Tuesday, April 30, 2024
Home » தீவிரமான அரசியல் பரபரப்புடன் உதயமாகியுள்ள 2024 புத்தாண்டு!

தீவிரமான அரசியல் பரபரப்புடன் உதயமாகியுள்ள 2024 புத்தாண்டு!

by damith
January 8, 2024 9:00 am 0 comment

தேர்தல் குறித்த எதிர்பார்ப்புடன் 2024 ஆம் ஆண்டு பிறந்திருப்பதால் அரசியல் களம் படிப்படியாகச் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் கூட்டணியை புதிதாக உருவாக்குதல், கட்சித் தாவல்கள் என்பன ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளதால், அரசியல் களம் படிப்படியாக மேலும் சூடாகி வருகின்றது.

அரசியலமைப்புக்கு அமைய 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 18ஆம் திகதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன் அடிப்படையில் பார்க்கும்போது, ஏறத்தாழ தேர்தலுக்கு இன்னமும் 285 நாட்களே காணப்படுகின்றன.

அதேநேரத்தில், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலொன்றுக்குச் செல்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அரசியல் களத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றபோதும், எந்தத் தேர்தலை ஜனாதிபதி முதலில் நடத்துவதற்கு விரும்புகின்றார் என்பது இன்னமும் உறுதியாகத் தெரியவில்லை.

எவ்வாறிருந்த போதிலும், அரசியல் கட்சிகள் யாவும் தம்மை ஏதாவது ஒரு தேர்தலுக்குப் பலப்படுத்தும் காரியத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளன.

தேர்தலை இலக்கு வைத்து கூட்டணிகளை அமைக்கும் பணிகள் தீவிரமடைந்திருப்பதுடன், எதிர்கால அரசியலைக் கருத்தில்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கட்சித் தாவல்களையும் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்த வரையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தாம் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளனர். மறுபக்கத்தில், பொதுஜன பெரமுன சார்பில் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் தயாராக இருப்பதாகவும், பொருத்தமானவரைக் களமிறக்கப் போவதாகவும் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக் ஷ அறிவித்துள்ளார்.

அதேநேரம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவார் எனக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதும், இது பற்றி அவர் இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

நாடு மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தபோது அதனை மீட்பதற்குத் தானாக முன்வந்து கடுமையான முயற்சியின் ஊடாக ஒரளவுக்கு உறுதியான நிலைக்கு நாட்டைக் கொண்டு வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டாயம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.

எனினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலை நடத்தி, தெரிவுசெய்யப்படும் பாராளுமன்றத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வரவுள்ளார் என்ற சந்தேகங்கள் முன்னர் வெளியிடப்பட்டு வந்தன. எனினும், இந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து மிக விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவுசெலவுத்திட்ட விவாதத்தின் போது கூறியிருந்தார்.

இவ்வாறு முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்குப் பதிலாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கேபண்டார கடந்த வாரம் ஊடகங்களுக்கு உறுதியளித்திருந்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஆதரவளிக்க ஒரு பெரிய கூட்டணியை அமைக்கத் தொடங்கியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘நாங்கள் பல அரசியல் கட்சிகளுடன் பேசுகிறோம், மேலும் பலர் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேரிதலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க எங்களுடன் இணைவார்கள்’ என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

அவர் இன்னும் ஒரு படி மேலே சென்று “ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இந்தக் கட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவார் என்று ஐக்கிய தேசியக் கட்சி எதிர்பார்க்கவில்லை” என்றும் கூறியிருந்தார்.

‘காலம் செல்லச் செல்ல தனக்கு ஒரு வலிமையான அணி இல்லாமல் போய்விடும் என்பதால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை’ என்றார் அவர்.

இந்தக் கூற்றுக்கள் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்களை குழப்பமடையச் செய்யும் நோக்கில் முன்வைக்கப்படும் கருத்துக்களாக இருந்தாலும், ஐக்கிய தேசியக் கட்சி, தெரிவுசெய்யப்பட்ட ஐக்கி மக்கள் சக்தி உறுப்பினர்கள், பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திரக் கட்சி ஆகியவற்றில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாக ஜனாதிபதி பரந்ததொரு கூட்டணியை உருவாக்க உத்தேசித்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர, இந்தக் கூட்டணியின் கணிசமான அங்கமாக பொதுஜன பொரமுனவின் அதிருப்தியடைந்த பாராளுமன்ற உறுப்பினர்கை​ைளக் கொண்ட குழு அமையவுள்ளது.

இந்தக் குழுவை ஒழுங்கமைக்கும் பணி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக இருக்கும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவிடம் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. இந்தக் கூட்டணியில் தலைமைப் பொறுப்பு முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய கூட்டணி அண்மையில் இராஜகிரியவில் உள்ள அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. நிமல் லான்சா, அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் பிரியங்கர ஜயரட்ன ஆகியோர் தற்போதைக்கு இதில் அங்கம் வகிக்கின்றனர்.

ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் மேலும் பலர் இதில் இணைந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா குறிப்பிடுகையில், ‘பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படும் என்பது எதிர்க்கட்சிகளின் கருத்து. ஜனாதிபதித் தேர்தலுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுப்பார் என்பதே எனது கருத்து. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தாத அக்கட்சியில் போட்டியிட்ட 71 பேர் பாராளுமன்றத்தில் உள்ளனர். அந்த 71 பேரை பிரதிநிதித்துவப்படுத்தி புதிய கூட்டணியை உருவாக்க பாராளுமன்றத்தில் புதிய பேச்சை தொடங்கினோம். பாராளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டணியையும், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிக எண்ணிக்கையிலான கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டணியையும் எங்களால் உருவாக்க முடியும்’ என்றார்.

இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள கூட்டணி பெரும்பாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும். இந்தக் கூட்டணியில் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்கள், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் எதிர்காலத்தில் இணைந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கத்தில், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளனர். நீண்டகால சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரான காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் த சில்வா மற்றும் புத்தளம் மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறித திசேராவும் எதிர்க்கட்சியில் இணைந்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா ஆகியோரும் தாம் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு அளிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது பற்றிக் கருத்துத் தெரிவித்திருந்த டிலான் பெரரா, உத்தியோகபூர்வமாக தாம் அந்தக் கட்சியில் இணையவில்லையென்றும், தற்போதைய உடனடித் தேவைக்கு ஏற்ற வகையில் பாரிய கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் அக்கட்சியுடன் இணைந்து செயற்படப்போவதாகவும் கூறியிருந்தார். இதுபோன்று மேலும் பலர் தம்முடன் இணையவிருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

ஏனைய கட்சிகளில் இருப்பவர்களை இவ்வாறு இணைத்துக் கொள்வது ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ்மட்டத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை காலமும் கட்சிக்காகப் பாடுபட்டவர்களை விடுத்து வெளியிலிருந்து வந்த புதியவர்களுக்கு உறுப்புரிமை வழங்கி அவர்களை அமைப்பாளர்களாக நியமிப்பது குறித்து ஒரு சில உறுப்பினர்கள் கட்சித் தலைமைமீது அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுபோன்று கூட்டணி அமைப்புக்கள், கட்சித் தாவல்கள் என்பன பரபரப்பாகியிருக்கும் சூழ்நிலையில், எந்தத் தேர்தல் முதலில் நடத்தப்படும் என்பதே தற்போது காணப்படும் பாரியதொரு கேள்வியாக உள்ளது. எந்தவொரு தேர்தலை எதிர்கொள்வதற்காகவும் தம்மைத் தயார்ப்படுத்துவதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருவதையே காண முடிகின்றது. எவ்வாறாயினும் 2024 புத்தாண்டானது தீவிரமான அரசியல் பரபரப்புடனேயே உதயமாகியிருப்பதைக் காண முடிகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT