Home » உலகக் கிண்ணத்தில் இலங்கை அணித் தலைவராக தசுன் நீடிப்பு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணித் தலைவராக தசுன் நீடிப்பு

by Rizwan Segu Mohideen
September 21, 2023 6:19 am 0 comment

எதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணித் தலைவராக தசுன் ஷானக்க நீடிப்பார் என்று இலங்கை கிரிக்கெட் சபையின் மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

அண்மையில் நடந்த ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி இந்தியாவிடம் 10 விக்கெட்டுகளால் மோசமாக தோல்வியை சந்தித்ததோடு தசுன் ஷானக்க துடுப்பாட்டத்தில் தொடர்ந்து சோபிக்கத் தவறி வரும் நிலையிலேயே அவரது தலைமை பற்றி பரவலாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

எனினும் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தசுன் ஷானக்கவை தொடர்ந்து தலைமை பதவியில் வைத்திருக்க தீர்மானிக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை வட்டாரம் நேற்று (20) தெரிவித்தது.

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணித் தேர்வு தொடர்பில் இறுதி முடிவை எடுப்பதற்கு பிரமோத்ய விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவினர் நேற்று இலங்கை கிரிக்கெட் அலுவலகத்தில் கூடிய நிலையிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தேர்வாளர்கள் முக்கிய முடிவுகளை எடுத்திருப்பதாக தெரியவருகிறது. இதில் மீண்டும் ஒருமுறை காயத்திற்கு உள்ளாகி இருக்கும் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவை உலகக் கிண்ண குழாத்தில் இணைப்பது தொடர்பில் தேர்வுக் குழுவினர் இறுதி முடிவை எடுப்பதற்கு காத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஏற்கனவே உபாதைக்கு உள்ளாகி இருக்கும் ஹசரங்கவுக்கும் மீண்டும் காயம் ஏற்பட்டிருப்பதாக தெரியவருகிறது. உபாதை காரணமாக ஹசரங்கவுடன் துஷ்மன்த சமீர, டில்ஷான் மதுஷங்க மற்றும் லஹிரு குமார ஆகியோர் ஆசிய கிண்ண தொடரில் பங்கேற்கவில்லை என்பதோடு ஆசிய கிண்ண போட்டியின்போதும் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷனவும் உபாதைக்கு உள்ளானார். எனினும் இவர்கள் ஒக்டோபர் 5 ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ணப் போட்டிக்கு உடல் தகுதி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பத்து அணிகள் பங்கேற்கும் இம்முறை உலகக் கிண்ணத்தில் பெரும்பாலான அணிகள் போட்டியில் ஆடும் குழாத்தை அறிவித்திருப்பதோடு இலங்கையுடன் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மாத்திரமே இன்னும் தமது அணியை அறிவிக்காமல் உள்ளன.

இந்நிலையில் உலகக் கிண்ணத்திற்கான குழாத்தை அறிவிப்பது அல்லது அணிகளில் மாற்றங்கள் செய்வதற்கு எதிர்வரும் செப்டெம்பர் 28 ஆம் திகதி வரையே சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸில் கெடு விதித்துள்ளது.

உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்காக இலங்கை அணி எதிர்வரும் 26 ஆம் திகதி இந்தியா நோக்கி புறப்படவுள்ள நிலையில் அதற்கு முன்னர் எந்த நேரத்திலும் உலகக் கிண்ணத்திற்கான உத்தியோகபூர் அணி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக இலங்கை அணி எதிர்வரும் செப்டெம்பர் 29 ஆம் திகதி பங்களாதேஷுடனும் ஒக்டோபர் 3 ஆம் திகதி பங்களாதேஷுடனும் பயிற்சி போட்டிகளில் ஆடவுள்ளது. இந்த இரு போட்டிகளும் குவஹாத்தில் நடைபெறும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT