Monday, April 29, 2024
Home » மலையகத்திலிருந்து கல்வித்தகைமையுள்ள பெண்கள் பாராளுமன்றம் செல்வதற்கு வழியமைக்க வேண்டும்

மலையகத்திலிருந்து கல்வித்தகைமையுள்ள பெண்கள் பாராளுமன்றம் செல்வதற்கு வழியமைக்க வேண்டும்

by gayan
December 12, 2023 5:02 pm 0 comment

அரசியல் மற்றும் சமூக ஆய்வுகளின் விபரிப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய பெண்ணியல்வாதம், 1970 ஆம் ஆண்டுகளில் கற்கைத் துறையில் இணைக்கப்பட்டு அரசியல் என்ற எண்ணக்கருவின் விளக்கத்தையும் விருத்தி செய்தது. பெண்ணியல்வாதத்தின் தலையீடு வலுப்பெற்று அரசியல்துறையில் பெண்களின் பங்கு குறித்து எழுப்பப்பட்ட வினாக்கள் பாரம்பரிய அரசியலின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைந்தது.

இதற்கு உதாரணமாக, அரசியல் என்ற துறையில் பெண்கள் ஏன் புறந்தள்ளப்பட்டுள்ளனர்? அரசியல் துறையை ஆண்களின் துறையாக தொடர்ந்தும் நடைமுறையில் வைப்பதன் நோக்கம்? மற்றும் சமூக வரலாற்றின் ஊடாக பெண்கள் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது ஏன்? போன்ற வினாக்களை ஆராய்வதன் மூலம் அரசியல் விபரிப்புக்கு பால்நிலை, ஆணாதிக்கம், பெண்துன்புறுத்தல், பெண் விடுதலை போன்ற பெண்ணியல்சார் எண்ணக்கருக்கள் சேர்க்கப்பட்டு மீளாய்வுக்குட்படுத்தப்பட்டன.

வகுப்பு, இனம், சமூகம், பிரஜை, போன்ற அரசியலின் அதிமுக்கிய அடையாளங்களில் ஆண் பெண் பால்நிலை இணைத்ததன் மூலம் அரசியலானது ஆய்வு, விமர்சன ரீதியில் பெண்ணியல்வாதத்தினால் மாற்றமடைந்த முறையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அரசியல் கருத்தியலில் பெண்ணியல்வாதத்தின் தலையீடு ஆரம்பமானது முதல் பெண்ணியல்சார் கோட்பாடு மற்றும் பெண்ணியல்சார் கருத்தியல்கள் ஒரு கற்கை துறையாக ஊடுருவி உள்ளது பெண் விடுதலைக்கு வித்திட்டுள்ளது.

இந்த வகையில், எவ்வித பால்நிலை வேறுப்பாடுகளுமின்றி வயது வந்த அனைவருக்கும் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டது என்ற பெருமையை குடியேற்ற நாட்டாட்சி நாடுகளுள் முதலாவது நாடாக இலங்கைப் பெற்றுக் கொண்டது மேலும், பெண்ணியல்சார் கோட்பாடுகளுக்கு வலுச் சேர்க்கின்றது.

இவ்வாறான சிறப்பம்சங்களை தன்னகத்தேக் கொண்ட இலங்கையில் பெண்ணியல்சார்வாதங்களின் தலையீடு குறித்து ஆராய்ந்தோமானால், இலங்கையைப் பொறுத்தவரை கல்வி, கைத்தொழில், விவசாயம் போன்ற பல்வேறான துறைகளில் பெண்களின் பங்களிப்பு மேலோங்கி உயர்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதிலும் பார்க்க இலங்கை அரசியலிலும் பெண்கள் வலுப்பெற்றவர்களாகவே திகழ்கின்றனர். பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழிருந்த நாடுகளில் முதன் முதலில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய நாடு என்ற பெருமை இலங்கையையே சாரும்.

வளர்ச்சியடைந்த பல நாடுகளில் கூட அப்போது பெண்களுக்கான வாக்குரிமை வழங்கப்படவில்லை. இந்நிலையில், இலங்கைக்கு இத்தகைய வரலாற்றுப் பெருமைகள் இருந்தும் கூட உலக நாடுகளின் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை ஒப்பிடுகையில் குறைந்த பெண் பிரதிநிதித்துவம் கொண்ட நாடாக இலங்கையே முன்னிலை நாடாக திகழ்கிறது. அத்துடன் தென்னாசியாவிலே குறைந்தளவு பிரதிநிதித்துவம் கொண்ட நாடாகவும் இலங்கை விளங்குகிறது.

மலையக பெண் சமூகத்தின் அரசியல்நிலை தொடர்பில் ஆராய்ந்தோமானால் அவர்கள் அரசியல் துறைசார் விளக்கங்கள், எண்ணக்கருக்கள் தொடர்பில் புரிந்துணர்வின்மையற்று இருப்பது பின்தங்கிய நிலையை உறுதிச் செய்கின்றது. மலையகத்தின் வரலாற்றுக் காலம் முதலே அரசியலில் பெண்களின் ஈடுபாடு என்பது மிகவும் குறைவாகவே காணப்பட்டு வந்தது. இந்நிலையானது, உண்மையாகவே பெண்களின் அரசியல் ஈடுபாடானது குறைந்து காணப்பட்டதா அல்லது ஆணாதிக்க சமூகத்தினால் பெண்களின் அரசியல் ஈடுபாடனது குறைக்கப்பட்டதா என்பது விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகிறது.

மலையக பெண் தொழிலாளர்கள் தற்சமயம் அரசியலில் ஈடுபடுவது மகிழ்ச்சியளிக்கின்றது. மலையகத்திற்கு அரசியல்துறைசார் நலன்களை பெற சிறந்த கல்வித் தகைமையுடைய பெண் கல்விமான்களை தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு செல்ல வழி செய்தால் ஆண்களுக்கு நிகராக பெண்களும் அரசியல் துறையில் முதன்மைப்படுத்தப்படுவதோடு பெண்ணியல்சார் புதிய கோட்பாடுகளும் வலுப்பெறும்.

இராசையா பிருந்தாவதனி நுவரெலியா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT