Tuesday, April 30, 2024
Home » மலையின் உச்சியிலிருந்து வீழ்ந்து இளைஞன் உயிரிழப்பு

மலையின் உச்சியிலிருந்து வீழ்ந்து இளைஞன் உயிரிழப்பு

- கொலையா? தற்கொலையா? என பொலிஸார் சந்தேகம்

by Prashahini
November 3, 2023 10:14 am 0 comment

– தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு 

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹரஸ்பெத்த பகுதியில் சுமார் ஆயிரம் அடி உயரம் கொண்ட தர்பனா எல மலை அடிவார பகுதியில் உடல் பாகங்கள் உடைந்து உயிரிழந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்றை இராகலை பொலிஸார் நேற்று (02) மாலை மீட்டுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் இராகலை ஹரஸ்பெத்த பகுதியில் வசிக்கும் 24 வயதுடைய மலிந்த தில்ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

சடலமாக மீட்கப்பட்ட மலிங்க தில்ஷான் தனது வீட்டில் தாய், தந்தையரை தாக்கி சண்டையிட்டு நான் எங்காவது போய் எனது உயிரை மாய்த்துகொள்வேன், எனது உடம்புக்கூட உங்களுக்கு கிடைக்காது என கூறிவிட்டு நேற்று (01) மாலை வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதையடுத்து பெற்றோர்களும் இராகலை பொலிஸ் நிலையத்திற்கு விரைந்து தனது மகன் மது அருந்திவிட்டு தங்களை தாக்கிவிட்டு கோபத்தில் வீட்டைவிட்டு சென்றதாக முறைப்பாடு செய்துள்ளனர்.

அதேநேரத்தில் கோபத்தில் சென்ற மகன் வீட்டுக்கு வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று (02) மாலை இளைஞரின் வீட்டாருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பில் தன்னை அடையாளப்படுத்தி கொள்ளாத நபர் ஒருவரின் சடலம் தர்பனா எல மலை அடிவாரத்தில் கிடப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இத்தகவலை பெற்றோர் இராகலை பொலிஸ் நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர். பின் தர்பனா எல மலை அடிவாரத்திற்கு விரைந்த இராகலை பொலிஸார் அங்கு உடல் பாகங்கள் உடைந்து உயிரிழந்த நிலையில் இளைஞரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

அதேநேரத்தில் உயிரிழந்திருப்பதாக தனது மகன் என பெற்றோர்களும் உடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.

பின் சம்பவம் தொடர்பில் வலப்பனை நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ள பொலிஸார் இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகத்தையும் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், தர்பனா எல மலை சுமார் ஆயிரம் அடி உயரம் கொண்டுள்ளது என தெரிவித்த பொலிஸார் இம்மலை உச்சியிலிருந்து இவ் இளைஞன் வீழ்ந்துள்ளமையினால் உடல் பாகங்கள் உடைந்து மரணம் சம்பவித்திருக்கிறது எனவும் தெரிவித்தனர்.

மேலும், சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் மரண விசாரணையின் பின் பிரேத பரிசோதணைக்காக நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஆ.ரமேஸ்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT