Saturday, April 27, 2024
Home » காசாவில் இஸ்ரேலின் தீவிர தாக்குதலுக்கு மத்தியில் எகிப்துடனான ரபா எல்லை முதல்முறையாக திறப்பு

காசாவில் இஸ்ரேலின் தீவிர தாக்குதலுக்கு மத்தியில் எகிப்துடனான ரபா எல்லை முதல்முறையாக திறப்பு

- ஜபலியா அகதி முகாம் மீது பயங்கரத் தாக்குதல்

by Rizwan Segu Mohideen
November 2, 2023 11:19 am 0 comment

காசாவில் உணவு, எரிபொருள் மற்றும் மற்ற பொருட்கள் தீர்ந்துவரும் அச்சுறுத்தல் அதிகரித்து தரைவழிப் போர் தீவிரம் அடைந்திருக்கும் சூழலில் அங்குள்ள அதிக சனநெரிசல் மிக்க ஜபலியா அகதி முகாம் மீது இஸ்ரேல் நடத்திய சரமாரி குண்டுத் தாக்குதல்களில் 50க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த அகதி முகாம் மீது ஒவ்வொன்றும் ஒரு தொன் எடை கொண்ட 6 ஷெல் குண்டுகள் விழுந்ததாக காசா உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டு பாரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற இந்தப் பயங்கர தாக்குதலில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் என 400க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பலர் இடிபாடுகளில் தொடர்ந்து சிக்கி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலை உறுதி செய்திருக்கும் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பின் மூத்த தளபதி ஒருவர் மற்றும் ஏனைய போராளிகளை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டுள்ளது. இதற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

ஜபலியா அகதி முகம் மீதான தாக்குதல்களில் ஏழு பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவான அல் கஸ்ஸாம் படை தெரிவித்துள்ளது. இதில் வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றவர்களும் இருப்பதாக அது தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இஸ்ரேல் எந்த பதிலும் அளிக்கவில்லை.

1948இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது அகதிகளாக அடைக்கலம் பெற்ற பலஸ்தீனர்களின் குடும்பங்களே இங்கு வாழ்கின்றனர்.

இந்நிலையில் காசா பகுதியில் இருந்து குறிப்பிடத்தக்க வெளிநாட்டவர்கள் காயமடைந்தவர்கள் வெளியேற கட்டாரின் மத்தியஸ்தத்தில் நேற்று உடன்பாடு ஒன்று எட்டப்பட்டது. இஸ்ரேலிய தாக்குதல்களால் காசாவில் உயரிழப்பு எண்ணிக்கை 8500ஐ தாண்டியிருக்கும் நிலையில் எகிப்து, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலேயே இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

எனினும் காசாவில் நேற்று மீண்டும் ஒருமுறை தொடர்பாடல்கள் மற்றும் இணையதள சேவைகள் முற்றாக துண்டிக்கப்பட்டதாக அந்தப் பகுதிக்கான தொலைத்தொடர்பு வழங்குநரான பால்டெல் குறிப்பிட்டுள்ளது.

“பொதுமக்களுக்கு எதிராக தாம் செய்யும் குற்றங்களை உலகம் பார்ப்பதை அவர்கள் (இஸ்ரேல்) விரும்பவில்லை” என்று தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டது தொடர்பில் காசா குடியிருப்பாளர் அஹமது முஹசி தெரிவித்தார்.

காசா மீது பல வாரங்கள் வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை இடைவிடாது நடத்திய இஸ்ரேல் உலகின் அதிக சனநெரிசல் மிக்க பகுதிகளில் ஒன்றான அந்த குறுகிய நிலப்பகுதிக்கு தனது தரைப்படைகளை அனுப்பியுள்ளது.

ஹமாஸ் அமைப்பை அழித்தொழிக்கப்போவதாக இஸ்ரேல் சூளுரைத்துள்ளது. எனினும் காசாவில் பொதுமக்கள் உயிரிழப்பு நாளுக்கு நாள் பல மடங்கு அதிகரித்து மனிதாபிமான நெருக்கடி ஒன்று ஏற்பட்டிருப்பது உலகெங்கும் பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.

இஸ்ரேலின் முழு முற்றுகைக்கு மத்தியில் உணவு, எரிபொருள், குடிநீர் மற்றும் மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதோடு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் போராடி வருகின்றன.

இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புடன் உறவைக் கொண்டிருக்கும் வளைகுடா நாடான கட்டார் வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மற்றும் படுகாயம் அடைந்த சிலரை காசாவில் இருந்து எகிப்துக்குச் செல்ல அனுமதிக்கும் உடன்பாடு ஒன்றை எட்டியுள்ளது.

இதனை அடுத்து ரபா எல்லையைக் கடந்து எகிப்து செல்வதற்காக அம்பூலன்ஸ் வண்டிகள் நேற்று வரிசையில் காத்திருந்தன. ஏற்கனவே காசா எல்லைக்கு அருகில் எகிப்து நடமாடும் மருத்துவமனைகளை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி நேற்றைய தினத்தில் காயமடைந்த 88 பேர் மற்றும் 500க்கும் அதிகமான வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் காசாவில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் காசா போர் வெடித்த கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதிக்கு பின்னர் எகிப்துடனான ரபா எல்லை திறக்கப்படுவது இது முதல் முறையாகும்.

காசாவில் தரைவழி மோதல்களும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற சண்டைகளில் பதினொரு இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. காசா மீதான போரை ஆரம்பித்தது தொடக்கம் ஒரு நாளில் அதிக இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்ட தினமாக இது பதிவாகியுள்ளது. தவிர மேலும் இரு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் நேற்று தெரிவித்துள்ளது.

எனினும் போர் ஆரம்பித்தது தொடக்கம் கொல்லப்பட்ட இஸ்ரேலிய படை வீரர்களின் எண்ணிக்கை 328 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரெலில் ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலிலேயே கொல்லப்பட்டனர்.

காசாவில் இருக்கும் இரு பிரதான மருத்துவமனைகளான அல் ஷிபா மருத்துவமனை மற்றும் இந்தோனேசிய மருத்துவமனைகளில் உள்ள மின் பிறப்பாக்கிகளுக்கான எரிபொருள் வேகமான தீர்ந்துவரும் நிலையில் மின்சாரத் துண்டிப்புப் பற்றிய அச்சம் அதிகரித்துள்ளது.

காசாவில் இருக்கும் எரிபொருள் நிரப்புநிலை உரிமையாளர்கள் தம்மிடம் இருக்கும் எரிபொருளை மருத்துவமனைகளுக்கு வழங்கும்படி காசா சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரப் அல் கித்ரா கேட்டுள்ளார்.

அடக்கம் செய்வதற்காக தமது உறவினர்களின் சடலங்களை பெறுவதற்கு நேற்றும் பல டஜன் பேர் நாசர் மருத்துவமனை பிரேத அறைக்கு வெளியில் காத்திருந்தனர். அங்கே சடலங்களில் இருக்கும் இடிபாடுகளின் தூசி மற்றும் இரத்தம் கழுவப்பட்டு அடக்கத்திற்காக வெள்ளைத் துணியால் போர்த்தப்படுகிறது.

கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்ட நான்கு சிறுவர்கள் உட்பட 15 பலஸ்தீனர்களின் சடலங்கள் வந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

“ஒவ்வொறு நாளும் உயிரிழப்புகள் இடம்பெறுவதோடு ஒவ்வொரு நாளும் அவர்களில் பெண்கள் அல்லது சிறுவர்கள் அல்லது அவர்கள் இருவரும் இருக்கின்றனர்” என்று மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

இஸ்ரேலிய வான் மற்றும் தரைவழி தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 271க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதன்படி அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,796 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,648 சிறுவர்கள் மற்றும் 2,290 பெண்கள் அடங்குகின்றனர்.

அத்தோடு காசாவில் 22,219 பேர் காயமடைந்திருப்பதோடு 1,120 சிறுவர்கள் உட்பட 2,030 பேர் காணாமல்போயுள்ளனர்.

இதில் 130 மருத்துவ உதவியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு 28 அம்பூலன்ஸ்கள் அழிக்கப்பட்டுள்ளனர். காசாவில் 270க்கும் அதிகமான சுகாதார பராமரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளன. அங்குள்ள 35 மருத்துவமனைகளில் 16 செயலிழந்திருப்பதோடு 72 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 51 மூடப்பட்டுள்ளன.

மறுபுறம் மேற்குக் கரையிலும் பதற்றம் அதிகரித்திருக்கும் சூழலில் அங்கு 128 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு 1,980 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டினி பிளிங்கன் நாளை (03) இரண்டாவது முறையான இஸ்ரேலுக்கு பயணிக்கவுள்ளார். முன்னதாக கடந்த ஒக்டோபர் 16 ஆம் திகதி அவர் இஸ்ரேல் சென்றிருந்ததோடு அதனைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் இஸ்ரேல் சென்றிருந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT