Saturday, April 27, 2024
Home » அமைச்சர் மனுஷ நாணயக்கார எழுதிய “The Right Eye” புலனாய்வு நூல் வெளியீடு ஜனாதிபதி தலைமையில்

அமைச்சர் மனுஷ நாணயக்கார எழுதிய “The Right Eye” புலனாய்வு நூல் வெளியீடு ஜனாதிபதி தலைமையில்

- உலகளாவிய தொழிலாளர் இயக்கத்துடன், இலங்கையில் தொழிலாளர் இயக்கமும் நவீனமயமாக்கப்பட வேண்டும்: ஜனாதிபதி

by Rizwan Segu Mohideen
September 25, 2023 5:19 pm 0 comment

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் எழுதப்பட்ட “The Right Eye” எனும் புலனாய்வு நூல் வெளியீட்டு விழா நேற்று (24) பிற்பகல் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

இந்நூலின் முதற்பிரதியை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து பிரதமர் உள்ளிட்ட பிரமுகர்களுக்கு புத்தகம் வழங்கி வைக்கப்பட்டது.

23 வருடங்களுக்கு முன்னர் ஊடகவியலாளராக மனுஷ நாணயக்கார ஆரம்பித்த தேடலின் பிரதிபலிப்பாக இந்தப் புத்தகம் வெளியாகியுள்ளது.

இலங்கையின் தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்றை வலதுசாரி பகுப்பாய்வுடன் ஒரு புத்தகத்தில் படிக்க இதன் ஊடாக வாய்ப்புக் கிடைக்கிறது. மேலும் முழு தொழிலாளர் இயக்கம் மற்றும் எதிர்கால தொழிலாளர் சந்தை பற்றிய தெளிவான பார்வையையும் புத்தகம் முன்வைக்கிறது.

தொழிற்சங்கம் தொடர்பில் இதுவரையில் எழுதப்பட்டுள்ள நூல்கள் மற்றும் பிரசுரிப்புக்கள் என்பவற்றை ஆராய்ந்து தொழிலாளர் வரலாற்றில் மறைக்கப்பட்ட விடயங்களை இதனூடாக எடுத்துக்காட்ட முயன்றுள்ளமை தெளிவாகிறது.

இந்த நூலின் ஆசிரியர் தலையங்கம் மற்றும் வருமானத்தினை சில சிரம்படிய பிரதேசத்தில் வசிக்கும் இலங்கை கெபர் சமூக மக்களுக்காகவும் தொழிலாளர்களின் பிள்ளைகளது நலன்புரிதல் செயற்பாடுகளுக்காகவும் ஒதுக்கியுள்ளமை சிறப்பம்சமாகும்.

உலக தொழில் அமைப்புக்களுக்கு நிகராக இலங்கையின் தொழில் அமைப்புக்களும் நவீனமயமாக வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

தொழிற்சாலைகள் அமைக்கப்பட்ட பின்பே தொழிற்சங்கங்கள் அனைத்தும் உருவாகின. தொழில்மயமாக்கலுக்கு சென்றிருக்காவிட்டால் தொழிற்சங்கங்களும் இருந்திருக்காது. அதனால் தொழிற்சாலைகளிலேயே தொழில் யுகம் ஆரம்பமானது. குறிப்பாக கால் மாக்ஸின் தாஸ் கெபிடல் நூலின் பின்பே தொழிற்சங்கங்கள் 2nd International & 3rd International என்று இரண்டாக பிளவுபட்டன.

இருப்பினும் இலங்கையின் தொழிற்சங்கங்கள் தொழிற்சாலைகளில் ஆரம்பிக்கவில்லை. எமது நாட்டில் தொழிற்சாலைகள் இருக்கவும் இல்லை. தொழிற்சாலையாளர்களின் போராட்டம் தொடர்பில் பார்க்கும் போது, அரச ஊழியர்கள் வாயிலாகவே எமது தொழிற்சங்கங்கள் உருவாகியுள்ளன. தொழிற்சாலைகள் இருந்திருந்தால் புதிய துறைமுகங்கள், கனிய எண்ணெய் நிறுவனம், பேருந்து நிறுவனங்கள் என அனைத்தும் அரச மயமாக்கப்பட்டதால் மேற்படிச் சங்கங்கள் அரசாங்கத்திற்குள்ளேயே தோன்றின.

இன்றளவில் தொழிலாளர்கள், தொழில் வகுப்பிலிருந்து மத்திய தரத்திற்கு வளர்ந்துள்ளனர். பயிற்சி பெற்ற புதியவர்களையே தொழிலாளர்கள் என்று கூற முடியும். தொழிலாளர்கள் என்ற வகையில் அவர்களின் தேவைகள் வேறுபட்டவையாக காணப்படுகிறன.

இன்று மேற்கில் பெருமளவானோர் 25-30% வேலைத்தளம் ஒன்று இல்லாமல் செயற்படுகின்றனர். அவர்களை எவ்வாறு ஒன்றுதிரட்ட முடியும். வீட்டிலிருந்து அவர்களினால் பணிகளை செய்ய முடிகிறது. விருப்பமான நேரத்தில் வேலைகளை ஆரம்பிக்கவும் முடியும். இவ்வாறு புதிய முறையில் இடம்பெறுகின்றன. அது தொடர்பிலான விவரங்களும் அமைச்சர் மனுஷவின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனுடன் நாம் எவ்வாறு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று அவர் சிந்திக்க வேண்டியுள்ளது. தொழிற்சங்கங்களை நிகழ்நிலை முறைமைக்கு மாற்றுவதாக அல்லது புதிய தொழிற்சங்களை தோற்றுவிப்பதாக என்று சிந்திக்க வேண்டியுள்ளது. கடந்த காலங்களில் மக்களை ஒன்றுதிரட்டவே தொழிற்சங்கங்கள் உருவாக்கப்பட்டன. இருப்பினும் இன்று அந்த நிலைமையை காண முடிவதில்லை. அதனால் மாற்றத்துடன் தொழில்சார் அமைப்புக்களை எவ்வாறு ஒன்றுதிரட்ட முடியும் என்பது தொடர்பில் புதிதாக சிந்திக்க வேண்டியுள்ளது. அந்த பொறுப்பை அமைச்சர் மனுச நாணயக்காரவிடத்தில் ஒப்படைத்துள்ளேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தொழில் மற்றும் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார,

நான் அரசியலுக்கு பிரவேசித்த போது எமது மரியாதைக்கு பாத்திரமானவரும் எதிர்காலம் பற்றிய புரிதல் கொண்ட தலைவருமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருந்தார். அரசியலுக்கு மேலதிகமாக நாம் பல்வேறு பற்றிய தெரிவுகளை பெற்றுக்கொள்வதற்கான வழிகாட்டலை அவரே வழங்கியிருந்தார். ரணில் விக்ரமசிங்க என்னும் எதிர்காலம் பற்றிய தெரிவு கொண்ட தலைவர் நாட்டின் நலனுக்காக எடுத்த தீ்ர்மானங்கள் அனைத்தையும் மக்கள் தோற்கடித்தனர். அவ்வாறு தோற்கடிக்கப்பட்ட அனைத்து தருணங்களிலும் ஒரு வருடத்தை கடக்கும் முன்னதாக நாடு பாரதூரமான நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்தது.

எதிர்காலம் பற்றிய அறிவை கொண்டவர் ஜனாதிபதி, அவரை போல நாட்டின் எதிர்காலம் பற்றிய தெரிவு எவரிடத்திலும் இல்லை. தேர்தலில் மக்கள் எவ்வகையான தீர்வை தந்தாலும், நாடும் மக்களும் பாதாளத்துக்குள் விழுந்து கிடந்த நேரத்தில், துணிச்சலாக சவாலை ஏற்றுக்கொள்ள முன்வந்தவர். அந்த சவால்களையும் நாம் இன்று வெற்றிக்கொண்டுள்ள நிலையிலேயே நூலின் முதற் பிரதியை ஜனாதிபதிக்கு கையளிக்கிறேன்.

பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான, நிமல் சிறிபால டி சில்வா, விஜேதாச ராஜபக்‌ஷ, மஹிந்த அமரவீர, டிரான் அலஸ், இராஜாங்க அமைச்சர்களான ஜகத் புஷ்பகுமார, லசந்த அழகியவன்ன, அருந்திக பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜீர அபேவர்தன, வடிவேல் சுரேஷ், ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் சமன் ரத்னப்பிரிய, ஜனாதிபதியின் பாராளுமன்ற அலுவல்கள் ஆலோசகர் பேராசிரியர் ஆசு மாரசிங்க, ஜனாதிபதியின் மக்கள் அலுவல்கள் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் ஆகியோரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், தூதுவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள், வெளிநாட்டு அமைப்புக்களின் பிரதிநிதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள், ஓய்வுபெற்ற அரசாங்க அதிகாரிகள், வர்த்தகர்கள், தொழிற்சங்கப் பிரிதிநிதிகள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT