Saturday, April 27, 2024
Home » நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணைக்குழு நியமனம்
சர்ச்சைக்குரிய உரக் கப்பல் விவகாரம்

நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணைக்குழு நியமனம்

குழுவின் பரிந்துரைக்கமைய அடுத்த கட்ட நடவடிக்கை

by gayan
December 9, 2023 1:36 pm 0 comment
  • சபையில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு

சர்ச்சைக்குரிய உரக் கப்பல் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நீதிபதி ஒருவரின் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய மேற்படி கப்பலில் கொண்டுவரப்பட்ட உரம் தரமற்றது என்பதால் அது திருப்பி அனுப்பப்பட்டதுடன் எனினும் அந்த உரக்கப்பலுக்கு 6.7 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதால் அது தொடர்பில் தீர்க்கமான விசாரணை மேற்கொள்வதற்காகவே இந்த குழு நியமிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

குழுவின் பரிந்துரைகளையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய் மூல விடைக்கான வினாக்கள் வேளையில், தயாசிறி ஜயசேகர எம்.பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தயாசிறி ஜயசேகர எம்.பி தமது கேள்வியின் போது,

மேற்படி சர்ச்சைக்குரிய உர விவகாரத்தில் குறித்த கப்பலில் கொண்டுவரப்பட்ட உரம் தரமற்றது அதனால் தான் அந்த உரம் திருப்பி அனுப்பப்பட்டது என்று குறிப்பிட்டுள்ள போதும் அதற்காக ஏன் 6. 7 மில்லியன் டொலர்களை வழங்க நேர்ந்தது? அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் இனங்காணப் பட்டுள்ளனரா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, உரம் தொடர்பான இந்த விவகாரம் நான் விவசாய அமைச்சராக பதவி வகித்த காலத்தில் நடந்தது அல்ல. எனினும் அதில் தகவல்களை மறைப்பதற்கான எந்த அவசியமும் எனக்கு கிடையாது. அத்துடன் அது தொடர்பான கோப் அறிக்கை எனக்கு வழங்கப்படவில்லை. அவ்வாறு அந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் மூலம் எவ்வாறு செயற்பட வேண்டும் என எனக்கு அறிவிப்பு கொடுக்கப்படவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT