Home » மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வேலைத்திட்டத்தில் இலஞ்சம் பெற முடியாததால் எதிர்ப்பு

மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வேலைத்திட்டத்தில் இலஞ்சம் பெற முடியாததால் எதிர்ப்பு

- மின்சக்தி துறையின் பிரச்சினைகளுக்கும் அதுவே காரணம்

by Rizwan Segu Mohideen
December 12, 2023 7:25 pm 0 comment

– இலங்கை முலீட்டுச் சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபைக்கு பதிலாக விரைவில் பொருளாதார ஆணைக்குழு
– VAT வரி 18% ஆக இருந்த போதிலும் நாட்டின் அபிவிருத்திக்கு அது உதவியாக அமையும்

டீசல் மற்றும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் வாயிலாக இலஞ்சம் பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தாலும், சூரிய மற்றும் காற்றாலை வேலைத்திட்டங்களின் ஊடாக இலஞ்சம் பெற முடியாது என்பதாலேயே அவ்வாறான திட்டங்களுக்கு சில குழுக்களால் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் .

பூநகரி குளத்திலிருந்து கிளிநொச்சி உப பிரிவு வரையில் தேவையாக பரிமாற்ற இணைப்பு கட்டமைப்புக்களை நிர்மாணித்தல் உள்ளடங்களான 700 மெகாவோட் சூரிய சக்தி நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கு மின்சார சபையின் பொறியியலாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், நாடு இந்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதற்கு மேற்படி பிரச்சினைகளே காரணமாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று (12) நடைபெற்ற தொழில்நுட்ப அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுக்களின் வரவு செலவு மீதான விவாதத்தின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ;

புநகரி திட்டத்தின் கீழ் ஏரியொன்றை அமைத்து 20,000 ஏக்கரில் மீண்டும் விவசாயம் செய்ய வாய்ப்பு உள்ளது. அவுஸ்திரேலியாவின் யுனைடெட் சோலார் எனர்ஜி நிறுவனம் வழங்கிய மின்கலங்களை அடிப்படையாகக் கொண்ட ஆசியாவின் மிகப் பெரிய சூரிய சக்தி கட்டமைப்பை முதன்முறையாக இலங்கைக்கு கிடைத்திருக்கிறது. இதற்கு மின்சார சபையின் பொறியிலாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இவர்களுக்கு நிலக்கரி மற்றும் எரிபொருள் என்பவற்றின் வாயிலாக இலஞ்சம் கிடைக்கிறது. ஆனாலும் சூரிய மற்றும் காற்றுச் சக்திகள் வாயிலாக இலஞ்சம் பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் இவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு முன்பிருந்தே பொறியியலாளர்கள் குழுவொன்று எதிர்பு தெரிவித்தது. 2003 ஆம் ஆண்டில் நாம் நுரைச்சோலை திட்டத்தை நிறுத்தினோம். அது அந்த இடத்திற்கு பொருத்தமற்றது. இருப்பினும் அவர்களுக்கு நுரைச்சோலையை அமைக்க வேண்டும் என்ற தேவை இருந்தது. திருகோணமலை அல்லது வேறு பகுதிகளில் அந்த உற்பத்தி நிலையத்தை அமைத்திருந்தால் பிரச்சினைகள் எழுந்திருக்காது.

இவ்வாறான வேலைத்திட்டங்களுக்காக சில நிறுவனங்கள் 30 – 40 வருடங்கள் வரையில் கோருகின்றன. எமது நாட்டின் சட்டத்துக்கமை 20 வருடங்கள் மாத்திரமே வழங்க முடியும். அதனால் அந்த சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.

அதற்குரிய அடுத்தகட்டச் செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதோடு, தற்போதுள்ள முறைகளால் நாட்டை அபிவிருத்து செய்ய முடியாது. மின்சார சபை பொறியிலளார்கள் சிலரது எதிர்ப்பே நாம் இந்நிலையில் இருப்பதற்கு காரணமாகும்.

அமைச்சினால் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் அறிக்கையில் Pickme, Uber, Daraz போன்ற சேவை வழங்குநர்கள் தொழில்நுட்ப துறைக்குள் உள்வாங்கப்படுவதில்லை என்பதால் அவர்கள் வருமான வரி மற்றும் வற் வரியிலிருந்து விடுவிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 18% வற் வரி விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மேற்படி அனைத்து துறைகளிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குநர்களுக்கு இலங்கைக்கு வெளியிலிருந்து வெளிநாடுகளிலிருந்து செலுத்தப்படும் பணம், வரியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கல் 2019 டிசம்பர் 31 ஆம் திகதி வரையில் வற் வரிக்கு உட்பட்டதாக காணப்பட்டதோடு, 2020 ஜனவரி 1 ஆம் திகதி முதல் வற் வரியிலிருந்து விடுவிக்கப்பட்டது. புதிய திருத்தத்தின் படி 2024 ஜனவரி 1 முதல் தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குநர்கள் வரி செலுத்த வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப துறைகள் ஏற்றுமதியை இலக்காக கொண்டிருக்க வேண்டும் என்பதோடு, அதன் சேவை ஏற்றுமதி பூச்சிய பெறுமதியில் காணப்படுவதால் தொழில்நுட்ப சேவை தொழிற்துறைக்கு சுமையின்றி செயற்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை. இந்தியாவும் தகவல் தொழில்நுட்ப மென்பொருள் சேவைகளுக்கு, பொருட்கள் மற்றும் சேவை வரியான GST 18% அறவிடப்படுகிறது.

கொள்கை அடிப்படையில் 18% வற் வரியை விதிக்க தீர்மானித்துள்ளோம். அனைத்து துறைகளும் அதற்குள் உள்வாங்கப்பட வேண்டும். தொழில்நுட்பத் துறையிலிருக்கும் பலரும் அவர்கள் முன்னேறிச் செல்வதற்காக உதவிகளை கோருகின்றனர். சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் தொடர்ந்தும் அதனையே செய்கிறார்கள்.

2003 ஆம் ஆண்டில் நாம் டாட்டா நிறுவனத்தை கொண்டுவர முற்பட்ட போது இவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அவர்கள் வருமான சேகரிப்பு மற்றும் உள்ளக சேவைகளை டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். தற்போது அதனை செய்ய முடியும் என்று கூறுகிறார்கள்.

அதற்கு 20 வருடங்களுக்கு பின்னர் இன்று (ARDAR) கட்டமைப்பு தொடர்பிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. 2015 ஆம் ஆண்டில் அதனை செய்ய முற்பட்ட போது உள்நாட்டு சேவை வழங்குநர்கள் அவசியமா? வெளிநாட்டு சேவை வழங்குநர்கள் அவசியமாக என்ற கேள்வி எழுந்தது.

அதுவே மிகப்பெரிய விவாதமாகவும் உருவெடுத்தது. இந்த வேலைத்திட்டத்தை எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து கவனம் செலுத்தவில்லை. இறுதியில் வெளிநாட்டு சேவை வழங்குநர்கள் அந்த திட்டத்தில் இணையவில்லை. அன்று கூச்சலிட்ட பலரும் இன்று நாட்டிலிருந்து புறப்படுகிறார்கள்.

எமக்கு பெருமளவான மனித வள பற்றாக்குறை உள்ளது. அதனால் எந்தவொரு நிறுவனத்திற்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் அவசியம் எனில் அதற்கு நாம் அனுமதியளிப்போம். மேலும் பலருக்கு பயிற்சிகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். அதனால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. அனுபவம் கொண்ட குழுவினர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். அதனால் நிறுனவங்களுக்கு வெளிநாட்டு பணிக்குழு அவசியம் எனில் அவர்களுக்கு நாம் வாய்ப்பளிப்போம்.

நாம் செயற்கை நுண்ணறிவு தொடர்பாக ஆய்வுகளுக்காக மாத்திரம் ஒன்றரை பில்லியன்களை ஒதுக்கியுள்ளோம். மேலதிக தொழில்நுட்ப ஆய்வுகளுக்காக 8 பில்லியனகளை ஒதுக்கியுள்ளோம். இந்த ஒதுக்கீடுகளை பயன்படுத்தி அந்த துறைகளில் பயனைடைய எதிர்பார்க்கிறோம்.

ஆய்வுகளுக்கான உதவிகளையும் பிரச்சினைகளின் போதான உதவிகளையும் நாம் வழங்குவோம். தகவல் தொழில்நுட்ப துறையின் கேள்வியை பார்க்கும் போது SLASCOM 5 பில்லியன் இடைவெளிகள் காணப்படுவதாக கூறுகிறது. இருப்பினும் அவர்கள் இரண்டரை பில்லியன் இலக்கைக் கூட அடையவில்லை. ஆனால் அவர்களால் 7 பில்லியன் இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அவர்களின் முன்னேற்றத்திற்கு அவசியமான உதவியை அரசாங்கம் வழங்கும்.

நாம் மிக விரைவாக டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி பயணிக்க இருக்கிறோம். அதேபோல் அடுத்த இரண்டு – மூன்று வருடங்களுக்குல் இலக்குகளை அடைய எதிர்பார்க்கிறோம்.

நீங்கள் 18% வற் வரியை செலுத்த நேரிட்டாலும் நாட்டின் அபிவிருத்திக்கு உதவியாக அமையும். செயற்கை நுண்ணறிவுடன் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால நாம் குறைந்த வருமானம் மற்றும் குறைந்த சம்பளத்துக்கான உற்பத்தி தொழிற்சாலைகளுக்கான மியன்மாருடன் போட்டியிட வேண்டிய நிலைமை ஏற்படும். கொள்கை அடிப்படையிலான டிஜிட்டல் மாற்றத்துக்கான நிறுவனம் ஒன்றை புதிதாக நிறுவ எதிர்பார்க்கிறோம். அவர்கள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் வேலைத்திட்ட முகாமைத்துவத்துடன் தொடர்புபடப்போவதில்லை. 10 வருடங்களுக்கு முன்பாக இதனை செய்திருக்க வேண்டும்.

அதேபோல் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க சபையை உருவாக்க நாம் திட்டமிட்டுள்ளோம். அதனால் தொழில்நுட்பத் துறையில் வணிகமயமாக்கல் தொடர்பில் தேடி அறியலாம். இவ்வாறான பணிகளுக்காக வரலாற்றில் அதிகளவான நிதி இம்முறையே ஒதுக்கப்பட்டுள்ளது.

நெல் மற்றும் ஏனைய பயிர்களின் உற்பத்தித்திறனையும் நாம் மேம்படுத்த வேண்டும். குறிப்பாக, அந்தத் தொழிலில் தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்கள் எங்களிடம் உள்ளன.

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தொடர்பிலும் நாங்கள் விசேட கவனம் செலுத்தி வருகிறோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு இலங்கையில் அதிக சாத்தியங்கள் உள்ளது.

காற்றின் ஊடாக மாத்திரம் 30 முதல் 40 கிகாவோர்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. சூரிய சக்தியின் ஊடாக 200 கிலோவாட்ஸ் உற்பத்தி செய்ய முடியும் என்று அமைச்சு மதிப்பீடு செய்துள்ளது. இந்த எரிசக்தியை இந்தியாவுக்கு விற்க முடியும். அதன் போது நாம் பச்சை ஹைட்ரஜன் மற்றும் பச்சை அமோனியா மீது கவனம் செலுத்த வேண்டும்.

பொறியியல் துறையில் எங்களை யாரும் வெல்ல முடியாது. எங்கள் பழைய கட்டிடங்கள் பிரமிட்டை விட உயர் தரத்தில் உள்ளன. சிகிரியா போன்ற சிறந்த படைப்புகள் நம் நாட்டில் உருவாக்கப்பட்டன. இவை உலகிற்கு தலைசிறந்த நாகரிகத்தை எடுத்துக்காட்டுகிறது. இத்தகைய சிறந்த படைப்புகளைக் கொண்ட ஒரே நாடு சீனா மட்டுமே.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை பார்க்கும் போது தற்போதுள்ள பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக அவர்களுக்காக மேலும் பல்கலைக்கழகம் அவசியமாகிறது. அரச மற்றும் தனியார் துறையின் உதவியுடன் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்படும். அதன்படி, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட இரண்டு பல்கலைக்கழகங்கள் குருணாகல் மற்றும் சீதாவக்கவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

என்.எஸ்.பி.எம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமாக மாறும். சென்னை ஐ.ஐ.ரீ கிளையொன்றை ஆரம்பிக்க இந்தியாவுடன் பேசி வருகிறோம். இது எதிர்காலத்தில் ஒரு சுயாதீன நிறுவனமாக செயல்படும். இந்த பல்கலைக்கழகங்கள் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானத் துறைக்காக ஆரம்பிக்கப்படும்.

வெளிநாட்டு உதவியுடன் மற்றொரு பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பது குறித்து ஆராயப்படுகிறது. இவ்வாறு மேலும் மூன்று நான்கு புதியபல்கலைக்கழகங்களைத் ஆரம்பிக்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

அரச சார்பற்ற பல்கலைக்கழங்களை ஆரம்பிக்கவும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் அவற்றின் பிரிவுகளை ஆரம்பிக்கவும் வாய்ப்பளிக்கப்படும். விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்துறையில் மாற்றத்தை கொண்டுவரத் தேவையான அடித்தளம் இடப்படுகிறது.

தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் விவசாயத்திற்கான உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் என்பன குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

உற்பத்தியை அதிகரிக்க புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரச மற்றும் தனியார் துறை பங்களிப்புடன் இது முன்னெடுக்கப்படும்.

மகாவலி மற்றும் நாட்டில் சுதந்திர வர்த்தக வலயங்கள் ஆகியவை ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தனவின் ஆட்சியின் கீழ் இடம்பெற்ற பாரிய திருப்புமுனனைகளாகும். நாங்கள் அதனை விட மிகப் பெரிய மாற்றத்திற்கான முன்னெடுப்பை தற்போது செய்யத் தயாராகி வருகிறோம். எனவே, எல்லோரும் அதனை வெற்றிகரமாக முன்னெடுக்க ஒத்துழைக்க வேண்டும்.

இந்த நோக்கத்தை நிறைவேற்ற என்னுடன் இணையுமாறு ஆளும் தரப்பிலும் எதிர்த்தரப்பிலும் உள்ள அனைவரிடமும் கோருகிறேன். நம் அனைவரும் இணைந்து நாட்டில் ஒரு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்துவோம்.

முதலீடு குறித்த சட்டங்களைக் கொண்டுவருவதற்கும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுக்குள், இலங்கையின் முதலீட்டு சபை மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு சபை என்பன நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக பொருளாதார ஆணைக்குழு உருவாக்கப்படும். அனைத்து துறைகளிலும் முதலீட்டை ஈர்ப்பதே இதன் நோக்கமாகும்.

அதன் பணிகள் வேறுபட்டதாக இருக்கும். முதலீட்டு வலயங்களும் கைத்தொழில் வலயங்களும் வேறுபடுத்தப்படும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களை உருவாக்குவதற்காக உட்கட்டமைப்பு வசதிக் கூட்டுத்தாபனம் அமைக்கப்படும். அரசாங்கத்துடன் தனியார் துறையும் இதில் இணைத்துக் கொள்ளப்படும். அனைத்தும் பொது நிறுவனங்களாக பதிவு செய்யப்படும். பின்னர் அவர்கள் உங்களுக்கு சேவையைத் தருவர்.

முன்மொழியப்பட்ட கூட்டுத்தாபனத்தின் ஊடாக முதலீட்டு சபைகள் கண்காணிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்படும்.மேலும், ஒரு சர்வதேச வர்த்தக மையமும் நிறுவப்பட்டு சர்வதேச வர்த்தகத்தக செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும். எனவே, இந்த மூன்று நிறுவனங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதாக செயற்படும். வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாங்கள் தயாரித்துள்ள புதிய நிறுவனக் கட்டமைப்பு இதுவாகும்.

துறைமுக ஆணைக்குழு சட்டத்தின் ஊடாக துறைமுக நகரத்தை நிதி நகரமாக மாற்ற நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஷெர்மன் மற்றும் ஸ்டெர்லிங் நிறுவனங்கள் தயாரித்த வரைபு உள்ளது. அவர்கள் அதனை மேம்படுத்தி விதிமுறைகளை உருவாக்கியுள்ளனர்.

இந்த செயற்பாடுகளுக்கு ஆளும்தரப்பைப் போன்றே எதிர்த்தரப்பும் ஒத்துழைக்க வேண்டும்.நான் கைத்தொழில்துறை அமைச்சராக இருந்தபோது, “நீங்கள் ஏன் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சை ஏற்கக்கூடாது?” என ஜனாதிபதி பிரேமதாஸ என்னிடம் வினவினார். நான் ஒரு சட்டத்தரணி, நான் விஞ்ஞானி அல்ல.” என்றேன். என்னிடம் அந்த அமைச்சை ஏற்குமாறு ஜனாதிபதி கூறினார். அந்த அமைச்சில் மீண்டும் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT