Monday, April 29, 2024
Home » பௌத்த சிங்கள நாடு தனித் தமிழ் நாடு என்ற சிந்தனை மாற வேண்டும்
இலங்கை பன்முகத் தன்மை கொண்டநாடு

பௌத்த சிங்கள நாடு தனித் தமிழ் நாடு என்ற சிந்தனை மாற வேண்டும்

by sachintha
December 15, 2023 6:58 am 0 comment

தேரர்களிடமும், உலகதமிழர் பேரவையிடமும் மனோ MP தெரிவிப்பு

இலங்கை எம் தாய்நாடு, ஒரு “சிங்கள பௌத்த நாடு” என்ற சிந்தனை மறைய வேண்டும். இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான “தனித் தமிழ்நாடு” என்ற சிந்தனையும் மறைய வேண்டும். சகலருக்கும் சொந்தமான, இலங்கை ஒரு பன்மைத்துவ நாடு என்ற அடிப்படையே உங்கள் நடவடிக்கைக்கு ஆரம்ப புள்ளியாக இருக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற, சிறந்த இலங்கைக்கான சங்க (பெளத்த) மன்றம், உலகத் தமிழர் பேரவை ஆகிய அமைப்புகளுடனான சந்திப்பிலேயே, மனோ கணேசன் எம்.பி கூறியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ஏ.எச்.எம் பெளசி, திகாம்பரம், வேலுகுமார், உதயகுமார், தௌபீக் ஆகியோரும் கலந்து கொண்ட இந்நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனோ எம்பி மேலும் கூறியதாவது,

சிங்கள-பெளத்த நாடு என்ற சிந்தனை, இலங்கையில் நிரந்தர அமைதி, வளர்ச்சி, மகிழ்ச்சி ஏற்படத் தடையாக உள்ளதென சந்திப்பில் கலந்துகொண்ட தேரர்களிடம் கூறினேன். அதேவேளை இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான தனித் தமிழ்நாடு என்ற சிந்தனையும் மறைய வேண்டுமென சந்திப்பில் கலந்துக்கொண்ட உலகத் தமிழர் பேரவை அங்கத்தவர்களிடம் கூறினேன்.

உங்களது இந்த முயற்சியை நாம் வரவேற்கிறோம். அரசியல்வாதிகளை, அரசியல் கட்சிகளை விலக்கி வைத்து விட்டு இந்த முயற்சியில் ஈடுபடுவது சரிதான். முதல் கட்டத்தை வெற்றிகரமாக கடந்து விட்டால், அடுத்த கட்டத்தில் அது அரசியல் கட்சிகளிடம்தான் வரவேண்டும். பாராளுமன்றத்தில்தான் இன்றைய சட்டங்கள் திருத்தப்பட முடியும். புதிய சட்டங்கள் உருவாக்கப்பட முடியும். ஆகவே அது வரும்போது வரட்டும்.

ஆனால், இலங்கை ஒரு பன்மைத்துவ நாடு என்ற அடிப்படையே உங்கள் நடவடிக்கைக்கு ஆரம்ப புள்ளியாக இருக்க வேண்டும்.

இந்த அடிப்படை ஆரம்ப புள்ளியாக ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் இந்த முயற்சிபயனற்றதாகி விடும் என்றார்.

“76 விகிதம் சீனர்களை கொண்ட சிங்கப்பூர், அரசியல் சட்டப்படி பன்மைத்துவத்தை கொண்டாட முடியும் என்றால், ஏன் இலங்கையில் எம்மால் அதை கொண்டாட முடியாது?” இந்த கேள்வியை தேரர்களை நோக்கி நான் எழுப்பவில்லை. ஏனெனில் இம்முயற்சி வெற்றி பெறுவது பெருமளவில் அவர்கள் தரப்பில்தான் உள்ளது. இது அபிப்பிராயம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT