Home » தோற்றுப்போன சிந்தனைகளின் மறு உருவமே தமிழ் பொதுவேட்பாளர்

தோற்றுப்போன சிந்தனைகளின் மறு உருவமே தமிழ் பொதுவேட்பாளர்

ரணிலின் வெற்றியில் பங்காளராவதே பொருத்தமான தெரிவு

by damith
April 29, 2024 7:15 am 0 comment

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் ஆதாயம் தேடுவோரின் விருப்பமே, தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சி என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஒப்பீட்டளவில் வல்லவராகவும் நல்லவராகவும் தன்னை நிரூபித்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை, தமிழ் மக்களின் வெற்றியாக மாற்றும் வகையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகள் அமைய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலே,அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை வெற்றியடைய செய்ய வேண்டிய அவசியம் தொடர்பாக வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் பொது வேட்பாளரை தேர்தலில் நிறுத்துவதற்கான முயற்சிகள் தொடர்பான விமர்சனத்தையும் முன்வைத்தார்.

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவலங்களை அரசியல் கோஷங்களாக பயன்படுத்தி குறுகிய அரசியல் ஆதாயம் தேடும் தரப்புக்கள், தமது நலன்களுக்காக தமிழ் மக்களை இன்னுமொருமுறை பலிக்கடாவாக்க முனைகின்றனர்.

இவ்வாறான முட்டாள்தனமான முயற்சிகள் கடந்த காலங்களில் ஆயுதப் போராட்ட குழுக்களாலும் மிதவாத தமிழ் தலைமைகளாலும் பலமுறை முன்னெடுக்கப்பட்டன.

ஆனால் அவற்றால் எமது மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை.

மாறாக மீளமுடியாத பின்னடைவுகளையே அவை ஏற்படுத்தியிருந்தன.

எனினும், நடைமுறைச் சாத்தியமான சிந்தனையோ, சரியான வேலைத்திட்டங்க ளையோ இவர்கள் இதுவரை முன்வைக்க வில்லை.மாறாக மக்களை உணர்ச்சியூட்டும் தோற்றுப்போன வழிமுறையையே மீண்டும் இவர்கள் கையில் எடுத்துள்ளனர். ஆனால், எமது ஈ.பி.டி.பி. மக்களுக்கு சரியான வழியை காட்டுகிறது. தனித்துவமான தரப்பு என்ற அடிப்படையிலேயே ஜனாதிபதி தேர்தலை நாம்,கையாள வேண்டும்.

மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள் முதல் அபிவிருத்தி உள்ளடங்கலான அரசியல் தீர்வு வரையிலான முன்னுரிமை அடிப்படையில் தீர்வுகளை முன்வைக்க கூடிய ஒருவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காணப்படுகிறார். கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு விடயங்களில் அவை நிரூபிக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கு நாம், கட்டி வளர்த்துள்ள தேசிய நல்லிணக்கமும் கணிசமான பங்களிப்பை செய்திருக்கிறது.

எனவே, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களையும் வெற்றியின் பங்களார்களாக அடையாளப்படுத்தும் வகையில் செயற்பாடுகள் அமைய வேண்டும். இதன்மூலமே தமிழ் மக்களின் அபிலாஷைகளை அடைவதற்கான வழியை பிரகாசமாக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT