Thursday, May 2, 2024
Home » போதைப்பொருள் குற்றங்களை முற்றாக ஒழிக்க வேண்டும்!

போதைப்பொருள் குற்றங்களை முற்றாக ஒழிக்க வேண்டும்!

by Rizwan Segu Mohideen
December 18, 2023 6:04 am 0 comment

நாட்டில் போதைப்பொருள் குற்றங்கள் அதிகரித்துள்ளன. அதன் விளைவாக சமூக, கலாசார, பொருளாதார தாக்கங்களும் பாதிப்புகளும் உயர்ந்துள்ளன. அத்தோடு போதைப்பொருள் பாவனை காரணமாக நோய்களுக்கு உள்ளாகியுள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகின்றது. இப்பாவனை காரணமாக ஏற்படுகின்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பெருந்தொகை நிதியையும் செலவிட வேண்டிய நிலைமை உள்ளது.

அதனால் போதைப்பொருள் பாவனைக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் நிமித்தம் விஷேட முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் கந்தக்காடு முகாம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இம்முகாமில் புனர்வாழ்வு பெற்றுவந்தவர்களில் சுமார் நூறு பேர் கடந்த வாரம் தப்பியோடினர். அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு நிலையத்திற்கு திரும்பவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்கள் பல குடும்பங்களை வறுமையின் பிடிக்குள் தள்ளியுள்ளன. இன்னும் பல குடும்பங்கள் சமூக, கலாசார சீரழிவுகளுக்குள் சிக்குண்டுள்ளன. போதைப்பொருள் குற்றங்களின் விளைவாக வன்முறைக் கும்பல்கள் உருவாகியுள்ளன. குழுச்சண்டைகள் உயிர்களைக் காவு கொள்ளும் அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளன.

நாடு எதிர்கொண்டுள்ள முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக போதைப்பொருள் குற்றங்கள் வளர்ந்திருக்கின்றன. இக்குற்றங்கள் தோற்றுவித்துள்ள பாதிப்புக்களும் தாக்கங்களும் நாட்டினதோ சமூகத்தினதோ நலன்களுக்கு உகந்தவை அல்ல.

இந்நிலையில் போதைப்பொருள் குற்றங்கள் தோற்றுவித்துள்ள சமூக, கலாசார பாதிப்புகளும் தாக்கங்களும் அனைத்து தரப்பினரதும் அவதானத்தைப் பெற்றுள்ளன. இக்குற்றங்களைக் கட்டுப்படுத்துவதன் அவசியமும் முக்கியத்துவமும் நாட்டின் உயர்பீடம் முதல் அடிமட்டம் வரையும் உணரப்பட்டு இருக்கின்றது.

அதன் காரணத்தினால் போதைப்பொருள் குற்றங்களை முற்றாக ஒழித்துக் கட்டுவதில் விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பதில் பொலிஸ் மாஅதிபர் தேபந்து தென்னக்கோனுக்கு வழங்கியுள்ளார்.

அதற்கேற்ப நேற்று 17 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரையும் போதைப்பொருட்களை முற்றாக ஒழித்துக்கட்டும் வகையிலான வேலைத்திட்டம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மாஅதிபரின் ஆலோசனை, வழிகாட்டல்களின் கீழ் பொலிஸாரும் விஷேட அதிரப்படையினரும் இணைந்து இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதன் ஊடாக போதைப்பொருள் குற்றங்களை முற்றாக ஒழிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நீதி (யுக்திய) என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் ஊடாக போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள், கடத்துபவர்கள், விநியோகிப்பவர்கள், பயன்படுத்துபவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

போதைப்பொருள் பாவனை, விற்பனை, கடத்தல் என்பன இடம்பெறுவதாக சந்தேகிக்கப்படும் இடங்களில் இத்திட்டத்தின் கீழ் தேடுதல்களை மேற்கொள்ளவும் திடீர் சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவை தொடர்பில் பொதுமக்களின் ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளது. தொலைபேசி ஊடாகவோ மின்னஞ்சல் ஊடாகவோ போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் தகவல்களை பொலிஸாருக்கு வழங்க முடியும். அதற்கான தொலைபேசி இலக்கங்களும் மின்னஞ்சல் முகவரியும் வழங்கப்பட்டுள்ளன.

‘இத்திட்டத்தின் கீழ் தகவல் அளிக்கும் எவரது விபரமும் பகிரங்கப்படுத்தப்பட மாட்டாது’ எனக் குறிப்பிட்டுள்ள பொலிஸ் ஊடகத்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ, ‘நாடெங்கிலும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் மேல், தென் மாகாணங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது’ எனவும் கூறியுள்ளார்.

போதைப்பொருள் குற்றங்களை முற்றாக ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்நடவடிக்கையை மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர். இவ்விதமான குற்றங்கள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். நாட்டின் எதிர்காலப் பரம்பரையினர் போதைப்பொருள் குற்றங்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். அதுவே மக்களின் எதிர்பார்ப்பாகும். அப்போதுதான் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கக்கூடியதாக இருக்கும்.

அதனால் போதைப்பொருள் குற்றங்களை முற்றாக ஒழிப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிப்பது இன்றியமையாததாகும். இது தனியே சட்டத்தை அமுல்படுத்தும் தரப்பினரால் ஒழித்துக்கட்டக் கூடிய பிரச்சினை அல்ல.

அந்த வகையில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்நடவடிக்கையின் ஊடாக பெருந்தொகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன் பாவனையாளர்கள், கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டுமுள்ளனர். இவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும். பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படும் என்றும் பொலிஸார் குறிப்பிட்டிருக்கின்றனர்.

ஆகவே போதைப்பொருள் குற்றங்கள் அற்ற தேசத்தை உருவாக்க முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கப்பட வேண்டும். அது அவசியத் தேவையாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT