Friday, May 3, 2024
Home » மலையகத்தின் கல்வி, சமூகம், சுற்றுச்சூழல் அபிவிருத்தி நோக்கிய செயற்திட்டம் ஒரு நோக்கு

மலையகத்தின் கல்வி, சமூகம், சுற்றுச்சூழல் அபிவிருத்தி நோக்கிய செயற்திட்டம் ஒரு நோக்கு

காவேரி கலா மன்றம், கிளிநொச்சி ரொட்ரிக் கழகம் திட்டங்களுக்கு பூரண பங்களிப்பு

by gayan
October 19, 2023 12:04 pm 0 comment

காவேரி கலா மன்றம் மற்றும் கிளிநொச்சி நகர் ரொட்ரிக் கழகத்தின் அனுசரணையுடன் ‘குறிஞ்சி மலர்’ என்னும் தொனிப்பொருளில் மலையகத்தில் கல்வி, சமூகம் சுற்றுச் சூழல் அபிவிருத்தி நோக்கிய செயற்றிட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இரத்தினபுரி புனித ஜோக்கிம் தமிழ் மகா வித்தியாலயத்தில் அதிபர் டி. எம். ஈ ரோய் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது விசேட அம்சமாக காவேரிக் கலா மன்றத்தினால் நிர்மாணிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு வகுப்பறை கூடம் திறப்பு நிகழ்வும் மற்றும் இரத்தினபுரி புனித ஜோக்கிம் தமிழ் மகா வித்தியாலயத்தின் பெற்றோர் ஒருவரின் தோட்டத்தில் தேயிலை மரம் நடுதல் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி ஜெனிவர் சுமித், செயற்கை நுண்ணறிவு வகுப்பறை கூடத்தை மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்ட கிளிநொச்சி நகர் ரொட்ரிக் கழகத்தின் தலைவி வனிதா சிவநேசன், இரத்தினபுரி புனித ஜோக்கிம் தமிழ் மகா வித்தியாலயத்தின் பெற்றோர் ஒருவரின் தோட்டத்தில் தேயிலை மரம் நடுதலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் கிளிநொச்சி ரொட்ரிக் கழகத்தின் சமூகப் பிரிவின் தவிசாளர் அதிபர் அ. பங்கையற் செல்வன், கிளிநொச்சி ரொட்ரிக் கழகத்தின் பொருளாளர் ராமச்சந்திரன் ஜயசீலன், ரொட்ரிக் கழகத்தின் செயலாளர் கஜேந்திரகுமார், ரதி கஜேந்திரகுமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

இரத்தினபுரி புனித ஜோக்கிம் தமிழ் மகா வித்தியாலய அதிபர் டி. எம். ஈ. ரோய் இந்நிகழ்வு குறித்து கருத்து தெரிவிக்கையில், புனித ஜோக்கிம் தமிழ் மகா வித்தியாலயமானது 1936 ஆம் ஆண்டு ஒரு தோட்டப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக வளர்ச்சியடைந்து 1977 ஆம் ஆண்டில் அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டது. அவ்வாறு பாடசாலையின் முன்னேற்றம் அடைந்துவந்த நிலையிலே 2000 ஆம் ஆண்டளவில் க. பொ. த உயர் தர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டதோடு 2015 ஆம் ஆண்டில் உயர் தர கலைப்பிரிவும் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையானது மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற பெற்றோர்களின் பிள்ளைகள் கல்வி கற்கின்ற ஒரு பாடசாலையாகும்.

இப்பாடசாலை கல்விச் செயற்பாடுகளிலும் இணைப்பாட விதான செயற்பாடுகள் உட்பட பாடசாலை அபிவிருத்திப் பணிகளிலும் முன்னேற்றம் கண்டு வருகின்றபோது, காவேரிக் கலா மன்றம் மற்றும் கிளிநொச்சி நகர் ரொட்ரிக் கழகம் எமது பாடசாலையின் மீது கவனம் செலுத்தி பாடசாலையின் சில தேவைகளை நிறைவேற்றி வருகின்றன. அதன் அடிப்படையில் முதலாவதாக எமது பாடசாலை மாணவர்களுக்கு சிறந்த குடிநீரைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட செயற் திட்டம் மிகவும் முக்கியமானதாகும்.

இச்செயற்றிட்டமானது ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு வேறாகவும் இடைநிலைப் பிரிவு மாணவர்களுக்கு வேறாகவும் இரண்டு பிரிவுகளாக அந்தக் குடி நீர்த் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இப்போது நிறைவடைந்துள்ளது. இச்சந்தர்ப்பத்தில் எமது பாடசாலைக்கு செயற்கை நுண்ணறிவுக் கற்கை கூடத்திற்கான உபகரணங்கள் மாணவர்களின் பயன்பாட்டுக்காக கையளிக்கப்பட்டுள்ளன.

எமது பாடசாலை இவ்வாறான ஓர் ஆரம்ப கட்ட நிலையில் இருந்து இப்பொழுது ஓர் உயர்ந்த நிலையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு இந்த காவேரிக் கலாமன்றம், நலன்விரும்பிகள், கிளிநொச்சி ரொட்ரிக் கழகம் உள்ளிட்ட அனைவரும் இதற்கு உதவி செய்து வருகின்றனர்.

இன்றைய நிகழ்வில் லண்டன் நாட்டில் உள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஜெனிவர் சுமித் அவர்களின் கரங்களினால் செயற்கை நுண்ணறிவு கற்கை கூடம் திறந்து வைக்கப்பட்டது. காவேரிக் கலா மன்றத்தின் சமூக செயற்பாடு என்ற அடிப்படையில் இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரின் பெற்றோருக்கு வருமானத்தை உயர்த்தும் முகமாக அவரது சொந்தக் காணியில் தேயிலைக் கன்றுகளைப் பயிரிடுவதற்கு காவேரிக் கலா மன்றமும் கிளிநொச்சி ரொட்ரிக் கழகமும் இணைந்து அந்த மரக் கன்றுகளை பெற்றுக் கொடுப்பதற்கான பணிகளையும் செயற்படுத்துவதற்கான உதவிகளையும் செய்துள்ளன. இது நல்லதொரு செயற் திட்டமாகும்.

அந்த தேயிலைத் தோட்டக் காணி எமது பாடசாலைப் பிள்ளைகளின் பெற்றோர் பணம் கொடுத்து வாங்கிய சொந்தக் காணியாகும். அது ஒன்றரை ஏக்கர் காணி. இக் காணியினை அவர்கள் தோட்டத்தில் வேலை செய்து பெற்ற ஊதியத்தின் மூலம் சேகரித்த பணத்தினால் பெற்றுக் கொண்டதாகும். அவர்கள் தங்களுடைய பணத்தை சிறந்த முறையில் முதலீடு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

மேற்படி திட்டம் பாடசாலைக்கும் எமது சமூகத்திற்கும் பெரும் உதவியாக இருக்கப் போகின்றது. எதிர்காலத்தில் அதில் இருந்து கிடைக்கின்ற வருமானத்தின் மூலம் தங்களது குடும்பத்தையும் வளர்ச்சியடையச் செய்யவும் தங்களது பிள்ளைகளையும் நல்ல நிலையில் கல்வி கற்கக்கூடிய ஏற்பாடுகளைச் செய்யவும் இத்திட்டம் சிறந்த பயனளிக்கும். அதேவேளையில் பெற்றோர் எதிர்வரும் காலங்களில் சிறந்த முறையில் பாடசாலைக்கும் பங்களிப்புச் செய்யக் கூடியதாகவும் அது வளர்ச்சி பெற்று காணப்படும்.

இந்த செயற்திட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது. எமது சமூகத்தில் இருக்கின்ற இன்னும் பலர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் இருந்தால் அவர்களுடைய பணத்தை சரியான முறையில் முதலீடு செய்து எதிர்வரும் காலங்களில் சிறந்த ஒரு பயனாளிகளாக வரக் கூடிய ஒரு சந்தர்ப்பத்தை அவர்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம். எனவே, இந்தப் பாடசாலை இந்தக் காவேரிக் கலா மன்றம், ரொட்ரிக் கழகம் ஆகியன இணைந்து செயற்படுகின்ற பொழுது எதிர்காலத்தில் எமது மாணவர்கள் சிறந்த கல்விமான்களாக வருவதற்குரிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. எனவே இவ்வாறான செயற்பாடுகள் பாடசாலைக்கு வந்து கிடைப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். மேலும் மேற்படி உதவிய இரு அமைப்புகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும், எங்கள் பாடசாலையில் கற்ற பிள்ளைகள் ஐந்து பேர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று கொண்டிருக்கிறார்கள். 2017 ஆம் ஆண்டு முதலில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் முதல் 2018, 2019, என்று தொடர்ச்சியாக இப்படி பரீட்சைக்கு தோற்றியவர்களில் ஐந்து பேர் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இப்படி இந்த மாணவர்களைக் கொண்டு அவர்களுடைய குடும்பத்தையும் வளப்படுத்தி எடுத்தால் எதிர்காலத்தில் இப்பிரதேசத்திலுள்ள மாணவர்கள் பெற்றோர்கள் பிள்ளைகள் இன்னுமின்னும் தோட்ட வேலைகளை எதிர்பார்த்து இருக்காமல் சுயமாகவே தோட்டங்களைச் செய்து அல்லது வேறு ஏதோ தொழில் துறைகளில் ஈடுபாடு கொண்டு சுபீட்சமான வாழ்க்கை முறையொன்றை அவர்கள் அமைத்துக் கொள்வார்கள். இந்த இடத்தில் ஓர் அதிபராக மட்டும் இல்லாமல் எமது சமூகத்திற்கு கல்வியோடு காவேரிக் கலா மன்றம், ரொட்ரிக் கழகம் போன்ற அமைப்புக்களின் ஊடாக ஏதாவது உதவிகளைப் பெற்றுக் கொடுத்து எமது பாடசாலையினையும் எமது பாடசாலை சமூகத்தையும் உயர்த்த வேண்டும் என்ற தேவைப்பாடு இருக்கிறது என்ற உணர்வுடன் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றேன். நாம் இன்னும் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அந்த சூழலில் இருந்து நாங்கள் வெளியே வர வேண்டும்.

இன்னும் நாம் லயன் அறைகளிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இத்தகைய சூழல் மலையக மக்களின் சமூக வளர்ச்சிக்கு ஓர் ஆரோக்கியமானதாக இல்லை. இந்த நாட்டில் ஏனைய மக்கள் வாழும் நிலையைப் போன்று எமது மலையக சமூகமும் சம நிலையோடு வாழ வேண்டும். இவை என்னுடைய எதிர்பார்ப்பு ஆகும். இதற்காக உதவி செய்கின்ற காவேரிக் கலா மன்றம் கிளிநொச்சி ரொட்ரிக் கழகம் ஆகியவற்றின் எதிர்பார்ப்புமாகும்.

செயற்கை நுண்ணறிவு கற்கை கூடத்தின் மூலம் இன்று பாடசாலை மாணவர்கள் நிறைய பயனடைந்து வருகிறார்கள். ஆசிரியர்கள் வராத சந்தர்ப்பத்தில் கூட ஈ தக்சலா, டி.பி. எடிகேசன் குருகுலம் போன்ற கல்வி தொடர்பான நிறைய இணையத்தளம் இருக்கின்றன. பிள்ளைகளின் பாடங்கள் தொடர்பான நிறைய செயற்பாடுகளை உள்ளடக்கிய இணையளத்தளங்கள் உள்ளன. பாடசாலைக்கு ஆசிரியர் வராத சந்தர்ப்பத்தில் கூட மாணவர்களுக்கு அவருடைய அந்தப் பாடத்தை போதிக்கக் கூடியதாக இருக்கும். பாடசாலைக்கு ஆசிரியர் இல்லாவிட்டாலும் இன்று பிள்ளைகள் படித்துக் கொள்வதற்கான சூழல்கள் ஏற்பட்டுள்ளன. நவீன கல்வி முறையின் மூலம் பிள்ளைகள் கல்வி கற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர் என்று கூடக் கூறலாம்.

எந்நாளும் வகுப்பறைக்குச் சென்று கல்வி கற்பித்தலை மேற்கொள்ளும் போது கரும்பலகை. வெண்கட்டி. மார்க்கர் போன்றவற்றைக் கொண்டு கல்விச் செயற்பாடுகள் மேற்கொள்வதை விட இந்த மாதிரியான புதிய கல்வி நுட்பங்களைப் பாடசாலைக்கு கொண்டு வருவதன் மூலம் மாணவர்களுடைய கல்வியும் வளர்ச்சியடையும் அவர்களும் அதை விரும்பிப் படிப்பார்கள். ஒரு செயற்கை நுண்ணிறவு வகுப்பறை மட்டுமல்ல எல்லா வகுப்பறைகளிலும் செயற்கை நுண்ணிறவு வகுப்பறையாக மாற்றப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு எல்லாப் பிள்ளைகளும் படிக்க இயலாது. எதிர்காலத்தில் சகல வகுப்பறைகளிலும் செயற்கை நுண்ணறிவு வகுப்பறை வருமாக இருந்தால் அது மிகவும் வரவேற்கக் கூடியதாக இருக்கும்.

எமது பாடசாலையின் சுற்று வட்டாரம் மொத்தமாக இரண்டு ஏக்கர் 36 பேர்ச்சஸ் காணி இருக்கிறது. இந்தக் காணியில் இலங்கையிலுள்ள சகல விதமான பழ வகையிலான மரங்கள் நட்டியுள்ளோம். மா, ஜம்பு, நெல்லி, காமரங்காய், தோடை, சீதாப் பழம் இப்படி எல்லா வகையிலான பழ மரங்கள் எங்கள் பாடசாலைத் தோட்டத்தில் நட்டு இருக்கின்றோம்.

இப்பாடசாலைக்கு லண்டனில் இருந்து வருகை தந்த ஓய்வு பெற்ற நீதிபதி ஜெனிவர் சுமித் அவர்களது கையினாலும் ஒரு பலா மரத்தை நட்டியுள்ளோம். எமது பாடசாலையின் சுற்றாடல் மிகவும் அழகானது. பாடசாலை மாணவர்களைக் கவரும் வகையில் சுற்றாடல் அமைந்திருக்கிறது. அதில் மாணவர்களின் பயன்பாட்டுக்காக நிறைய பழ மரங்களும் இருக்கின்றன.

எமது பாடசாலையில் வகுப்பறைக் குறைபாடுகள் காணப்படுகின்றன. ஆரம்ப வகுப்பு முதல் உயர் தர வகுப்புக்களில் பிள்ளைகள் படிக்கின்றார்கள். தரம் 4 இல் இரு வகுப்புக்கள் உள்ளன. தரம் -5 இல் இரு வகுப்புக்கள் உள்ளன. தரம் 8 இல் இரு வகுப்புக்கள் உள்ளன. இப்படி வருகின்ற போது 2024 ஆம் ஆண்டில் சுமார் 5 வகுப்புக்கான வகுப்பறைப் பற்றாக் குறை காணப்படுகிறது. எமது பாடசாலையில் முன்னால் அமைந்துள்ள கட்டடம் 1936 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட கட்டடமாகும். அது தோட்டத்தின் கட்டடம். இன்னும் அப்படியே இருக்கிறது. அது இல்லாமல் அரசாங்கத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட பெரிய மூன்று கட்டட வளங்கள் இருக்கின்றன. விஞ்ஞான ஆய்வு கூடமும் அமைந்துள்ளன. எதிர்காலத்தில் பிள்ளைகள் நன்கு வசதியாக இருந்து கற்றுக் கொள்ள வேண்டுமாயின் அவர்களுக்கு வகுப்பறைக் கட்டட வசதிகள் வேண்டும்.

இருப்பினும், ஒர் ஒழுங்கான கணினி அறை இல்லை. அதனை மேற்கொள்வதற்கான உத்தியோகத்தர் இல்லை. பௌதீக வளங்களில் மிக முக்கியமாக வகுப்பறைக் கட்டடம் அவசியமாக இருக்கிறது. ஒரு வாசிகசாலை இல்லை. கணனி தகவல் தொழில் நுட்ப ஆய்வு கூடம் இல்லை. இவை போன்ற வளங்கள் கிடைக்கப் பெறுமாயின் மாணவர்களுடைய கல்வி செயற்பாடுகள் முன்னேற்றம் காணும்.

2022 ஆம் ஆண்டில் எமது பாடசாலையில் ஆசிரியர் வெற்றிடங்களாகக் காணப்பட்ட எல்லாப் பாடங்களுக்கும் வெற்றிடங்கள் பூர்த்தியாகியுள்ளன. உயர் தர வகுப்புக்கு மட்டும் இரு ஆசிரியர்கள் இல்லை. மற்றைய எல்லாப் பாடங்களுக்கும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் எமது பாடசாலை நல்ல பெறுபேறுகளை பெற்றுத் தரும். சிறந்த ஆசிரியர் இருக்கின்றபடியால் எதிர்வருகின்ற ஐந்து வருடத்தில் நல்லதொரு முன்னேற்றத்தை எமது பாடசாலையின் மூலம் நாங்கள் எதிர்பார்க்கலாம்.

காவேரிக் கலா மன்றத்தின் வணபிதா யோசுவா அடிகளார் சிறந்த சிந்தனையாளர். சிறந்த சமூகப் பற்றுமிக்கவர். எந்தவொரு செயற்பாட்டையும் நன்கு திட்டமிட்டு செய்யக் கூடிய ஒருவராகக் காணப்படுகின்றார். அவர் எதை கொடுத்தாலும் அதற்கு முன் குறித்த அந்த சமூகத்திற்கு என்ன கிடைக்கும். அதனால் அவர்கள் என்ன பலனைப் பெறுவார்கள். அவர் அதை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஒரு அடிப்படையிலான நீண்ட காலத் திட்டத்துடன் தான் ஈடுபடுவார். எமது பாடசாலைக்கு ஏற்கெனவே ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தான் அவர் அறிமுகமானார். அண்மையில்தான் எமது பாடசாலைக்கு அவர் விஜயம் செய்தார். நிறையச் செயற்பாடுகளை சிறந்த திட்டத்தோடு செய்பவர் என்று கூறலாம். அவருடைய உதவியினால் எமது பாடசாலையின் எதிர்காலம் இன்னும் சிறப்பாக அமையுமென்று எதிர்பார்க்கின்றேன்.

* கிளிநொச்சி நகர் ரொட்ரிக் கழகத்தின் தலைவி திருமதி வணிதா சிவநேசன் உரையாற்றும் போது;

பின்தங்கிய பிரதேசத்தில் வாழும் பிள்ளைகள் எதிர்காலத்தில் சிறந்த முறையில் முன்னேற்றத்தைக் கண்டு கொள்ள வேண்டுமாயின் சிறந்த பாடசாலைகள் அமைந்திருத்தல் வேண்டும். அந்த வகையில் இங்கு சிறந்து பாடசாலை அமைந்துள்ளமை மிக முக்கியமான விடயம். இப்பாடசாலையில் கல்வி கற்கின்ற ஒவ்வொரு பிள்ளைகளும் நற்பெயரையுடைய நல்ல பிள்ளைகளாக வளர வேண்டும். மலையக சமூகத்தில் சிறந்த பிரஜைகளாக இருத்தல் வேண்டும். பெற்றோர்கள் இன்னும் தோட்டத்தின் லயன் அறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்ற எண்ணத்தை மறந்து இவர்கள் கல்வியில் முன்னேறி சமூகத்திற்கு பெரும் பங்காற்ற வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

* கிளிநெச்சி நகர் ரொட்ரிக் கழகத்தின் சமூக சேவைப் பிரிவின் தவிசாளர் அதிபர் அ. பங்கையற் செல்வன் உரையாற்றும் போது;

இப்பாடசாலை மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவுக் கற்கை நெறி வகுப்பறை கிடைக்கப் பெற்றமை மிகவும் முக்கியமான அம்சமாகும். எதிர்காலத்தில் எமது பாடசாலைப் பிள்ளைகள் நிறையத் தேடிப் படிப்பதற்கான வசதி கடினமான நிலையிலுள்ள பிள்ளைகளுக்கு கிடைத்துள்ளமை மிகவும் பயனுள்ளதாக அமையப் போகின்றது. இதனைக் கொண்டு சகல மாணவர்களும் பயனடைய வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இக்பால் அலி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT