Home » மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்காக பாடுபட்ட சந்திரசேகரன்

மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்காக பாடுபட்ட சந்திரசேகரன்

அன்னார் மறைந்து 14 வருடங்கள் நிறைவு

by damith
January 1, 2024 10:56 am 0 comment

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான பெ. சந்திரசேகரனின் நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. முதன்முதலாக 1980 களின் பிற்பகுதியில் மாற்றுத்தலைமை புதிய சிந்தனைகொண்ட இளைஞர்கள் உருவாகினார்கள். அதன் முன்னணித் தளபதியாக விளங்கியவர் சந்திரசேகரன்.

சந்திரசேகரன் தனது காலத்தில் மலையகத் தமிழ் மக்களின் அரசியல் என்பது வடக்கு, கிழக்கு கிழக்கு மக்களின் போராட்டத்துக்கு உறுதுணையானதாக மாற்றமடையும் நிலைமையை உருாக்கினார். அதற்கு அவர் கொடுத்த விலை பெரியது. மலையக மக்களின் மேம்பாட்டுக்காக தன்னை அர்ப்பணம் செய்த சந்திரசேகரன் வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காகவும் குரல்கொடுத்த ஒரு தேசிய தமிழ்த் தலைவராக உயர்ந்துநின்றார்.

மலையக தமிழ்ச் சமூகத்தின் தனித்துவத்தை வலியுறுத்தியும் ஏனைய சிறுபான்மைச் சமூகங்களோடு இணைந்தும் இலங்கையின் தேசிய அரசியலில் முக்கியமான அரசியல் ஆளுமையாக விளங்கிய சந்திரசேகரன், இந்தியாவுடனான உறவில் அழுத்தமான தடங்களை பதித்ததுடன் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் மிகுந்த நம்பிக்கைக்கு பாத்திரமான மலையக தமிழ்த் தலைவராக இருந்தார்.

தற்போதைய மலையக தமிழ்த் தலைவர்களில் சிலர் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்துடன் தற்போது உறவுகளைப் பேணுகிறார்கள் என்றால் அதற்கான அடித்தளத்தை அமைத்தவர் சந்திரசேகரன் ஆவார். அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களில் மலையக மக்களை ஒன்றிணைக்கும் முன்னரங்கப் போராளியாக அவர் விளங்கினார்.

அமரர் சந்திரசேகரன் 2000 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போதும் 2005 ஜனாதிபதி தேர்தலின்போதும் முன்வைத்த பல கோரிக்கைகள் இன்றும் பேசுபொருளாக விளங்குகின்றன.

மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்க வேண்டும் என்பது சந்திரசேகரனின் கனவாக இருந்தது. அந்தக் கனவு இன்று பெருமளவுக்கு நிறைவேறியியிருப்பதைக் காண்கிறோம். மலையக மக்களின் மேம்பாட்டுக்கு இந்தியாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்து செயற்பட்ட சந்திரசேகரன், இந்திய மத்திய அரசாங்கங்களுடன் தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டதுடன் தமிழக அரசியல் கட்சிகளுனும் அவற்றின் தலைவர்களுடனும் நல்லுறவைப் பேணினார்.

இந்திய உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் மலையக மக்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று இந்திய முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கை சந்தித்து சந்திரசேகரன் வலியுறுத்தினார்.

‘நாடற்றவர் என்ற கருத்தாக்கமும் லயன் குடியிருப்பும் இல்லாதொழிக்கப்படவேண்டும்’ என்று சந்திரசேகரன் 2000 ஆம் ஆண்டளவில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தச் செய்த பிரகடனம் 2003 ஆம் ஆண்டில் குடியுரிமைப் பிரச்சினை முற்றாக ஒழிக்கப்படுவதற்கு வழிவகுத்தது. லயன் குடியிருப்பு முறைகளும் படிப்படியாக ஒழித்து தனிவீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மலையகத்துக்கான பிரதேச செயலகங்களும் பிரதேச சபைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சந்திரசேகரனுக்கு பின்னால் மலையக மக்கள் முன்னணியின் தலைமைப் பொறுப்பையேற்ற இராதாகிருஷ்ணன் அமரரின் அரசியல் சிந்தனைகளையும் எண்ணக்கருக்களையும் அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் முன்னெடுத்துச் செயற்பட்டு வருகிறார். அமரரின் பல்வேறு பிரகடனங்களை தமிழ்முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து அடிப்படைக் கோரிக்கைகளாக முன்வைத்து இராதாகிருஷ்ணன் வெற்றிகரமாகச் செயற்பட்டு வருகிறார்.

மலையகம் பல்வேறு கருத்தியல்களின், பல தரப்பினரின் அபிலாசைகளின் மோதல் களமாகவே திகழ்ந்திருக்கிறது. சமகால அரசியலில் இந்தப் பன்முகப்போக்கை மலையக சமூக, அரசியல், கலாசார வெளியில் உருவாகிவரும் மாறுபட்ட சிந்தனைப் போக்குகளை, மாறிச்செல்லும் தடங்களை நுட்பமாக அறிந்துவைத்திருந்த ஒரு அரசியல் போராளியின் மறைவு மலையகத்தின் எழுச்சிமிக்க வரலாற்றுச் செல்நெறியின் மீது கவிந்து போய்விட்ட கருநிழலாகவே தோற்றம் தருகிறது என்று மலையக கல்விமான் மு.நித்தியானந்தன் அன்று கூறினார்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவராக சந்திரசேகரன் செயற்பட்ட இரு தசாப்த காலத்தில் அவரது இலட்சியப்பாதையில் பற்றுறுதியுடன் இணைந்து பயணம் செய்தவர்கள் மிகப்பலர். நடைமுறைக்கு ஒவ்வாத விமர்சனங்களை வீசியவர்கள் சமுதாயத்தில் இருந்து ஒதுங்கிப் போனார்கள். அந்தக் காலப்பகுதியில் அவர் முகங்கொடுத்த சவால்கள் பல. எதிர்கொண்ட சோதனைகள், இழப்புக்கள் அநேகம். அவற்றையெல்லாம் ஒரு தலைவனுக்கு இயல்பாக இருக்கவேண்டிய துணிவாற்றலுடனும் தொலைநோக்குடனும் அவர் வெற்றிகரமாகக் கையாண்டார். அந்த உயர்ந்த மாமனிதனின் மறைவு மலையக தமிழ்ச் சமுதாயத்துக்கு மாத்திரமல்ல முழு இலங்கைக்குமே பேரிழப்பு.

எச்.எச். விக்கிரமசிங்க

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT