பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இந்தியாவும் ஒமானும் இணக்கம் கண்டுள்ளன. அதேநேரம் பயங்கரவாதத்தையும் அதன் அனைத்து வடிவங்களையும் கண்டிப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஒமான் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கும் தெரிவித்துள்ளனர்.
ஒமான் சுல்தான் ஹைதம் பின் தாரிக் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு புதுடில்லிக்கு வருகை தந்திருந்த சமயம் இந்தியாவின் பிரதி ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியத்துவம் மிக்க புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சார்த்திடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து விடுக்கப்பட்டுள்ள கூட்டறிக்கையில், இந்தியாவும் ஒமானும் பயங்கரவாதத்தையும் அதன் அனைத்து வடிவங்களையும் வன்மையாகக் கண்டிக்கின்றன. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இரு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளன. இந்தியப் பிரதமரும் ஒமான் சுல்தானும் இதன் நிமித்தம் தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியதோடு எந்த ஒரு பயங்கரவாதச் செயலையும் எக்காரணத்திற்காகவும் நியாயப்படுத்த முடியாது என்பதையும் அனைத்து வகையான வன்முறைத் தீவிரவாதத்தையும் கைவிட வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அமைதி, நிதானம், சகவாழ்வு மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றின் உலகளாவிய மதிப்புகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் இரு நாட்டுத் தலைவர்களும் மேலும் வலியுறுத்தியமாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.