Saturday, April 27, 2024
Home » வரவு செலவு திட்டத்தில் தனியார் துறையின் யோசனைகளை உள்வாங்க எதிர்பார்ப்பு

வரவு செலவு திட்டத்தில் தனியார் துறையின் யோசனைகளை உள்வாங்க எதிர்பார்ப்பு

- பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு தனியார் துறையினர் பாராட்டு

by Rizwan Segu Mohideen
November 2, 2023 6:04 pm 0 comment

பொருளாதாரத்தைப் பலப்படுத்த தனியார் துறையினர் முன்வைக்கும் யோசனைகளை வரவு செலவு திட்டத்தில் உள்வாங்க எதிர்பார்ப்பதாகவும், அதற்காக ஒவ்வொரு துறைகளையும் தனித்தனியாக ஆராய விருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தனியார் துறை நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (01) நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்திற்கான முன்னோடிப் பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீண்டு, வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதை நோக்காகக் கொண்ட மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் தனியார் துறை பிரதானிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது அரச வருமானம் மற்றும் செயற்திறனைப் பலப்படுத்தல், முதலீட்டாளர்களை ஈர்த்தல், சுற்றுலாத்துறை, ஆடைக் கைத்தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் ஊக்குவிக்கும் யோசனைகளை தனியார் நிறுவன பிரதானிகள் ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்ட பின்னர் முன்னெடுக்கும் திட்டங்கள், பல்வேறு துறைகளிலுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகள் ஆகியன குறித்தும் இம்முறை வரவு செலவு திட்டத்தில் கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

தனியார் துறையினர் முன்வைத்த யோசனைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும், எதிர்வரும் நாட்களில் ஒவ்வொரு துறை தொடர்பிலும் தனித்தனியே கலந்துரையாட எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

பொருளாதார ஸ்திரதன்மையை ஏற்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களுக்கு தனியார் துறை நிறுவன பிரதானிகள் பாராட்டு தெரிவித்தனர்.

பொருளாதார அலுவல்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, ஜனாதிபதி ஆலோசகர் சந்திரா சாப்டர், நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன, இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி உட்பட நிறுவன பிரதானிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT