Tuesday, May 14, 2024
Home » இளம் பராயத்தினரின் செயற்பாடுகளை நெறிப்படுத்த வேண்டியதன் அவசியம்

இளம் பராயத்தினரின் செயற்பாடுகளை நெறிப்படுத்த வேண்டியதன் அவசியம்

by damith
October 10, 2023 6:00 am 0 comment

இளம்பராயத்தினர் மத்தியில் துடிப்பும் வேகமும் காணப்படுவது இயல்பானதாகும். எதிலும் முன்னணியில் நிற்க விரும்பும் இளவயதினர் தங்களது செயற்பாடுகளிலும் சுறுசுறுப்பாகவே இருப்பர். இது அவர்களது பருவத்திற்குரிய பண்பு. அதாவது ‘இளம் கன்று பயமறியாது’ என்ற முதுமொழிக்கேற்ப அவர்கள் செயற்படுவது இயல்பானது.

எந்தவொரு விடயத்திலும் முன்னணியில் திகழ்வதில் ஆர்வத்தை வெளிப்படுத்தும் இளம் பராயத்தினர், அதற்கான முயற்சிகளிலும் செயற்பாடுகளிலும் ஈடுபடுவர். அவற்றில் பொழுதுபோக்கு அம்சங்கள் பிரதான இடத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக இன்றைய நவீன பொழுதுபோக்கு அம்சமாக விளங்கும் ‘செல்பி’ மோகம் இளம்பருவத்தினர் மத்தியில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. அத்தோடு ‘இயர்போன்’ கருவிகளை இரு காதுகளுக்கும் பாவித்தபடி பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபடுவதும் உண்டு.

ஆனால் இந்த இரண்டு விடயங்களும் இளம்பராயத்தினர் உயிராபத்து அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்கத் துணைபுரியக் கூடினவாக உள்ளன. இது ​வேதனைக்குரிய நிலைமையாகும்.

குறிப்பாக செல்பி எடுப்பதிலும் டிக்டொக் போன்ற செயலிகளில் காணொலிகளைப் பதிவேற்றுவதிலும் இன்றைய இளம் பராயத்தினர் அதிக ஆர்வம், அக்கறை எடுத்துக் கொள்கின்றனர். அதன் காரணமாக உயிரிழப்புக்களையும் காயங்களையும் பலர் சந்தித்துள்ளனர்.

அதனால் செல்பி படங்களை எடுப்பதிலும் சமூக ஊடக செயலிகளைப் பாவிப்பதிலும் இளம் பருவத்தினர் காட்டும் ஆர்வமும் அக்கறையும் நெறிப்படுத்தப்பட வேண்டும். அதனைப் பக்குவப்படுத்த வேண்டிய தேவை பரவலாகக் காணப்படுகிறது.

மட்டக்களப்பு, நாவலடி வாவிப் பகுதியில் டிக்டொக் செய்வதற்காக நேற்றுமுன்தினம் 06 மாணவர்கள் படகில் சென்றுள்ளனர். அவர்கள் டிக்டொக் காணொளிகளை எடுத்துக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்த சமயம், அவர்கள் பயணித்த படகு திடீரென கவிழ்ந்தது. அதனால் இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதோடு, நான்கு மாணவர்களை பிரதேச இளைஞர்களும் மீனவர்களும் இணைந்து விரைந்து செயற்பட்டு மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிக்டொக் என்ற செயலி மீதான மோகத்தின் விளைவாகவே இவ்வனர்த்தத்திற்கு அவர்கள் முகம்கொடுத்தனர். இம்மாணவர்கள் முன்னவதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் செயற்பட்டிருந்தால் இந்த உயிராபத்து அனர்த்தத்தைப் பெரும்பாலும் தவிர்த்திருக்கலாம்.

இது போன்ற உயிராபத்து சம்பவங்கள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் அண்மைக் காலமாக அவ்வப்போது பதிவாகவே செய்கின்றன. ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில் தொங்கிய நிலையில் செல்பி எடுத்தவர்கள் கூட இவ்வாறான துரதிஷ்ட முடிவுக்கு முகம்கொடுத்துள்ளனர். சில வருடங்களுக்கு முன்னர் பேருவளை கடற்கரைக்கு சுற்றுலா சென்றிருந்த குடும்பமொன்றைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் அங்கு காணப்படும் சிறு மலைக்குன்று ஒன்றின் மீதேறி செல்பி எடுக்க முயன்ற போது தவறி விழுந்து கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு மலையகத்திலுள்ள நீர்வீழ்ச்சிகளுக்கு அருகில் செல்பி எடுக்க முயன்றவர்கள் கூட இவ்வாறான அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். அதேநேரம் இரண்டு காதுகளுக்கும் கையடக்க தொலைபேசியின் இயர்போன் கருவிகளைப் பாவித்த நிலையில் வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் நடந்து சென்ற இளம் யுவதியொருவர் ரயிலில் மோதுண்டு அண்மையில் உயிரிழந்தார். இவ்வாறான சம்பவங்கள் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி பிரதேசங்களில் அவ்வப்போது இடம்பெறுகின்றன. இவ்விதமான அனர்த்தங்களுக்கு பெரும்பாலும் இளம் பராயத்தினரே முகம்கொடுக்கின்றனர்.

இச்சம்பங்களை பொதுவாக எடுத்துநோக்கும் போது செல்பி மோகமும், ஆர்வமும் உயிராபத்துக்களைத் தேடித்தரக் கூடியவை என்பது தெளிவாகிறது. அதனால் சமூக ஊடகங்களின் செயலிகள் அறிமுகப்படுத்தும் புதுப்புது பயன்பாடுகளை பாவிப்பதில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

அதனால் தம் பிள்ளைகளின் செயற்பாடுகள், சமூக ஊடகங்கள் மீதான அவர்களது ஆர்வம் என்பன குறித்து பெற்றோரும் உறவினர்களும் விழிப்புடன் செயற்பட வேண்டும். பெற்றோரும் உறவினர்களும் இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக இளம் பராயத்தினரின் செயற்பாடுகள், அவர்கள் போய்வரும் இடங்கள் குறித்தும் கவனம் செலுத்துவது அவசியம். இளம் பிள்ளைகள் வீட்டுக்கு வெளியே செல்லும் போது பெற்றோரினதும் உறவினரதும் அனுமதி பெற்றுச்செல்லும் பழக்கம் அவர்களிடம் சிறுபராயம் முதல் வளர்க்கப்பட வேண்டும்.

அத்தோடு செல்பி மோகம், இரு காதுகளுக்கும் இயர்போன் கருவிகளை பாவித்தபடி வீதி, ரயில் பாதைகளில் பயணிப்பதால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் என்பன குறித்து அவர்களுக்கு அறிவூட்ட வேண்டும். அப்போது அவர்களது வேகம், துடிப்பை நெறிப்படுத்திக் கொள்ளலாம். அதன் மூலம் செல்பி மோகம் மற்றும் இயர்போன் கருவிகள் பாவனை மூலம் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்த்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT