Sunday, April 28, 2024
Home » நசீர் அஹமட்டின் இடத்திற்கு மு.கா. எம்.பியாக அலி ஸாஹிர் மௌலானா

நசீர் அஹமட்டின் இடத்திற்கு மு.கா. எம்.பியாக அலி ஸாஹிர் மௌலானா

- தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதி விசேட வர்த்தமானி வெளியீடு

by Rizwan Segu Mohideen
October 11, 2023 7:04 pm 0 comment

– மகிழ்ச்சி வெளியிட்டு கருத்து வெளியிட்டுள்ள அலி ஸாஹிர் மெளலானா

முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதானதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு அலி ஸாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் அரசாங்கத்திற்கு ஆதரவாக கட்சி முடிவுக்கு மாற்றமாக செயற்பட்டமை தொடர்பில் அவரது கட்சி உறுப்புரிமையை நீக்க ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தீர்மானம் எடுத்திருந்தது.

இதற்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில்,  குறித்த முடிவு செல்லுபடியானது என உயர் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (06) தீர்ப்பளித்திருந்தது.

அதற்கமைய, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நசீர் அஹமட் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அக்கட்சியில் போட்டியிட்டு விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அடுத்த இடத்திலுள்ள அலி ஸாஹிர் மெளலானா, தற்போது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1956ஆம் ஆண்டு பிறந்த செயிட் அலி ஸாஹிர் மௌலானாவுக்கு தற்போது 67 வயதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இது தொடர்பில் தனது X சமூக வலைத்தள கணக்கில் பதிவிட்டுள்ள அலி ஸாஹிர் மெளலானா,

“கடந்த வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பின் மூலம் நான் இன்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.

இந்தத் தீர்ப்பு, அரசியல் கட்சிகளின் சித்தாந்தங்கள் மற்றும் கொள்கைகளை வலுப்படுத்துதல், நாகரீகமான, ஒழுங்கான ஜனநாயகத்தைப் பேணுவதற்கான கோட்பாடுகளை வலுப்படுத்துதல் மற்றும் மிக முக்கியமாக நமது அரசியலமைப்பின் முழுமையான தன்மையை உறுதிப்படுத்துதல் ஆகிய அரசியல் ஸ்தாபனத்திற்கு ஒரு முக்கியமான முன்னுதாரணத்தை அமைக்கிறது.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருப்பது ஒட்டுமொத்த தேசத்தால் வெறுப்படைந்திருக்கும் நேரத்தில், நானும் இப்போது அவர்களில் ஒருவனாக இருப்பேன்.

எவ்வாறாயினும், மட்டக்களப்பில் உள்ள எனது தொகுதி மக்களுக்கும், எனது சக குடிமக்களுக்கும், என்னால் இயன்றதைச் செய்ய நான் தயாராகவுள்ளதை, உண்மையாக உறுதியளிக்கிறேன்.”

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT