Monday, April 29, 2024
Home » வறுமையை ​வெற்றி கொள்ள இஸ்லாத்தின் வழிகாட்டல்கள்

வறுமையை ​வெற்றி கொள்ள இஸ்லாத்தின் வழிகாட்டல்கள்

by sachintha
January 12, 2024 9:01 am 0 comment

மனிதனுடைய வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாக அமைவதில்லை. இறைவனின் படைப்பின் நியதி அதுதான். ‘வானம் பூமி படைக்கப்பட்டிருப்பதிலும் இரவு பகல் மாறிமாறி வருவதிலும் அறிவுள்ளவர்களுக்கு அத்தாட்சி இருக்கிறது’ (3:190) என அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்.

இதேபோன்று மனிதனுடைய வாழ்க்கையிலும் வறுமையும் செல்வமும் மாறிமாறி வருவதும் பருவ காலங்களில் வசந்த காலமும் கோடைகாலமும் மாறிமாறி வருகின்றன.

இதில் எந்த நிலையும் நிரந்தரமானதல்ல என்பதை அழகாகத் தெளிவுபடுத்துகிறது. வறுமை என்பதும் பஞ்சகாலம் என்பதும் நிலையானதாக இருக்கப்போவதில்லை. இவை மனிதனைச் சோதிப்பதற்காக ஒவ்வொருவரிடமும் வந்து செல்லும் என்று அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்.

‘நிச்சயமாக நாம் உங்களை பயம் மற்றும் பசியைக் கொண்டும் செல்வத்திலும் உயிர்களிலும் விளைச்சலிலும் குறைவை ஏற்படுத்துவதைக் கொண்டும் சோதிப்போம்’ (2:155) என்ற வசனத்தினூடாக மனிதன் பசியைக் கொண்டும் செல்வத்தில் குறைவை கொண்டும் சோதிக்கப்படுவான் என்பது தெளிவாகிறது.

இவ்வாறான நிலைமை ஏற்படுகின்ற போதெல்லாம் மனிதன், தான் தற்போது சோதனைக் காலத்தில் இருக்கின்றேன் என்பதையும் இது நிரந்தரமானதல்ல, சோதனையை வெற்றிகரமாகத் தாண்டியதன் பின்னர் தனது நிலைமைகள் மாற்றமடையும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். வறுமை வாட்டும் போது என(ம)க்கு மட்டும் ஏன் இந்நிலை என்று துவண்டு போய்விடக் கூடாது.

‘உங்களுக்கு முன்பிருந்தவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே நீங்கள் சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று எண்ணுகிறீர்களா? அவர்களைக் கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன’. (2:214) என்று அல்லாஹுத்தஆலா கூறிவிட்டு ‘நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது’ என்றும் கூறியுள்ளான்.

சோதனைகள் என்பது மனிதனை சுவர்க்கத்துக்குத் தகுதியானவனாக்குவதற்கான பரீட்சை. உங்களில் சிறந்த முறையில் செயற்படுபவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக வாழ்வையும் மரணத்தையும் ஆக்கினோம் (67:02) என்று அல்லாஹ் கூறுவதற்கேற்ப சோதனைகள் என்பவை மனிதனைப் புடம் போடுபவையாகும். இவ்வாறு மனிதன் சோதிக்கப்படும் போது அந்தக் கட்டத்தை பொறுமையாகத் தாண்ட வேண்டும் என அல்லாஹுத்தஆலா வழிகாட்டுகிறான்.

‘நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பமிருக்கிறது’ (94:5) என்பதனால் அந்தத் துன்பத்தைக் கடந்து செல்ல பொறுமை அவசியமாகிறது. பசி பட்டினியால் சோதிக்கப்படுவீர்கள்’ என்று (2:155) சொல்லிவிட்டு பொறுமையாளர்களுக்கு நற்செய்தி கூறுங்கள் என்று அல்லாஹுத்தஆலா அவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ளான். சோதனையைத் தந்தவன் அல்லாஹ் என்ற வகையில் அந்தச் சோதனையைப் பொறுமையுடன் எதிர்கொள்ளும் காலமெல்லாம் அல்லாஹுத்தஆலா மனிதனுக்குத் துணைநிற்கிறான். கஷ்டங்களைச் சகித்துக் கொண்டு பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளருடன் இருக்கின்றான் (அன்பால்- 46). சோதனைக் காலத்தில் அல்லாஹ்வுடன் இருப்பதை விட்டு விட்டு வேறு மார்க்கங்களைத் தேடிச் செல்வோரும் இருக்கின்றனர்.

வறுமையினால் சோதிக்கப்படுபவர்கள் கடன், வட்டி, அடகு என அல்லாஹ்வுக்கு மாற்றமான வழிகளில் தீர்வைத் தேட முற்படுகின்றனர். இன்னும் சிலர் வறுமைக்குப் பயந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதையும் தவிர்த்துக் கொள்கின்றனர். இது குறித்து அல்லாஹுத்தஆலா கூறும்போது, ‘வறுமைக்குப் பயந்து உங்களது பிள்ளைகளைக் கொன்று விடாதீர்கள். உங்களுக்கு வழங்கியது போலவே நாம் அவர்களுக்கும் உணவு வழங்குவோம்’ (17:31) என்கிறான்.

அல்லாஹ்வுடைய உதவியை எதிர்பார்ப்பதில் பொறுமை இழந்துவிடக் கூடாது. ஏனெனில் சோதனைக் காலம் எவ்வளவு என்பது அல்லாஹுத்தஆலாவுக்கு மட்டுமே தெரியும். வறுமை எனும் சோதனையை வெல்வதற்கு பொறுமை என்னும் ஆயுதம் இன்றியமையாததாகும்.

வறுமையை எதிர்கொள்வதற்கான அடுத்த ஆயுதம் துஆவாகும். அல்லாஹ் மனிதனைச் சோதிக்கும் போது அதைப் பொறுமையுடன் சகித்துக் கொள்ளும் அதேவேளை, இச்சோதனையைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை வேண்டியும் இச்சோதனையின் போது தான் வழிதவறிவிடக் கூடாது என்றும் சோதனையை இலகுவாக்குமாறும் அல்லாஹ்விடம் துஆ கேட்க வேண்டும்.

துஆ என்பது அல்லாஹ் விதித்த தலைவிதியையே (கத்ர்) மாற்றும் சக்தி வாய்ந்தது என நபி (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (ஆதாரம்- : திர்மிதி). நீங்கள் என்னிடம் (துஆ) கேளுங்கள். நான் அதற்குப் பதிலளிக்கிறேன் (40:60) என அல்லாஹ்வே கூறுகின்றான். நபியவர்களின் அன்றாட துஆக்களில் வறுமையில் இருந்தும் குப்ரில் இருந்தும் பாதுகாப்புத் தேடியிருக்கிறார்கள். இந்த துஆவை நபியவர்கள் ஒவ்வொரு தொழுகையின் பின்னரும் ஓதியதாக நஸாஈ பதிவு செய்துள்ளது. தன்னிடம் உதவி கேட்காதவர்களுடன் அல்லாஹ் கோபித்துக் கொள்வதாக நபியவர்கள் கூறியதாக திர்மிதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘(நீங்கள் இணைவைப்பவைகள் சிறந்தவையா அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித்தோன்றல்களாக ஆக்கியவனா? (27:62) என அல்லாஹ் வினவுகின்றான்.

எனவே சோதிக்கப்படுவர்கள் அழைக்க வேண்டியவர்களில் சிறந்தவனாக அல்லாஹ்தஆலா இருக்கையில், மனிதர்கள் தமது சோதனைகளின் போது அல்லாஹ்விடம் மீள வேண்டும். அவர்களுக்கு சோதனைகளால் சோதிக்கப்பட்டால் நாங்கள் அல்லாஹ்விடமிருந்தே வந்தோம், அவனிடமே மீளுவோம் என அவர்கள் சொல்லுவார்கள் (2:155) என சோதனைகளின் போது தன்பக்கம் மீண்டு வருபவர்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். அந்த வகையில் வறுமை எனும் சோதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத்தேடி அல்லாஹ்விடம் துஆ கேட்க வேண்டும்.

அடுத்ததாக நெருக்கடிகளை சந்தர்ப்பங்களாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பொறுமையைக் கடைப்பிடித்து துஆக்களையும் கேட்பதற்கு அப்பால் இம்முயற்சிகளும் அமைய வேண்டும். ‘நீங்கள் என்னுடைய வழியில் முயற்சி செய்தால் நான் உங்களுக்குப் பல வழிகளைக் காட்டுவேன்’ (29:69)என்று அல்லாஹுத்தஆலா கூறுகின்றான். தன் கையால் சம்பாதித்த உணவை விடச் சிறந்த உணவை யாரும் உண்பதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவூத் (அலை) தம் கைகளால் சம்பாதித்து உண்டார்கள் என நபியவர்கள் கூறியிருக்கிறார்கள். (ஆதாரம்- : புஹாரி)

அந்த வகையில் தேவைகள் அதிகரிக்கும் போது அதற்கேற்றவாறு சீவனோபாயத்துக்கான வழிகளையும் அதிகரிக்க வேண்டும். பூமியில் வாழ்வதற்கான வசதிகளை அவன் ஏற்படுத்தினான். அவற்றைத் தேடிச் சென்று பெற்றுக் கொள்ளுங்கள் (67:15) என்ற அல்லாஹ்வின் வசனத்துக்கேற்ப அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

உங்களில் ஒருவர் ஒரு கயிற்றை எடுத்து முதுகில் விறகு சுமந்து கொண்டு வந்து விற்று தனது மானத்தைக் காப்பாற்றிக் கொள்வாரானால் அதுவே தனக்குக் கொடுக்கக் கூடியவர்களிடம் கேட்பதைக் காட்டிலும் அவருக்குச் சிறந்ததாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்- : புஹாரி)

எனவே ரிஸ்கில் குறைவு ஏற்படுவது என்பதும் வறுமை என்பதும் அல்லாஹ்வின் சோதனைகளில் உள்ளதாகும். சோதனை அனைவருக்கும் நிச்சயமானது. அந்தச் சோதனையை பொறுமையைக் கொண்டும், துஆக்களைக் கொண்டும், அதனை வெல்வதற்காக உழைப்பைக் கொண்டும் வெல்லுவதற்கு முயற்சிக்க வேண்டும். நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.

பியாஸ் முஹம்மத்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT