Home » இலங்கை உத்தேச அணியில் பல முன்னணி வீரர்களுக்கு இடமில்லை
சிம்பாப்வே அணிக்கு எதிரான

இலங்கை உத்தேச அணியில் பல முன்னணி வீரர்களுக்கு இடமில்லை

by Gayan Abeykoon
December 29, 2023 9:07 am 0 comment

லங்கை வரும் சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு 21 பேர் கொண்ட இலங்கை உத்தேச அணி ஒன்று தேர்வு செய்யப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

அந்தக் குழாத்தில் இருக்கும் வீரர்களில் இருந்து 15 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதிக் குழத்திற்கு விளையாட்டுத் துறை அமைச்சரின் அனுமதியை பெற எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் நியமிக்கப்பட்ட உபுல் தரங்க தலைமையிலான புதிய தேர்வுக் குழுவினால் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் முதல் அணியாக இது உள்ளது.

இதில் அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ண போட்டியில் ஆடிய குசல் பெரேரா, திமுத் கருணாரத்ன, தனஞ்சய டி சில்வா, துஷான் ஹேமன்த, கசுன் ராஜித்த, மதீஷ பதிரண, அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் லஹிரு குமார ஆகியோர் இந்த உத்தேச அணியில் இடம்பெறவில்லை. சஹன் ஆரச்சிகே, சாமிக்க குணசேகர, அவிஷ்க பெர்னாண்டோ, நுவனிது பெர்னாண்டோ, ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ், அக்கில தனஞ்சய, அசித்த பெர்னாண்டோ, ஜெப்ரி வென்டர்சே போன்ற புதிய மற்றும் முன்னர் இலங்கை அணிக்காக ஆடிய வீரர்கள் இந்த உத்தேச அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உலகக் கிண்ணத்தில் இரண்டு போட்டிகளில் ஆடி பின்னர் காயத்தால் விலகிய அணித் தலைவர் தசுன் ஷானக்கவும் இந்த உத்தேச அணியில் சேர்க்கப்பட்டிருப்பதோடு உபாதை காரணமாக உலகக் கிண்ணத்தில் பங்கேற்காத சுழற்பந்து சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதில் துடுப்பாட்ட வீரர்களாக குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, பெத்தும் நிசங்க, சதீர சமரவிக்ரம, அவிஷ்க பெர்னாண்டோ, நுவனிந்து பெர்னாண்டோ, ஜனித் லியனகே குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி இலங்கை வரும் சிம்பாப்வே அணி ஜனவரி 6, 8 மற்றும் 11 ஆம் திகதிகளில் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடவுள்ளது. இந்தப் போட்டிகள் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையில் அதே மைதானத்தில் மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் நடைபெறும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT