Saturday, April 27, 2024
Home » பங்களாதேஷ் டெஸ்ட்; உமிழ்நீர் பயன்படுத்தி நியூசி. அணி வீரர் பிலிப்ஸ் சர்ச்சை

பங்களாதேஷ் டெஸ்ட்; உமிழ்நீர் பயன்படுத்தி நியூசி. அணி வீரர் பிலிப்ஸ் சர்ச்சை

by Rizwan Segu Mohideen
December 2, 2023 1:18 pm 0 comment

பங்களாதேஷுக்கு எதிரான முதல் டெஸ்டின் நேற்றுமுன்தினம் (30) மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது, நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் உமிழ்நீரைப் பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

பங்களாதேஷ், நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் சில்ஹெட்டில் நடைபெற்று வருகிறது. முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் முதல் இன்னிங்ஸில் 310 ஓட்டங்களை எடுத்தது. நியூசிலாந்து 317 ஓட்டங்கள் குவித்து சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 10 ஓட்டங்கள் பின்தங்கியிருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ஓட்டங்களை எடுத்தது. அணித்தலைவர் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ சதம் பெற்றார்.

மூன்றாவது நாள் ஆட்டத்தில் கிளென் பிலிப்ஸ் உமிழ்நீரைப் பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது. 34ஆவது ஓவரின் முதல் பந்துக்குப் பின், பிலிப்ஸ் இருமுறை இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.

கள நடுவர்கள் அசன் ராஸா மற்றும் போல் ரைபல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனினும், பிலிப்ஸ் பந்துவீசுவதற்கு முன் இருமுறை உமிழ்நீரைப் பயன்படுத்தியது தொலைக்காட்சி ஒளிபரப்பில் பதிவாகியுள்ளது. கொரோனாவுக்குப் பின் பந்தில் உமிழ்நீரைப் பயன்படுத்தக் கூடாது என விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு கடந்தாண்டு ஒக்டோபர் தொடக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன் கடந்த ஆண்டு நவம்பரில் ஐக்கிய அரபு இராச்சியம், நேபாளம் இடையிலான ஆட்டத்தில் ஐக்கிய அரபு இராச்சிய வீரர் அலிஷன் ஷரஃபு உமிழ்நீரைப் பயன்படுத்தினார். இதற்கு அபராதமாக நேபாளத்துக்கு 5 ஓட்டங்கள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT