Sunday, April 28, 2024
Home » அகிலத்துக்கான முன்மாதிரிமிக்க அருட்கொடை

அகிலத்துக்கான முன்மாதிரிமிக்க அருட்கொடை

by sachintha
November 10, 2023 11:34 am 0 comment

நபி (ஸல்) அவர்கள் கி.பி.570 ஆம் ஆண்டு மக்காவில் பிறந்தார்கள். அன்னார் நற்சிந்தனையும், கருணையும் கொண்டவராகவும், நேர்மைக்கு பெயர் போனவராகவும் காணப்பட்டார்கள். தனது 63 வயதில் கி.பி.632 இல் மரணித்தார்கள். இந்த இடைப்பட்ட காலத்திற்குள் மனித சமூகத்துக்கு உயர்ந்த முன்மாதிரிகளை வழங்கினார்கள்.

அல்லாஹ்விடமிருந்து அன்னாருக்கு ஒரு வெளிப்பாடு கிடைத்தது. அந்த வெளிப்பாடு தான் அருள்மறையாம் அல் குர்ஆன் ஆகும். இது அல்லாஹ்வின் போதனைகளையும், மனிதர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டுதல்களையும் கொண்டது. இக்குர்ஆனைக் கொண்டே நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு வழிகாட்டினார்கள். அவர்களின் ஒவ்வொரு அசைவும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவே அமைந்திருந்தது.

ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை வணக்கத்திற்குரிய நாயன், அவனைத் தவிர வேறு யாரும் வணங்குவதற்குத் தகுதியானவர் இல்லை என நம்பிக்கை கொண்டதும் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என நம்பிக்கை கொள்வது ஈமானின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாகும்.

நபி (ஸல்) அவர்களது வாழ்வு உலக மக்களுக்கான முன்மாதிரிமிக்க வாழ்க்கை நெறியாகும். மனித சமூகத்திற்கான வழிகாட்டல்களை அல்லாஹ் அல்குர்ஆனில் கோட்பாடாக முன்வைத்து, அந்த வழிகாட்டல்களை நபி (ஸல்) அவர்கள் ஊடாக உலக மக்களுக்கு செயலுருப்படுத்திக்காட்டினான்.

அதாவது ஆட்சி முதல் அடுப்பங்கரை வரையான அனைத்து விடயங்களுக்கும் அன்னார் வழிகாட்டியுள்ளார்கள். மனித சமூகத்திற்கு ஏற்ற, நடைமுறை ரீதியான ஒரு மார்க்கம் இஸ்லாம் என்பதனை தனது முன்மாதிரிமிக்க வாழ்க்கையினூடாக நபி (ஸல்) அவர்கள் காட்டிச்சென்றார்கள். அன்னாரது போதனைகளும், வழிகாட்டல்களும் எல்லாக் காலத்துக்கும், எல்லா சமூகத்துக்கும் பொருத்தமானவையாகும். பண்பாடு, ஆன்மீகம், குடும்பவாழ்வு, சமூகவாழ்வு, அரசியல், தலைமைத்துவம், கொடுக்கல்-வாங்கல்கள் போன்ற எல்லா விடயங்களிலும் ஒரு முன்மாதிரிமிக்க மனிதராக நபி (ஸல்) அவர்கள் விளங்குகிறார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மனைவியான ஆயிஷா (ரழி) அவர்களிடம் நபிகளாரின் வாழ்வு எவ்வாறு அமைந்திருந்தது என வினவப்பட்ட போது, அன்னாரது வாழ்வும், பண்பாடுகளும் முற்றிலும் குர்ஆனாகவே இருந்தது’ என பதிலளித்தார்கள். (நபிமொழி)

மேலும் நபி (ஸல்) அவர்கள் நேர்மையானவராகவும், தைரியமானவராகவும் மாத்திரமல்லாமல் அன்பும், கருணையும் நிறைந்தவராக இருந்தார்கள். கேட்பவருக்கு இல்லையென சொல்லிராதவர். இருப்பதைக் கொடுத்துதவினார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருந்தார்கள். மிருதுவாகப் பேசுவார்கள். எல்லோருடனும் நெருங்கிப் பழகினார்கள். குழந்தைகளோடு கனிவுடன் பேசுவார்கள். அவர்களை மடியில் வைத்துக் கொஞ்சுவார்கள். யாரைக்கண்டாலும் முதலில் ஸலாம் கூறுவது நபி (ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது. எவரையும் அவர் புறக்கணிக்கக்கூடியவராக இருந்ததில்லை.

அதேபோன்று விருந்தினர்களை கண்ணியப்படுத்தல், நிதானமான பேசுதல், சிறியவர் மற்றும் பெரியவர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்தல் உள்ளிட்ட எல்லா விடயங்களிலும் அன்னார் முன்மாதிரியாக நடந்து கொண்டார்கள்.

சொத்துக்கள், செல்வங்கள் பல இருந்தாலும் இன்னும் வேண்டும் என்று பேராசைப்படும் மக்கள் வாழும் இவ்வுலகத்தில் இருப்பதையெல்லாம் நற்காரியங்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக அன்னார் திகழ்ந்தார்கள். இதனால் வறுமை ஏற்பட்டு விடுமோ என்று அவர்கள் அஞ்சியதில்லை. ”வீசும் காற்றை விட அதிகமாக வாரி வழங்குபவர்களாக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள்” என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

(ஆதாரம்-: புஹாரி)

மேலும் பொறுமையும், மென்மையும் நிறைந்தவராகவும் திகழ்ந்தார்கள். தலைவராக இருக்கும் அனைவருக்கும் பொறுமையும், மென்மையும் அவசியம். அப்போதுதான் தன்னைவிட கீழிருக்கும் மக்களை நல்வழிப்படுத்தவும், அவர்களின் செயல்கள் சில சமயங்களில் கோபத்தை ஏற்படுத்தும்படி இருக்கும்போது அவர்களிடம் மென்மையாக நடந்துக்கொண்டு பொறுமைகாத்து அவர்களுக்கு நல்வழிகாட்டவும் முடியும்.

அத்தகைய பெரும் நற்குணங்களை நபி (ஸல்) பெற்றிருந்ததால்தான் அன்றைய அரபு மக்களிடம் அல்லாஹ்வின் உதவியைக்கொண்டு மென்மையோடும், பொறுமையோடும் அன்னார் நடந்து கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் எவ்வித துன்பங்களை எதிர்கொண்டாலும் அதனையெல்லாம் பொருட்படுத்தாது நடந்து கொண்டதால்தான் அம்மக்களை அவர்களால் அரவணைத்துச் செல்ல முடிந்தது, வழிகாட்டவும் முடிந்தது.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஒரு சிறந்த ஆசிரியராகத் திகழ்ந்தார்கள். கல்வி கற்க அனைவரையும் தூண்டினார்கள். யுத்த கைதிகளிடம் கூட அறிவை பெற தயங்கவில்லை. நபி (ஸல்) அவர்களிடம் ‘திண்ணைத் தோழர்கள்’ என்ற பெயரில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் முழு நேரம் கல்வி பெற்றார்கள்.

அதேபோன்று அவர்களின் குடும்ப வாழ்வியலை பொறுத்த வரையில் அவர்களது மனைவிமார்களுடன் நல்ல முறையில் நடந்துள்ளார்கள். அவர்களிடம் ஆலோசனை கேட்டு செயற்பட்டிருக்கின்றார்கள். வீட்டில் அவர்களுடைய வேலைகளை அவர்களாகவே செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள்.

எனவே அன்னாரை பின்பற்றும் ஒவ்வொருவரும் அன்னாரது வாழ்வையும் போதனைகளையும் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். அதுவே இஸ்லாத்தின் வழிகாட்டலாகும்.

எம்.என்.பயாஸ் அஹமட்…

தோப்பூர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT