மேற்கிந்திய தீவுகள் விக்கெட் காப்பாளர் ஷேன் டவ்ரிக் மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் குழாத்திற்கு எதிர்பாராத வகையில் அழைக்கப்பட்டு 10 நாட்களுக்குள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக இந்த மாதம் நடைபெறும் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட குழாத்தில் 32 வயதான டவ்ரிக் இடம்பிடித்திருந்தார்.
கடைசியாக 2020 இல் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடிய டவ்ரிக் இதுவரை ஒரே ஒரு ஒருநாள் சர்வதேச போட்டியிலேயே ஆடியுள்ளார். “அவரின் பங்களிப்புக்காக ஷேனுக்கு நாம் நான்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் பணிப்பாளர் மைல்ஸ் பேஸ்கொம்ப் தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டில் தனது ஒரே ஒரு ஒருநாள் சர்வதேச போட்டியில் டவ்ரிக் ஆடியபோதும் அவர் 2015 தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரை மேற்கிந்திய தீவுகளுக்காக 35 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதில் அவர் மூன்று சதங்களுடன் 1,570 ஓட்டங்களை பெற்றதோடு, அவரது ஓட்ட சராசரி 29.07 ஆகும்.
நாளை (03) அன்டிகுவாவில் ஆரம்பமாகும் இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு டவ்ரிக்கிற்கு பதில் மாற்று வீரர் தேர்வு செய்யப்பட மாட்டாது என்று மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இந்த ஒருநாள் தொடர் முடிந்த பின் டிசம்பர் 12 தொடக்கம் 21 ஆம் திகதி வரை இரு அணிகளும் ஐந்து போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் ஆடவுள்ளன.