Sunday, May 5, 2024
Home » அரசாங்க ஊழியர்கள் கொண்டுள்ள பொறுப்பு

அரசாங்க ஊழியர்கள் கொண்டுள்ள பொறுப்பு

by mahesh
November 1, 2023 6:00 am 0 comment

‘நாட்டிலுள்ள சகல அரசாங்க ஊழியர்களுக்கும் எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் சம்பள உயர்வு வழங்கப்படும்’ என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றுமுன்தினம் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது சம்பள உயர்வு கோரி அரச ஊழியர்கள் கடந்த சில தினங்களாக முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது.

மத்திய, மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்ற அரச நிறுவனங்களின் அரச ஊழியர்கள் நேற்றுமுன்தினம் நாடளவிய ரீதியில் சம்பள உயர்வு கோரி மதியஉணவு வேளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பில் விஷேட கவனம் செலுத்திய ஜனாதிபதி ‘எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் சகல அரச ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும்’ என்று அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடத்தின் ஆரம்பப் பகுதியில் அந்நிய செலாவணி பற்றாக்குறையோடு நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. அதன் விளைவாக மக்கள் பலவிதமான நெருக்கடிகளுக்கும் அசௌகரியங்களுக்கும் முகம்கொடுத்திருந்தனர். எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்டவற்றுக்கு நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் யுகம் உருவாகி இருந்தது. தினமும் சில மணித்தியாலயங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது.

பொருளாதார நெருக்கடியின் காரணமாக அரசியல் உச்ச கொதிநிலையை அடைந்திருந்ததோடு, அன்றைய பிரதமர் தலைமையிலான அரசாங்கம் மாத்திரமல்லாமல் ஜனாதிபதியும் கூட பதவி விலகும் நிலைமை உள்ளாகியது. இந்த நிலையில் நாட்டின் தலைமையை ஏற்க எவரும் முன்வராத சூழலில் அதனைப் பொறுப்பேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொருளாதார ரீதியில் நாட்டை மீட்டெடுப்பதற்கான வேலைத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தார். அதன் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களும் பாதிப்புக்களும் கட்டம் கட்டமாக நீங்க வழிவகுத்தன. இவ்வாறு மீட்சி பெற்று வந்த நாடு மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்திருக்கிறது. பொருளாதாரமும் நம்பிக்கை அளிக்கும் வகையில் முன்னோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.

ஆன போதிலும் நாடு முகம்கொடுத்த பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களும் அசௌகரியங்களும் இன்னும் முழுமையாக நீங்கியதாக இல்லை. இவ்வாறான சூழலில்தான் அரச ஊழியர்கள் சம்பள உயர்வுக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றனர். பொருட்களின் விலைகள் தினமும் அதிகரிக்கின்ற போதிலும் குறைவடைவதாக இல்லை. அதனால் மக்களின் சம்பளத்தை அதிகரிப்பதை தற்போதைய அரசாங்கம் ஒரு கொள்கையாகவே கருதுகிறது.

அந்த வகையில் அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் சம்பள உயர்வை மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்திருக்கிறது. இதனை அறிந்து கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட சில குழுக்கள் தங்களது அழுத்தம் காரணமாகவே சம்பள உயர்வு கிடைக்கப் பெறுவதாக காட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாகவே இந்த ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்பதை மறந்துவிடலாகாது. இந்நிலையில் ஜனாதிபதியின் இவ்வறிவிப்பை அரச ஊழியர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

இருப்பினும் இச்சம்பள உயர்வு அறிவிப்பு எவ்வாறானதொரு பொருளாதார சூழலில் வழங்கப்பட்டு இருக்கிறது என்பதை அரச ஊழியர்கள் கவனத்தில் கொள்வது அவசியம். நெருக்கடிக்கு உள்ளான பொருளாதாரம் முழுமையாக மீட்சி பெறாத போதிலும், அரச ஊழியர்களது கோரிக்கைக்கு உடனடியாகவே சாதகமான பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.

அதேநேரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராகப் பதவி வகித்த போது அரச ஊழியர்களின் சம்பளத்தை பத்தாயிரம் ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

நாட்டின் பொருளாதார நிலை கடந்த காலங்களைப் போன்ற நிலையில் இல்லாத சூழலிலும் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றால் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அரச ஊழியர்களின் நலன்களில் எவ்வளவு தூரம் அக்கறையோடு செயற்படுகிறது என்பது தெளிவாகிறது. அதேநேரம் அரசாங்கத்தின் விஷேட கவனத்திற்குரியவர்கள் அரச ஊழியர்கள் மாத்திமல்லர்.

ஆகவே பொருளாதார ரீதியில் நாட்டை முழுமையாக கட்டியெழுப்புவதற்கு அரச ஊழியர்கள் உச்ச பங்களிப்பை அளிக்க வேண்டும். இதன் நிமித்தம் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்குவது அவசியம். இது அரச ஊழியர்களின் பொறுப்பாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT