Sunday, April 28, 2024
Home » இஸ்ரேலின் செயலை மேற்குலகம் நியாயப்படுத்துவது அநீதியானது!

இஸ்ரேலின் செயலை மேற்குலகம் நியாயப்படுத்துவது அநீதியானது!

by damith
November 6, 2023 6:00 am 0 comment
பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

இன்று பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் மோசமான தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமது சொந்தப் பூமியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஹமாஸ் அமைப்பு போராடுகின்றது. இந்நிலையில் இஸ்ரேலுக்கு எதிரான நாடுகள் இஸ்ரேலின் செயலை நியாயப்படுத்த எத்தனிப்பது நியாயமல்ல என்று பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை-_ பலஸ்தீன் நட்புறவுச் சங்க உபதலைவருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கூறினார்.

களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளன பிரதிநிதிகளுடனான விஷேட சந்திப்பு பேருவளை, மருதானை எம்.முஸம்மில் இல்லத்தில் நடைபெற்ற போது இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் இவ்வாறு குறிப்பிட்டார்.

“பலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலால் அப்பாவி மக்களின் குடியிருப்புகள் மாத்திரமின்றி வைத்தியசாலைகள்,பாடசாலைகளும் இடிந்து தரைமட்டமாகிக் கொண்டிருக்கின்றன.

1940 களில் இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருக்கவில்லை. இந்த நிலையில், 1948 ஆம் ஆண்டு, அமெரிக்கா,பிரித்தானியா போன்ற வல்லரசு நாடுகளின் கூட்டுச் சேர்க்கையில் இஸ்ரேல் உருவாக்கிக் கொடுக்கப்பட்டது. இஸ்ரேல் காலத்திற்குக் காலம் சண்டையிலீடுபட்டு பலஸ்தீனர்களை அடக்கி அவர்களது நிலங்களை ஆக்கிரமித்து வருகிறது.1967ஆம் ஆண்டு நடைபெற்ற 6 நாள் யுத்தத்தில் எகிப்து,ஜோர்தான்,சிரிய ஆகிய நாடுகளின் பகுதிகளையும் கைப்பற்றி தனது எல்லைகளை நான்கு மடங்காக விஸ்தரிக்கவும் செய்தது.

பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் அப்போதைய தலைவர் யாஸிர் அரபாத் இஸ்ரேலுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதிலும், அது வெறும் கண்துடைப்பாகவே அமைந்தது. இந்த நிலையிலேயே இப்போது சண்டை மூண்டுள்ளது. இதனை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு குவைத் அரசு கொண்டு வந்த ஆலோசனைக்கு பாதுகாப்பு சபையின் 14 நாடுகளும் ஒன்றுபட்டு இணங்கியிருந்த நிலையில் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் அதனை நிராகரித்துள்ளது.

இதற்கு முன்னரும் இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானங்கள் வருகிற போதெல்லாம் அமெரிக்கா வீட்டோவைப் பாவித்தே வருகிறது. இதற்கு புறம்பாக ஐ.நா.சபை நிறைவேற்றிய தீர்மானங்கள் பலவும் இஸ்ரேலால் உதாசீனப்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்கள் பலவுள்ளன.

இப்போது காஸா மக்கள் நீர் மற்றும் உணவுக்காக சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மின்சாரமின்றி நாட்கணக்கில் இரவுகளைக் கழிக்கிறார்கள். இவை எதுவும் அவர்களின் கண்களுக்குப் புலப்படுவதில்லை. ஆனால் இஸ்ரேலுக்காக மட்டும் இவர்கள் உதவிக்கரம் நீட்டுவதே இவர்கள் பக்கமுள்ள நியாயமாக உள்ளது.

சொந்த மண்ணைப் பறிகொடுத்து தவிக்கும் பலஸ்தீனர்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை என்பதே இவர்களது நியாயமாக உள்ளது. இந்த மனோநிலை மாறாத வரையில் உலகில் நீதி நிலைக்க இடம் இல்லை” என்று இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எம்.பி மேலும் தெரிவித்தார்.

(பேருவளை பீ.எம். முக்தார்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT