Monday, April 29, 2024
Home » மனிதநேய மாளிகையின் மூலைக் கல்லாவோம்

மனிதநேய மாளிகையின் மூலைக் கல்லாவோம்

by damith
October 10, 2023 6:06 am 0 comment

“கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டிடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!” என்ற வாசகம் பரிசுத்த வேதாகமத்தில் திருப்பாடல்18:22, மத்தேயு 21:42., மாற்கு 12:10, லூக்கா 30:17 என நான்கு நற்செய்திகளில் எடுத்துக் கூறப்படுகின்றது.

ஆண்டவர் இயேசு மண்ணைப் பற்றியோ மணலைப் பற்றியோ கூறாமல் இவைகளின் மூலமான கல்லைப் பற்றி இவ்வளவு அழுத்தமாகத் தெளிவாகக் கூறுகின்றார். ஏன், தனது நற்செய்தியை பரப்பும் பணியை வழிநடத்த தான் தேர்ந்தெடுத்த சீமோனுக்கும் பேதுரு அதாவது “பாறை – கல்” எனப் பொருள் படும்படி பெயரிடுகின்றார்.

காலத்தின் பயன்பாட்டில் ஒரு நேரத்தில் புறக்கணிக்கப்பட்டாலும் – தன்மை மாறாமல் தரம் குறையாமல் நிலைத்து நிற்கும்போது, அது முறையான பயன்பாட்டிற்குரிய மூலைக் கல்லாக வாழ்வு பெறுகின்றது.

காலங்களும் காட்சிகளும் மாறினாலும் எப்படிச் சீமோன் கிறிஸ்துவின் மதிப்பீடுகளுக்குள் கடந்து பயணித்தபோது, பாறையாக – கல்லாக அழுத்தமாக, உறுதியாக நின்றாரோ அவ்வாறே இன்று கிறிஸ்துவின் மதிப்பீடுகளை மதித்து தன் வாழ்வை அதன் வழிகளில் செயற்படுத்த விரும்புவோரின் மன உறுதி இந்தக் கல்லைப் போன்று இருக்க வேண்டும் என்பதே இதன் வெளிப்பாடு.

அப்போது அந்தக் கல் மனித நேயம் எனும் மாளிகைக்கு மூலைக் கல்லாக நிலைக்கும் என்பதும் உறுதியாகும். யார் விலக்கினார்கள்?.. யார் நமக்காக இருக்கிறார்கள்!.. என்பது முக்கியமல்ல.

நாம் நாமாக இருப்பது படைப்பின் தொடக்கத்தில் எப்படி இறை சாயலும் இறை ஆவியும் கொண்ட மனிதனாக வாழ்வு பெற்றோமோ அப்படியே இன்றும் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நம்மை அதே மனிதனாகப் பிரதிபலிக்கச் செய்யும்போது கிறிஸ்துவை தன் மரணத்திலும் பிரதிபலித்த பேதுரு பெற்ற மாண்பை நாமும் நிச்சயம் பெறுவோம்.

தமிழ் மரபின் வழக்கச் சொற்களில் ” எப்படி கல்லு மாதிரி நிற்கிறான்” என்ற ஒரு வாக்கியம் தனி மனிதனின் மன உறுதியை வெளிப்படுத்த இன்றும் பயன்படுத்தப் படுகிறது.

கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. என்ற இந்த வார்த்தை ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; எனத் தொடர்கின்றது. ஆண்டவர் இயேசுவால் என்ன நிகழும்? நிச்சயம் அழிவு நிகழாது. நிகழ்ந்தால் கல்வாரி அத்தமற்றதாகிவிடும்.

நாம் ஏன் கயவர்களாகக் கள்வர்களாகக் கல்வாரி வரை செல்ல வேண்டும்?.. கானாவூர் திருமணம்வரை இயேசுவின் நண்பர்களாகச் சென்று மரியாளின் கூற்றுக்கு இணங்க இயேசுவின் சொற்படி செயலாற்றலாம்! தாகம் தணிக்கும் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்” தண்ணீரை நிரப்பச் செய்து. (யோவான் 4:14) மனித உள்ளங்களுக்கு மகிழ்ச்சியை (திராட்சை இரசத்தைப்) பகிர்ந்திடுவோம்.

நற்செய்தியில் குறிப்பிடப்படும் தீய தோட்டத் தொழிலாளர்களாகவோ அல்லது கடந்த ஞாயிறு முதல் வாசகத்தில் வரும் நற்கனிகள் தராத கெட்ட திராட்சைக் கொடி போலவோ நமது வாழ்வு இருக்கலாகாது. புனித பவுல் அடிகளார் கூறுவது போல்:-

முடிவாக ஆனால் முழுமையாக உண்மையானவை எவையோ கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்தி; எதைப்பற்றியும் கவலைப்படாமல்- ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளோடு இணைந்து வாழ முனைப்புடன் இருக்க வேண்டும்.

(பிலிப்பியர் 4: 6,8)

அப்பொழுது அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நமது உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும். (பிலிப்பியர் 4:7)

வாருங்கள் மாறுவோம் பாறையாக, மனிதநேய மாளிகையின் மூலைக் கல்லாக பயணத்தில் இளைப்பாறுதல் தரும் சிலுவை எனும் சுமை தாங்கியாக… அப்போது அமைதியை அருளும் கடவுள் நம்மோடு இருப்பார்.

(பிலிப்பியர் 4:9)

சின்னப்பன் டி சில்வா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT