Monday, April 29, 2024
Home » இலங்கையில் இரத்த தானம் வழங்குவதில் மடவளை இளைஞர், யுவதிகள் முன்னிலையில்

இலங்கையில் இரத்த தானம் வழங்குவதில் மடவளை இளைஞர், யுவதிகள் முன்னிலையில்

by mahesh
October 4, 2023 3:04 pm 0 comment

இரத்த தானம் வழங்குதல் என்பது மிகவும் உன்னதமான சேவையாகவும் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளன என்று அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் முன்னாள் தேசியத் தலைவர் சஹீட் எம்.ரிஸ்மி தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தில் வை. எம். எம். ஏ. கிளைகள் முன்னெடுத்துச் செல்லும் இரத்த தானம் வழங்குதல் தொடர்பில் அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் முன்னாள் தேசியத் தலைவரும் மற்றும் தேசிய விவகாரங்களுக்கான தவிசாளருமான சஹீட் எம். ரிஸ்மி ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;

அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்ற தேசிய செயற்திட்டத்தின் கீழ் இரத்த தானம் வழங்குதல் நிகழ்வு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகிறது. இந்தச் செயற்றிட்டத்தின் கீழ் இரத்த தானம் வழங்குதல், மரம் நடுதல், பொதுச் சிரமதானம் செய்தல் போன்ற வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தற்போதைய தலைவர் இஹ்சான் ஏ. ஹமீத் தலைமையில் அதற்கான தவிசாளர் முன்னாள் அகில இலங்கை வை. எம். எம். ஏ இன் தலைவர் எம். என். எம் நபீலின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எம். என். எம். நபீல் மரம் நடுகை தொடர்பில் மிகுந்த அனுபவமிக்கவர்.

2018 ஆம் ஆண்டு அகில இலங்கை வை. எம்.எம். ஏ பேரவையில் நான் பொதுச் செயலாளராக இருக்கின்ற கால கட்டத்தில் தேசத்தை கட்டியெழுப்புவோம் என்ற செயற் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அப்பொழுது தலைவராக எம். என். எம். நபீல் கடமையாற்றினார். நான் தலைவரான பின்பு இந்தச் செயற் திட்டத்தில் சிறந்த முறையில் செயற்படும் கிளை இயக்கங்களுக்கு விசேட விருது வழங்குவதற்கான செயற் திட்டத்தையும் அறிமுகம் செய்து வைத்தேன். இந்த அறிமுகத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள எமது கிளைகளுக்கிடையே போட்டித் தன்மை உருவாக்கப்பட்டது. இதில் வெற்றி பெறும் கிளையினர்களுக்கு அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசிய பேராளர் மாநாட்டில் வைத்து விருது வழங்கப்படுகிறது.

கண்டி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இந்த இரத்த தானம் வழங்குவதற்கான முக்கிய காரணம்; பொதுவாக முஸ்லிம்கள் இரத்தம் வழங்குவதில்லை என்ற தப்பபிப்பிராயமும், பெண்கள் வழங்கவே மாட்டார்கள் என்ற ஒரு மனோ நிலையும் பெரும்பான்மையின சிங்கள சகோதரர்கள் மத்தியில் நிலவி வந்தன. 2006 இல் நான் மடவளை வை. எம். எம். ஏ. இல் அங்கத்தவராக இருக்கின்ற கால கட்டத்தில் இந்த இரத்த தானம் வழங்குதல் வேலைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது மடவளையில் 2006 ஜுலை மாதம் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அது என்னுடைய திருமண நாளாகும்.

2006 இல் மடவளையில் முதலாவதாக நடைபெற்ற இரத்த தான நிகழ்வில் இரத்தம் வழங்குவதற்காக மொத்தமாக 76 பேர் வருகை தந்தார்கள். அத்தினத்தில் உண்மையிலே குறைந்தளவில்தான் பெண்கள் வருகை தந்திருந்தார்கள். அன்று பெண்கள் ஆர்வம் குன்றிய நிலைமையில் இருந்து வந்துள்ளமையினை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அன்று முதல் இன்று வரையிலும் இந்த வை. எம். எம். ஏ. கிளையின் தலைவர்கள் தொடர்ச்சியாக செய்து வந்தார்கள்.

கொரோனா தொற்றுக் காலத்தில் மடவளையில் நடைபெறா விட்டாலும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இடம்பெற்ற இரத்த தானம் மற்றும் நுவரெலியா மாவட்ட செயலகத்திலும் இடம்பெற்றது. இந்த இரத்த தானம் நாட்டினுடைய அவசர தேவையைக் கருத்திற் கொண்டு வழங்கி வைக்கப்பட்டது. குறிப்பாக நாடளாவிய ரீதியில் இரத்தம் தட்டுப்பாடு நிலவி வருகிறது என்று இரத்த வங்கி விடுத்த வேண்டுகோளை அடுத்து இந்த இரத்த தான நிகழ்வு ஏற்படுத்தப்பட்டது.

அக்கால கட்டம் நாடு முற்றாக முழுவதும் மூடப்பட்டிருந்த காலம். அதுவும் யாருமே வெளியிறங்கி வர முடியாத கால கட்டம். அச்சத்தோடு வாழ்ந்த கால கட்டத்தில் எமது முஸ்லிம் இளைஞர் யுவதிகள் வெளியிறங்கி வந்து இரத்த தானம் வழங்கினார்கள். அஷ்ரப் ஞாபகார்த்த இரத்த வங்கியில் பெரு எண்ணிக்கையிலான இளைஞர்கள் வருகை தந்து இரத்த தானம் வழங்கியமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இறுதியாக மடவளையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி இவ் இரத்ததான நிகழ்வு மடவளை சன்சைன் ரிசப்சன் மண்டபத்தில் ஏ. எல். எம். ரிசாட் தலைமையில் நடைபெற்றது. அன்று தேசிய மீலாத் தின விசேட விடுமுறை தினமாகும். இத்தினத்தில் இளைஞர் யுவதிகளை வேறு காரியங்களில் ஈடுபடாமல் முழு இளைஞர் யுவதிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இரத்த தானம் செய்யும் வேலைத் திட்டம் விளம்பரப்படுத்தப்பட்டது.

அந்த வகையில் ஊரில் சகல அமைப்புக்களும் கலந்து கொண்டதுடன் அனைத்துக் கடைகளையும் மூடி, சகல இளைஞர் யுவதிகளும் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர். இந் நிகழ்வானது வரலாற்றில் என்றுமில்லாதளவுக்கு முஸ்லிம் இளைஞர்களும் யுவதிகளும் கலந்து கொண்டு இரத்தம் வழங்கினர். இது எமது ஊரைப் பொறுத்தவரையிலும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்துள்ளனர்.

கடந்த பத்து வருடங்களாக இதற்கு அனுசரணை வழங்கிக் கொண்டிருக்கின்ற ஞானம் நிறுவனத்தின் தொழிலதிபர் அவர்களை நானும் எமது ஊரின் தொழிலதிபர் நாஜிம் ஹாஜியார் அவர்களும் சேர்ந்து சந்தித்தோம். அவர்கள் அன்று முதல் இன்று வரை இந்த இரத்த தானம் நிகழ்வுக்கு உதவி வருகின்றார்கள். அவர்கள் இரத்த தானம் வழங்கும் ஒவ்வொரு நபர்களுக்கும் குடையொன்றை அன்பளிப்புச் செய்வதற்கு உதவி வருகின்றார்கள்.

அவை மட்டுமல்ல ஞானம் நிறுவனத்தில் கடமை புரியும் முக்கியஸ்தர்கள் கொழும்பில் இருந்து மடவளைக்கு வந்து இரத்த தானம் செய்து விட்டுச் செல்லுமளவுக்கு அவர்கள் பெரும் பங்களிப்பைச் செய்து வருகிறார்கள்.

ஞானம் நிறுவனத்தின் முகாமையாளர் பத்மா இங்கு வருகை தந்து இரத்தம் வழங்கி வைத்தார். இதில் முக்கிய விடயம் என்னவென்றால் ஞானம் நிறுவனத்தினர் அனுசரணைகளை வழங்குவது மட்டுமல்ல இங்கே வந்து இரத்த தானம் செய்து விட்டுச் செல்வது என்பது பெரும் உவப்பான செய்தி என்று நாம் சொல்ல வேண்டும்.

அதே போன்று 2006 இல் இருந்து வத்தேகம நகரிலுள்ள ‘தினேஸ் பேக்கஸ்’ என்ற பேக்கரி கடையின் உரிமையாளர் சிங்கள சகோதரர் சமரகோன் என்பவர் அன்று முதல் இன்று வரையிலும் தேவையான உணவுப் பொருட்கள் வழங்கி வருகின்றார். அவர் முதலில் 100 பனிஸ் தந்தவர், இன்று 500 அல்ல 1000 பனிஸ் உணவுப் பொருட்களை தருவதற்கு தயாராகவுள்ளார். அவர் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் வை. எம். எம். ஏ. இன் ரீ சேட்டைப் போட்டுக் கொண்டு மிகுந்த ஆர்வத்துடன் எங்களோடு இணைந்து இன்று வரையிலும் உதவி புரிந்து வருகிறார். மேலும் எமது மடவளை ஊரைச் செர்ந்த சகோதரர் ரிப்தி முளவ்பர் அவர்கள் யப்பான் நாட்டில் தொழில் புரிந்து வருகிறார். இதில் அவர் தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிறார் என்பது இங்கு முக்கியத்துவம் பெறுகின்றது.

ஊர் பள்ளிவாசல்கள், சகல சமூக சேவை அமைப்புக்கள், வத்துகாமம் பொலிஸ் நிலையம் மற்றும் அருகிலுள்ள விஹாரைகள் பிரதேச செயலாளர். பொது சுகாதார பரிசோதகர், அரச அதிகாரிகள் என பலர் இணைந்து இந்த வேலைத் திட்டத்திற்கு பங்களிப்புச் செய்து வருகின்றனர். இதன் மூலம் இக்கிராமத்து மக்களிடையே காணப்படும் ஒற்றுமை தெளிவாக புலப்படுத்தப்படுகிறது.

இதனைக் கண்டு தம் பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பினை விடுத்து கணிசமானளவு பொலிஸ் அதிகாரிகளை வரவழைத்து சேவையில் ஈடுபடச் செய்ததோடு அவர்களில் இளம் பொலிஸ் அதிகாரிகள் இரத்த தானம் வழங்குவதற்கும் உதவி புரிந்தார். அது மட்டுமல்ல அவர் இந்த இரத்த தானம் வழங்கும் நிகழ்வு நிறைவடையும் வரையிலும் இருந்து பங்களிப்புச் செய்து விட்டுச் சென்றமை முக்கிய அம்சமாகும்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு வருடங்கள் தனியார் மண்டபங்களிலேயே நடைபெற்றன. எதிர்காலத்தில் இரத்தம் வழங்குவதற்காக வரும் சனத்தொகையினை சமாளிக்கும் வகையில் ஒரு விளையாட்டு மைதானத்தில் ஹட் அடித்து பாரியளவில் செய்வதற்கு நாங்கள் உத்தேசித்துள்ளோம். விசேடமாக எப்பொழுதும் இரத்த வங்கி வைத்தியர்கள் மருத்துவ அதிகாரிகள் மாலை 4.00 மணி மட்டும்தான் வேலை செய்வார்கள். ஆனால் இம்முறை அவர்கள் தங்களுடைய கடமை நேரத்திற்கும் மேலதிகமாக பெரியதொரு சேவையாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதன் போது கண்டி, தெல்தெனிய, மாத்தளை ஆகிய மூன்று இரத்த வங்கிகளில் கடமைபுரியும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கண்டி மாவட்டத்தில் உள்ள எல்லா வை. எம். எம். ஏ. கிளைகளிலும் இரத்த தானம் வழங்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கல்ஹின்னை கிளை கடந்த 2022 ஆம் ஆண்டு புனர் நிர்மாணம் செய்யப்பட்டது. அதில் 70 பேர் வரை கலந்து கொண்டு இரத்தம் வழங்கி வைத்தனர். இம்முறை கடந்த செப்படம்பர் மாதம் 30 ஆம் திகதி கல்ஹின்னை ஆரம்ப பிரிவு பாடசாலையில் இடம்பெற்றது. இதில் 90 பேர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர். இங்கு இரத்த வங்கி 50 – 75 பேர் வரையிலும் எதிர்பார்த்தனர். ஆனால் இம்முறை 100 அண்மித்த நிலையில் மக்கள் கலந்து கொண்டு இரத்தம் வழங்கி வைத்துள்ளனர்.

இதில் விசேடமாக பூஜாப்பிட்டிய பிரதேச செயலாளர், விஹாராதிபதி ஊர் முக்கிய பிரமுர்கள் கலந்து கொண்டனர். இதற்கான அனுசரணையினை கட்டார் நாட்டில் தொழில் புரியும் இலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் நிதி உதவியினை வழங்கி வைத்தனர். மேலும் இந்த வேலைத் திட்டத்திற்கு சில இஸ்லாமிய மார்க்க உலமாக்கள் தனிப்பட்ட ரீதியில் நிதி உதவிகள் வழங்கியுள்ளனர். அது மட்டுமல்ல அவர்களில் ஒருவர் முதன் முதலில் இரத்த தானத்தை வழங்கி ஆரம்பித்து வைத்துள்ளார். இதன் மூலம் இன நல்லிணக்கத்தை வளர்ப்பதுடன் அரச நிர்வாகிகளுடன் தொடர்பினையும் ஏற்படுத்தக் கூடியதாக உள்ளன.

கண்டியில் இன நல்லிணக்கம் ஆரம்ப காலத்தில் எந்தளவு மிக நெருக்கமாக சேர்ந்து வாழ்ந்தார்களோ அந்தளவுக்கு இன நல்லிணக்கத்தை கொண்டு வருவதற்கான இது ஒரு முயற்சியாகவும் இந்த இரத்த தானம் வழங்குகின்ற நிகழ்வு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அவை மட்டுமல்ல கண்டி கட்டுகஸ்தோட்டையிலுள்ள கும்புக்கந்துரயில் இரத்த தானம் வழங்கப்பட்டது. இந்த இடத்தில் வை. எம். எம். ஏ. கிளையின் அங்குரார்ப்பணத்தோடு இரத்த தானம் நிகழ்வும் இடம்பெற்றது. இந்த நிகழ்வுகளிலும் ஊரிலுள்ள சகல நிறுவனங்களும் சமூகப் பெரியார்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

அதேவேளை, வை. எம். எம். ஏ. கண்டி மாவட்டப் பணிப்பாளர் இஹ்திசான் ஹுஸைன்தீன் மடவளை வை. எம். எம். ஏ. கிளையின் செயலாளர் ஹசன் சிராஸ் மற்றும் ஏனைய கிளைகளிலுள்ள தலைவர் உட்பட அங்கத்துவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் அவர்களுடைய பணி மென்மேலும் தொடர வேண்டும் எனவும் சஹீட் எம்.ரிஸ்மி மேலும் தெரிவித்தார்.

இக்பால் அலி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT