ஆளுநருக்கு மீசாலை மக்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – மீசாலை வடக்கு  ,இராமாவில் பகுதியில் உள்ள தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை புனரமைத்து தருமாறு , கோரியே 96 பேர் தமது ஒரு நாள் ஊதியமான 1000 ரூபாய் வீதம் 96,000 ரூபாய் காசோலையை வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ்க்கு அனுப்பி வைத்துள்ளனர்.

காசோலையுடன் கோரிக்கை கடிதம் ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளனர்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தென்மராட்சி பிரதேச செயலக பிரிவின் ஜே.320 மற்றும் ஜே.321 ஆகிய கிராம சேவகர் பிரிவுக்கு நடுவே அமைந்துள்ள தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை மேற்குறித்த இரு கிராம சேவகர் பிரிவில் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இரு கிராம சேவகர் பிரிவு மக்கள் தவிர்த்து அயல் கிராமங்களில் உள்ள சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வீரசிங்கம் மத்திய கல்லூரி, வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை ஆகியவற்றி செல்வதற்கும் இந்த வீதியினையே பயன்படுத்தி வருகின்றனர்.

பயணிக்கவே முடியாத நிலையில் பெரிய குழிகளுடன் இவ்வீதி காணப்படுகிறது. இவ்வாறான பாரிய குழிகளால் மழை காலங்களில் அதிக விபத்துக்களும் நடைபெறுகின்றன.

கடந்த 18 வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாமல் காணப்படும் இவ்வீதியினை புனரமைத்து தருமாறு சகல தரப்பினர்களிடம் பல கோரிக்கைகள் முன்வைத்துள்ளோம்.

இருப்பினும் இது வரை எந்தவிதமான சிறு புனரமைப்புக் கூட செய்யப்படாமல் பயன்படுத்தவே முடியாத வீதியாக எமது வீதி மாற்றமடைந்து வருகின்றது.

நாளுக்கு நாள் மிக மோசமான வீதியாக மாறி வரும் இவ்வீதியை உடனடியாக புனரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கையினை முன்வைக்கின்றோம்.

இவ்வீதி புனரமைப்பிற்காக எமது பகுதியில் வசிக்கும் ஒவ்வொருவரிடமும் இருந்து அவர்களின் ஒரு நாள் வேதனமான (1000 ரூபாவை) சேகரித்து வங்கியூடாக சுமார் 96,000 ரூபாவினை காசோலையாக அனுப்பி வைத்துள்ளோம்.

அப்பணத்தினையும் புனரமைப்பு பணிகளுக்கான செலவு நிதியில் சேர்த்துக் கொள்வதோடு, வீதியின் புனரமைப்பு பணிகளை துரித கதியில் முன்னெடுக்குமாறு மீண்டும் கோரிக்கை முன்வைக்கின்றோம் என்றுள்ளது.

அதேவேளை அக்கோரிக்கை கடிதத்தின் பிரதிகள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்த்தன, யாழ்.மாவட்ட செயலாளர், சாவகச்சேரி பிரதேச செயலாளர், கொடிகாமம் பிரதேச சபை செயலாளர் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT