Sunday, April 28, 2024
Home » நியூசிலாந்தின் வெற்றிக்கு மத்தியில் இங்கிலாந்தின் அபூர்வ சாதனை

நியூசிலாந்தின் வெற்றிக்கு மத்தியில் இங்கிலாந்தின் அபூர்வ சாதனை

by Rizwan Segu Mohideen
October 7, 2023 3:12 pm 0 comment

இந்தியாவில் ஆரம்பமான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அஹமதாபாத்தில் நேற்று முன்தினம் (05) நடைபெற்ற இந்தப் போட்டியில் இடம்பெற்ற சாதனைகள் வருமாறு,

  • இங்கிலாந்து நிர்ணயித்த 283 ஓட்ட வெற்றி இலக்கை நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களிலேயே எட்டியது. ஒருநாள் உலகக் கிண்ண வரலாற்றில் 250 க்கும் மேற்பட்ட வெற்றி இலக்கொன்றை வேகமாக எட்டிய சந்தர்ப்பமாக இது சாதனை படைத்தது. இதற்கு முன் 2015 இல் அயர்லாந்துக்கு எதிராக இந்தியா 260 ஓட்ட வெற்றி இலக்கை 36.5 ஓவர்களில் எட்டியது சாதனையாக இருந்தது.
  • நியூசிலாந்து அணி 82 பந்துகளை மிச்சம் வைத்தே வெற்றி இலக்கை எட்டியது. அதாவது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 250க்கும் மேற்பட்ட வெற்றி இலக்கொன்றை அடைந்து பெற்ற மிகப் பெரிய வெற்றியாகவும் இது இருந்தது. இதற்கு முன் இந்த ஆண்டு ஆரம்பத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 261 ஓட்ட வெற்றி இலக்கை தென்னாபிரிக்க அணி 123 பந்துகளை மிச்சம் வைத்து எட்டியதே சாதனையாக இருந்தது.
  • நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி20 உலகக் கிண்ணங்களின் ஆரம்பப் போட்டியில் தோற்பது மிக அரிதாகும். அதாவது அந்த அணி இதுவரை ஆடிய 21 உலகக் கிண்ண ஆரம்பப் போட்டிகளில் மூன்றில் மாத்திரமே தோற்றிருக்கிறது.
  • இங்கிலாந்து வெற்றி இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி சார்பில் டெவொன் கொன்வோய் மற்றும் ரச்சின் ரவிந்திரா இரண்டாவது விக்கெட்டுக்கு பிரிக்கப்படாது 273 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். இது உலகக் கிண்ணத்தில் நான்காவது அதிகூடிய இணைப்பாட்டமாகும். அதேபோன்று நியூசிலாந்து உலகக் கிண்ணத்தில் பெற்ற அதிகூடிய இணைப்பாட்டமும் இதுவாகும்.
  • இதன்போது கொன்வோய் ஆட்டமிழக்காது பெற்ற 152 ஓட்டங்களும் நியூசிலாந்து அணி வீரர் உலகக் கிண்ணத்தில் பெற்ற மூன்றாவது அதிகூடிய ஓட்டங்களாகும். 2015 இல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக மார்டின் கப்டில் ஆட்டமிழக்காது பெற்ற 237 ஓட்டங்கள் மற்றும் 1975 இல் கிழக்கு ஆபிரிக்காவுக்கு எதிராக கிளென் டியுனர் ஆட்டமிழக்காது பெற்ற 171 ஓட்டங்களும் இதன் முதலிரு இடங்களிலும் உள்ளன.
  • இந்த போட்டி நடைபெற்ற கடந்த வியாழனன்று ரவிந்திராவின் வயது 23 ஆண்டுகள் 321 நாட்கள் என்பதோடு இதன்மூலம் அவர் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் சதம் பெற்ற இளம் நியூசிலாந்து வீரராக சாதனை படைத்தார். முன்னதாக நெதன் அஸ்ட்லே 1996 ஆம் ஆண்டு அஹமதாபாத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 101 ஓட்டங்களை பெற்றபோது அவரது வயது 24 ஆண்டுகள் மற்றும் 152 நாட்களாக இருந்தது. அதேபோன்று விராட் கொஹ்லி மற்றும் அன்டி பிளவருக்கு அடுத்து உலகக் கிண்ணத்தில் ஆடிய முதல் போட்டியிலேயே சதம் பெற்றவராகவும் ரவிந்திரா இடம்பிடித்தார்.
  • அதேபோன்று உலகக் கிண்ணத்தில் ஒரே போட்டியில் சதம் பெற்ற முதல் நியூசிலாந்து ஜோடியாகவும் கொன்வோய் மற்றும் ரவிந்திரா பதிவாகினர். அதேபோன்று தனது முதல் உலகக் கிண்ண போட்டியில் ஆடும் இருவர் ஒரே போட்டியில் சதம்பெற்ற முதல் சந்தர்ப்பமாகவும் இது பதிவானது.
  • கொன்வோய்க்கு முன்னர் உலகக் கிண்ண கன்னிப் போட்டியில் ஆடிய மூவர் 150 க்கு மேல் ஓட்டங்களை பெற்றுள்ளனர். 1996இல் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிராக கரி கேஸ்டன் பெற்ற 188 ஓட்டங்களும் இந்த வரிசையில் முதலிடத்தில் இருப்பதோடு 2003 இல் நமிபியாவுக்கு எதிராக கிரேக் விஷார்ட் ஆட்டமிழக்காது பெற்ற 172 ஓட்டங்கள் மற்றும் 1975 இல் டியுனர் அட்டமிழக்காது பெற்ற 171 ஓட்டங்களும் காணப்படுகின்றன.
  • அஹமதாபாத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டி வரை 2015 இல் பங்களாதேஷுக்கு எதிராக கப்டில் 88 பந்துகளில் சதம் பெற்றதே உலகக் கிண்ணத்தில் நியூசிலாந்து வீரர் ஒருவரின் வேகமான சதமாக இருந்தது. எனினும் கொன்வோய் 83 பந்துகளில் சதம்பெற்று கப்டிலின் சாதனையை முறியடிக்க பின்னர் ரவிந்திரா 82 பந்துகளில் சதம் பெற்று அந்த சாதனையை முறியடித்தார்.
  • நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மிச்சல் சான்ட்னர் தனது 10 ஓவர்களுக்கும் ஒரு பெளண்டரியைக் கூட விட்டுக்கொடுக்கவில்லை. இதன்மூலம் 2018 இல் குல்திப் யாதவுக்கு பின்னர் இங்கிலாந்துக்கு எதிராக 10 ஓவர்களுக்கும் ஒரு பெளண்டரி கூட விட்டுக் கொடுக்காத பந்துவீச்சாளராக அவர் இடம்பிடித்தார்.
  • ஒருநாள் சர்வதேச போட்டிகளில் கொன்வோய் 1000 ஓட்டங்களை பூர்த்தி செய்ய 22 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டுள்ளது. இது நியூசிலாந்து வீரர் ஒருவரின் வேகமான 1000 ஓட்டங்களாகும். முன்னதாக டியுனர் 24 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டி சாதனை படைத்திருந்தார்.
  • இந்தப் போட்டியில் இங்கிலாந்தின் பதினொரு துடுப்பாட்ட வீரர்களும் இரட்டை இலக்க ஓட்டங்களை பெற்றிருந்தனர். இது ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் 11 துடுப்பாட்ட வீரர்களும் 10க்கும் மேற்பட்ட ஓட்டங்களை பெற்ற முதல் சந்தர்ப்பமாக பதிவானது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT